Published:Updated:

நமீதாவே தமிழக பா.ஜ.க-வை காப்பாற்றட்டும்! - எஸ்.வி.சேகர் விரக்தி

எஸ்.வி.சேகர்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.வி.சேகர்

பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக இருந்த காலத்திலிருந்து இப்போதைய எல்.முருகன் காலம் வரையிலும் கட்சிக்குள் சாதி அரசியல் ஓங்கியிருக்கிறது.

நமீதாவே தமிழக பா.ஜ.க-வை காப்பாற்றட்டும்! - எஸ்.வி.சேகர் விரக்தி

பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக இருந்த காலத்திலிருந்து இப்போதைய எல்.முருகன் காலம் வரையிலும் கட்சிக்குள் சாதி அரசியல் ஓங்கியிருக்கிறது.

Published:Updated:
எஸ்.வி.சேகர்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.வி.சேகர்

“தேர்தல் செலவுகளுக்காகக் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தில் ஹெச்.ராஜா ஊழல் செய்துவிட்டார்” என்று குற்றம்சாட்டிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ‘பா.ஜ.க வேட்பாளர்களுக்குப் பல கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று ட்விட்டர் ஸ்பேசஸில் பேசி முதல் தீயைப் பற்றவைத்தவர் பா.ஜ.க ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர்தான். அவரிடம் பேசினால் மனிதர் கொந்தளித்துத் தீர்த்துவிட்டார்...

“ஹெச்.ராஜா மீது புகார் கொடுத்தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்... இப்போது, ‘பா.ஜ.க வேட்பாளர்களுக்குக் கட்சி மேலிடம் பணம் கொடுத்தது’ என்ற உங்களது குற்றச்சாட்டை வாபஸ் வாங்கிக்கொள்வீர்களா?’’

“இப்போதைய சூழலில், இந்த விஷயத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தமிழக பா.ஜ.க எந்தவொரு விஷயத்திலும் என்னைக் கண்டுகொள்ளாதபோது, நான் மட்டும் எதற்காக ஒவ்வொரு விஷயத்துக்காகவும் ரியாக்ட் செய்துகொண்டே இருக்க வேண்டும்? உறவு, பகை, நட்பு என எல்லாமே பரஸ்பரமாக இருக்க வேண்டும். தமிழக பா.ஜ.க என்னை எதுவுமே கண்டுகொள்ளவில்லை என்கிறபோது, ‘கமலாலயத்துக்கு வெள்ளை அடிக்கவில்லையா, தூசியாக இருக்கிறதே, பெருச்சாளி ஓடுகிறதே...’ என்றெல்லாம் நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’’

“கட்சிக்கும் உங்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை?”

“பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால், ‘நீ என்ன வர்றது... உன்னைவிடவும் சிறந்த பேச்சாளர், பார்த்தவுடனேயே பல லட்சம் பேரைக் கவரக்கூடிய நமீதாவெல்லாம் எங்களிடம் இருக்கிறார்’ என்று தமிழக பா.ஜ.க தலைமை நினைத்துவிட்டது. ‘ஓகே நமீதாவே கட்சியைக் காப்பாற்றட்டும்’ என நானும் விட்டுவிட்டேன். கட்சியில் என்னை எல்.முருகன் ஒதுக்கிவிட்டார் என்பதற்காகவே எனக்கு ஓட்டு உரிமை இல்லாமல் போய்விடுமா என்ன?’’

“கட்சியில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?”

“தமிழக பா.ஜ.க-வின் தலைமைப் பதவிக்கு வரக்கூடிய சிலர் சாதி அரசியல் செய்கிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக இருந்த காலத்திலிருந்து இப்போதைய எல்.முருகன் காலம் வரையிலும் கட்சிக்குள் சாதி அரசியல் ஓங்கியிருக்கிறது. தான் சார்ந்த சாதிக்காரர்களுக்கே கட்சியில் முக்கியப் பொறுப்புகளை கொடுத்துவருவதால்தான், தமிழ்நாட்டில் ஒன்றரை சதவிகித வாக்குவங்கியை பா.ஜ.க-வால் தாண்ட முடியவில்லை. பா.ஜ.க-வுக்கு ஆதரவான, வலதுசாரி சிந்தனைகொண்ட ஒரு பத்திரிகையிலேயே சமீபத்தில், ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று செய்தி வந்திருக்கிறது. அந்தச் செய்தியை அப்படியே மொழிபெயர்த்து, டெல்லியில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ... அவருக்கு அனுப்பிவைத்துவிட்டேன். ஆனால், அதற்கு மறுநாளே ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை’ என சி.டி.ரவி மறுப்பு வெளியிடுகிறார். கட்சியின் மேலிடப் பார்வையாளரான சி.டி.ரவி, கட்சியிலுள்ள பிரபலமானவர்களையெல்லாம் அழைத்துப் பேசி வேலை வாங்க வேண்டும். ஆனால், அவர் என்னை அழைத்துப் பேசவேயில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பிராமணர்களுக்கு எதிரான கட்சியாகத்தான் இங்குள்ள பா.ஜ.க இருந்துவருகிறது.’’

நமீதாவே தமிழக பா.ஜ.க-வை காப்பாற்றட்டும்! - எஸ்.வி.சேகர் விரக்தி


“கட்சி உங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று அங்கலாய்க்கும் நீங்கள், கட்சிக்காக அப்படி என்ன செய்துவிட்டீர்கள்?’’

“பா.ஜ.க-வின் முகம் என்பது பிரதமர் நரேந்திர மோடிதான். மாறாக பொன்னார், வானதி, எல்.முருகனையெல்லாம் முகமாகக் காட்ட நினைத்தால்... அது எடுபடாது. மோடியின் சாதனையை அடித்தட்டு மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு சிம்பிளாக ஓர் ஆலோசனையைச் சொன்னேன்... அதாவது, தமிழ்நாட்டில் 70,000 ரேஷன் கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளின் வாயிலிலேயே மோடியின் மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் விளம்பர போர்டுகளாக வைத்தால்... அது எல்லா மக்களையும் எளிதில் சென்றடையும். இப்படி மக்களிடையே நாம் போகாமல், ‘ஓட்டு வரவில்லை, ஓட்டு வரவில்லை’ என்று மட்டும் சொல்லிக்கொண்டேயிருந்தால் எப்படிக் கட்சியை வளர்க்க முடியும்?!’’

“தமிழக பா.ஜ.க-வை வெறுப்பேற்றத்தான் சமீபகாலமாக தி.மு.க-வைப் பாராட்டிப் பேசிவருகிறீர்களா?’’

“அடிப்படையில் நான் பா.ஜ.க உறுப்பினர்; மோடியின் தீவிர ஆதரவாளர்... மற்றபடி யாரையும் நான் எதிரியாகப் பார்ப்பது கிடையாது. எல்லோருமே எனக்கு நண்பர்கள்தான். 1980-லிருந்தே எனக்கு கருணாநிதி, ஸ்டாலினோடு நெருங்கிய பழக்கம் இருக்கிறது. 1989-லேயே தி.மு.க-வுக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்திருக்கிறேன். ‘துர்கா ஸ்டாலின் வழியில் ஸ்டாலின் போனால், வெற்றி நிச்சயம்’ என்று நான் சொல்லியிருந்தேன். அதேபோல்தான் அவருக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது!”

“அப்படியென்றால் அடுத்தகட்டமாக தி.மு.க-வில் இணையப்போகிறீர்களா?’’

“அந்த அவசியம் எனக்கு இல்லை... மோடி முன்னிலையில் நான் பா.ஜ.க-வில் இணைந்தபோதே, ‘எந்தவொரு தேர்தலிலும் இனி நிற்க மாட்டேன்’ என்ற நிபந்தனையைச் சொல்லித்தான் சேர்ந்தேன். அதனால்தான் தமிழக பா.ஜ.க என்னைக் கண்டுகொள்ளவில்லை. என்றாலும்கூட, பா.ஜ.க-வுக்கான எனது பிரசாரம் தொடரும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism