ரஷ்யா - உக்ரைன் போர் ஒரு வருடத்தைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யப் புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அலினா கபேவா (39) என்ற பெண்ணுடன் வசித்துவருகிறார். அந்தப் பெண் ஜிம்னாஸ்ட்டிக் மற்றும் ஒலிம்பிக் ரிதமிக் சாம்பியன். நீண்டகாலமாகவே அவருக்கும் புதினுக்குமிடையே காதல் இருப்பதாகச் செய்திகளில் பேசப்பட்டுவந்தது. இந்த நிலையில், மாஸ்கோவிலுள்ள வால்டாய் ஏரி அருகில், புதின் ஓர் இடத்தை வாங்கியதாகத் தெரியவருகிறது.

அந்த இடத்தில் 2020-ல் மாளிகை ஒன்றைக் கட்டத் தொடங்கி 2022-ல் முடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த மாளிகை கிட்டத்தட்ட 13,000 சதுர அடியில், ரஷ்ய டச்சா பாணியில் முற்றிலும் மரத்தால் கட்டப்பட்டிருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. அதில் புதினின் குழந்தைகள், அவரின் காதலி அலினா கபீவா, அவருடைய உறவினர் சிலரும் தங்கியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த மாளிகையின் மதிப்பு 120 மில்லியன் டாலர் எனவும், விளாடிமிர் புதின் ரகசியமாக இங்கு வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.