Election bannerElection banner
Published:Updated:

`ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா!’ - என்ன நடக்கிறது புதுச்சேரி அரசியலில்?

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

``ஆளுநர் கிரண் பேடியும், பிரதமர் மோடியும் ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள். அதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவையைக் கலைத்து மக்களிடம் சென்று தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையை தொடங்கப்போகிறோம்” –அமைச்சர் கந்தசாமி.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களைக்கொண்டது புதுச்சேரி யூனியன் பிரதேசம். புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டிவரும் பா.ஜ.க., அதற்காக எதிர் முகாமில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு வலைவிரித்தது. அதன்படி தனக்கு முதல்வர் பதவி தரவில்லை என்ற அதிருப்தியில் இருந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை இழுந்தது பா.ஜ.க. ஆனால், அவர் போனஸாக உசுடு தொகுதியின் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானையும் அழைத்துச் சென்றார். இருவரும் தங்ளது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து பா.ஜ.க-வில் இணைந்தனர்.

ஜான்குமார் எம்.எல்.ஏ ராஜினாமா
ஜான்குமார் எம்.எல்.ஏ ராஜினாமா

அதேபோல ஆந்திர மாநிலத்தை ஒட்டியிருக்கும் ஏனாம் பிராந்தியத்தின் எம்.எல்.ஏ-வான மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவிவகித்தவர். கடந்த 1996-ம் ஆண்டு ஏனாமில் எம்.எல்.ஏ-வாக தேர்வாகியிருக்கிறார். ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றினார். 25 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியதற்கான வெள்ளிவிழா நிகழ்வில் பேசிய அவர், மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஏனாமில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையில் தொடர்ந்து மோதலும் நிலவிவந்தது.

தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், தான் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தினர் யாரும்கூட வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் கூறியிருந்தார். அதன்படி நேற்று மாலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார் மல்லாடி கிருஷ்ணாராவ். இந்தநிலையில் இன்று காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஜான்குமாரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த இருவரது ராஜினாமாக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து கூறிவிட்டதால், காங்கிரஸ் அரசு அதிகாரபூர்வமாக மெஜாரிட்டியை இழந்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பத்திரிகையாளர் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பத்திரிகையாளர் சந்திப்பு

30 தொகுதிகளைக்கொண்ட சட்டப்பேரவையில் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து மொத்தம் 33 எம்.எல்ஏ-க்கள் இருப்பார்கள். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 15 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, மூன்று தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ-வின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த ஆண்டு கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ தனவேலு தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதேபோல பா.ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான சங்கரும் சில நால்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனாலும் உடனே பா.ஜ.க-வைச் சேர்ந்த தங்க விக்ரமனை மத்திய அரசு எம்.எல்.ஏ-வாக நியமித்ததால் மீண்டும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

அதையடுத்து அமைச்சராக இருந்த நமச்சிவாயம், எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து பா.ஜ.க-வில் இணைந்ததால், எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 30-ஆகக் குறைந்தது. அதேபோல நேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், இன்று ஜான்குமாரும் ராஜினாமா செய்திருப்பதால் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 28-ஆகக் குறைந்திருக்கிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

சபையிலுள்ள எம்.எல்.ஏ-க்களின் அடிப்படையில் 15 எம்.எல்.ஏ-க்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும். ஆளும்கட்சியான காங்கிரஸில் 10 பேரும், கூட்டணிக் கட்சியான தி.மு.க-வில் மூன்று பேரும், சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவரின் ஆதரவும் என மொத்தம் 14 பேர் ஆதரவு இருக்கிறது. அதேசமயம் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ஏழு பேரும், அ.தி.மு.க-வில் நான்கு பேரும், பா.ஜ.க-வில் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்கள் என 14 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். தற்போது இரு தரப்பும் சம பலத்தில் இருப்பதால், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து சட்டப்பேரவைக்குக் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் வந்த எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, ``ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. அவர்களாகவே ஆட்சியிலிருந்து விலகவில்லையென்றால் நாங்கள் ஆளுநரிடம் மனு கொடுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் ``ஆளுநர் கிரண் பேடியும், பிரதமர் மோடியும் ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார்கள். அதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவையைக் கலைத்து மக்களிடம் சென்று தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையைத் தொடங்கப்போகிறோம்” என்று பேசி சமூகநலத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.

விதிகளை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ?! -கிரிமினல் வழக்கு பதிவுசெய்த புதுச்சேரி போலீஸ்

தற்போது முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஆளும் காங்கிரஸ் அரசு தாங்களாக முன்வந்து பதவி விலகினாலும், இரு தரப்புமே சம பலத்துடன் இருப்பதால் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அதனால் புதுச்சேரியில் ஆளுநர் ஆட்சி வரலாம் என்று கூறுகின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு