உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஓராண்டுக்கும் மேலாக ஓயாத போராகத் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினைக் குறிவைத்து கிரெம்ளின் மாளிகையில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தத் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும், யார் உயிருக்கும் பொருளுக்கும் பாதிப்பில்லை என்றும் தெரிவித்திருக்கும் ரஷ்யா, இந்தச் சதி தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் எனப் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறது.

புதினைக் குறிவைத்து டிரோன் தாக்குதல்:
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளின் மாளிகையில்தான் அதிபர் புதினின் அதிகாரபூர்வ இல்லம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் இரண்டு டிரோன்கள் அதிபர் புதின் வசிக்கும் கிரெம்ளின் மாளிகையை நோக்கி பறந்துவரவும், அந்த இரண்டு டிரோன்களையும் ரஷ்யாவின் மின்னணு ரேடார்கள் சுட்டு வீழ்த்தியிருக்கின்றன. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் பாகங்கள் மட்டும் எரிந்தநிலையில், கிரெம்ளின் மாளிகையின் வளாகத்துக்குள் நொறுங்கி விழுந்திருக்கின்றன. இந்தக் காட்சிகள்தான் தற்போது ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகித் தீவிரமாகப் பரவிவருகின்றன. இந்த நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னணியில் உக்ரைன்தான் இருக்கிறது எனவும் ரஷ்யா தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கும் எனவும் கிரெம்ளின் மாளிகை தெரிவித்திருக்கிறது.
அதிபரைக் கொல்ல சதித்திட்டம்:
இந்தத் தாக்குதல் குறித்து கிரெம்ளின் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``நேற்றிரவு இரண்டு ஆளில்லா வான்வழி (டிரோன்) சாதனங்கள் கிரெம்ளினை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முயன்றன. எங்கள் ராணுவம் அதை மின்னணு ரேடார் போர் அமைப்புகளைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் சுட்டுவீழ்த்தியது. துரித நடவடிக்கைகளின் விளைவாக டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலை நாங்கள் திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாகக் கருதுகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
நேரம் வரும்போது பதிலடி:
மேலும் அந்த அறிக்கையில், ``இந்தத் திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை, மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் ரஷ்யாவின் வெற்றி தின விழாவைச் சீர்குலைக்கும் விதமாகவும், அந்த நாளில் நடைபெறும் அணிவகுப்பில் வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், அணிவகுப்புக்கு முன்னதாக அதிபரைப் படுகொலைசெய்யும் முயற்சியாகவும் நாங்கள் கருதுகிறோம்!
இந்தத் தாக்குதலுக்கு பதிலடிகொடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கு எப்போது என நேரம் வரும்போது பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!" என உக்ரைனை அச்சுறுத்தும் அறிவிப்பை ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டிருக்கிறது.
ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், `டிரோன் தாக்குதல் நடந்த நேரத்தில் புதின் கிரெம்ளின் மாளிகையில் இல்லை என்றும், மாஸ்கோவின் புறநகரில் இருக்கும் நோவோ ஓகாரியோவோ இல்லத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தலைநகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக மாஸ்கோ நகர மேயர் செர்கே சோபியானின், நகரத்தின் வான்வெளியில் டிரோன்கள் பறப்பதற்குத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே டிரோன்கள் பறக்கவிடமுடியும் எனவும் அறிவித்திருக்கிறார். மாஸ்கோ மட்டுமல்லாமல் மே 9-ல் வெற்றிவிழா நடைபெறும் ரஷ்ய நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

உக்ரைன் மறுப்பு:
டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டியிருக்கும் நிலையில், உக்ரைன் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் உக்ரைன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் மிகாய்லோ போடோல்யாக், ``கிரெம்ளின் மாளிகைமீது நடத்தப்பட்ட ஆளில்லா டிரோன் தாக்குதலுக்கும், உக்ரைன் நாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; கிரெம்ளின் மாளிகையைத் தாக்குவதன் மூலம் ராணுவ பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது என்பது உக்ரைனுக்குத் தெரியும்" எனக் கூறியிருக்கிறார்.