உக்ரைன்மீது ரஷ்யா தொடுத்துவரும் போர், ஓராண்டுக்கும் மேலாக இன்னும் நீடித்துவருகிறது. இந்தப் போருக்கியிடையே, ரஷ்ய அதிபர் புதினைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக, ரஷ்யா தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்தன.

அதேபோல புதினின் உடல்நிலை குறித்தும் பல்வேறு பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், புதினைக் கொல்ல ஆளில்லா விமானம் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா இன்று குற்றம்சாட்டியிருக்கிறது.
முன்னதாக, ரஷ்ய அதிபரின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்திருக்கும் கிரெம்ளினில் (Kremlin) புகைமூட்டமாக இருக்கும் வீடியோ ஒன்று ரஷ்ய ஊடகங்களில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது கிரெம்ளின், ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், ``கிரெம்ளினை இலக்காகக்கொண்ட இரண்டு ஆளில்லா விமானங்களை ராணுவமும், ரேடார் போர் அமைப்பும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துச் செயலிழக்கவைத்தன. இந்த நடவடிக்கையைத் திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயலாகவும், அதிபரைக் கொல்வதற்கான முயற்சியாகவும் நாங்கள் கருதுகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேசமயம் அதிபர் புதின் கிரெம்ளினில் இல்லையென்றும் கூறப்படுகிறது.
ஆனால், உக்ரைன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் Mikhaylo Podolyak, ``கிரெம்ளின்மீதான தாக்குதல்களுக்கும், உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.