புதின் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ரஷ்யாவில், உக்ரைன் மீதான போர் குறித்து ரஷ்யாவுக்கு எதிராக பொதுவெளியில், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்போரை அந்த நாடு சிறைத் தண்டனைக்குள்ளாக்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது, உக்ரைனில் நடக்கும் போரை விமர்சித்ததற்காக, ரஷ்யாவின் முன்னாள் பத்திரிகையாளரும், எதிர்க்கட்சி ஆர்வலருமான விளாடிமிர் காரா-முர்சாவுக்கு (Vladimir Kara-Murz) தேசத்துரோகம் எனக் கூறி, 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, ரஷ்யாவில் கொலைகாரர்களின் ஆட்சி நடந்துவருவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதோடு கடந்த வாரம் நீதிமன்றத்தில் காரா-முர்சா தன் கடைசி உரையின்போது, ``என்னுடைய அரசியல் கருத்துகளுக்காக நான் சிறையில் இருக்கிறேன். நம் நாட்டில் இருள் விலகும் நாள் வரும் என்பதை நான் அறிவேன்" என்று கூறினார்.
இந்த நிலையில், நீதிமன்றம் இன்று அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை உத்தரவிட்டபோது, ``ரஷ்யா சுதந்திரமாக இருக்கும்" எனும் எதிர்க்கட்சியின் பிரபல முழக்கத்தை காரா-முர்சா கூறினார். அதேசமயம், காரா-முர்சாவின் வழக்கறிஞர்கள் தரப்பு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

தண்டனைக்குப் பிறகு நீதிமன்றத்துக்கு வெளியே பேசிய காரா-முர்சாவின் வழக்கறிஞர் மரியா ஈஸ்மாண்ட் (Maria Eismont), ``25 வருடங்கள் சிறைத் தண்டனை என்பதைக் கேட்டபோது, கூடவே தன்னுடைய சுயமரியாதையும் உயர்ந்ததாகக் காரா-முர்சா கூறினார்" என்று தெரிவித்தார். அதேபோல் பிரிட்டிஷ் தூதர் டெபோரா ப்ரோனெர்ட், காரா-முர்சா உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.