Published:Updated:

``எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி..!" - இந்த வார்த்தைகளை ஸ்டாலின் உதிர்த்தது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உள்ளாட்சித் தேர்தல் உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சித் தேர்தல் உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் ( ட்விட்டர் )

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நமது மனசாட்சிதான் எதிர்க்கட்சி” எனப் பேசியிருக்கிறார். அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க என பல கட்சிகள் இருக்கும் போது ஸ்டாலின் இந்த வார்த்தைகளைச் சொன்னதன் காரணம் என்ன?

தமிழ்நாட்டில் விடுப்பட்டிருந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க கட்சிகளைவிட மிகக் குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் வெற்றி குறித்து, “எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்று ஒருபோதும் இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை உங்களில் ஒருவனான எனக்குக் கிடையாது. நம்மை ஆளாக்கிய உயிர் நிகர் தலைவர் கருணாநிதி ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அரிய அரசியல் பயிற்சியை வழங்கியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்க்கட்சியின் தலைவர் என்ற பொறுப்பை உங்களின் ஒருவனான நான் ஏற்கெனவே வகித்திருக்கிறேன்.

மக்கள் பணியில் ஈடுபடும்போது நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும். தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகள், வலியுறுத்தல்கள், ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், சமூக வலைத்தளங்களில் சாதாரண மனிதர்களின் தெளிவான பார்வைகள், பதிவுகள் ஆகியவையும் கூட எதிர்க்கட்சியின் பணிதான். அத்தகைய கருத்துகளை மனதில் கொண்டு, மக்கள் பணி எனும் மகேசன் பணியை நமது அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்” எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கடிதம்
மு.க.ஸ்டாலின் கடிதம்
ஃபேஸ்புக்

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றிதான் மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சியே இல்லை... மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சி” எனப் பேச வைத்திருக்கிறது என்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசுவதற்கான காரணங்கள் என்ன?

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த அதிமுக! - காரணம் என்ன?!

“9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. கைப்பற்றிய இடங்களை பார்த்தால் கிட்டத்தட்ட, 90 சதவிகிதத்துக்கும் மேல் வாங்கியிருக்கிறது. 2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடங்களைப் பிடித்திருந்தது. இப்போது பெற்ற வெற்றியையும் கணக்கில் கொண்டால் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் தி.மு.க-வின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் 2019-ல் வெற்றி பெற்ற பலரும் தி.மு.க-வில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். தமிழாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையில் இருக்கும் தி.மு.க-வுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலும் மிகப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. இந்த வெற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். எனவே, விரைவில் அந்தத் தேர்தலையும் நடத்தி தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக தி.மு.க-வின் கை மட்டுமே ஓங்கியிருக்கும்படி பார்த்துக் கொள்வார். பா.ஜ.க இந்தத் தேர்தலில் 0.59 சதவிகிதமே பெற்றிருக்கிறது. அ.தி.மு.க., பா.ம.க ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கும் காங்கிரஸ், வி.சி.க-வும் தி.மு.க-வின் கூட்டணி. நா.த.க., ம.நீ.ம கட்சிகள் எல்லாம் இந்தத் தேர்தலில் ஆட்டத்திலேயே இல்லை என்ற அளவு முடிவுகள் வந்திருக்கின்றன.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அது தந்த நம்பிக்கையும்தான் எதிர்க்கட்சிகளே இல்லை. மனசாட்சிதான் நமக்கு எதிர்க்கட்சி எனப் பேச வைத்திருக்கிறது. மு.க.ஸ்டாலினின் பிம்பத்துக்குக் கிடைத்த வெற்றி என்றாலும் இதைத் தக்க வைத்துக் கொள்வதும் அவரது செயல்பாட்டில்தான் இருக்கிறது. அப்போதுதான் நகர்ப்புறத் தேர்தலிலும் தி.மு.க இதே வெற்றியைப் பதிவு செய்ய முடியும்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு