Published:Updated:

`அவர்கள் சச்சின் டெண்டுல்கருடன் பேசியிருக்கலாம்!’ -சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த சச்சின் பைலட்

சச்சின் பைலட்

ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான நிர்வாகிகள் அனைவரும் கட்சியிலிருந்து வெளியேறிவரும் நிலையில், அடுத்தது சச்சின் பைலட்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

`அவர்கள் சச்சின் டெண்டுல்கருடன் பேசியிருக்கலாம்!’ -சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த சச்சின் பைலட்

ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான நிர்வாகிகள் அனைவரும் கட்சியிலிருந்து வெளியேறிவரும் நிலையில், அடுத்தது சச்சின் பைலட்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

Published:Updated:
சச்சின் பைலட்

உத்தரப்பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிராசதா, கடந்த புதன்கிழமை அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பியூஸ் கோயல், நட்டா உள்ளிட்டோரின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்த அவர், 'காங்கிரஸில் மக்களுக்காகப் பணியாற்ற முடியவில்லை. அமைப்புரீதியாகச் செயல்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமேதான். புதிய இந்தியாவைப் பிரதமர் மோடி கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்' என்று செய்தியாளர் சந்திப்பில் பாஜக-வுக்குப் புகழாரம் சூட்டினார்.

மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருந்துவந்த ஜிதின் பிரசாதா, ராகுல் காந்தியின் மிக முக்கிய அபிமானிகளுள் ஒருவர். உ.பி காங்கிரஸின் முகமாகப் பார்க்கப்பட்டுவந்த இவரை உ.பி காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகத் தீர்மானம் நிறைவேற்றிப் புறக்கணித்தனர். அதிலிருந்து கட்சியின் மீது கடும் அதிருப்தியிலிருந்த ஜிதின் பிரசாதா, உ.பி-யில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில் பாஜக-வுக்குத் தாவியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸிலிருந்து வெளியேறப்போகும் அடுத்த நபர் யார் என்ற பேச்சு, பரவலாக எழுந்தது. அப்போது அனைவராலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட ஒரே நபர் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட். கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜக-வில் இணைந்தார். தற்போது, ஜிதின் பிரசாதா பாஜக-வில் சேர்ந்துவிட்டார். ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான நிர்வாகிகள் அனைவரும் கட்சியிலிருந்து வெளியேறிவரும் நிலையில், அடுத்தது சச்சின் பைலட்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. பாஜக தலைவர்கள் பலரும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சச்சினுக்கு அழைப்புவிடுத்த வண்ணமாக இருந்தனர்.

தேசிய அளவில் நாளுக்கு நாள் வலுவிழந்துவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து சச்சினும் வெளியேறிவிட்டால், அதன் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று கருதிய காங்கிரஸ் தலைமை, ராஜஸ்தான் அரசியலில் சச்சின் முன்வைத்த கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முழு முனைப்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முன்னதாக, இதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான் உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டியை காங்கிரஸ் அமைத்தது. ஆனால், அதில் அகமது படேல் உயிரிழந்துவிட்டதால் கமிட்டி எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டிவந்தது.

ஜிதின் பிரசாதா
ஜிதின் பிரசாதா
ANI

அதனால், சச்சினின் அமைச்சரவை விரிவாக்கக் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமை முயற்சிகள் மேற்கொண்டாலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் பதவிகள் வழங்கி இணக்கமாகச் செயல்படத் தயாராக இல்லை. இந்தநிலையில், ஜிதின் பிரசாதாவின் வெளியேற்றம் சச்சினின் கோரிக்கைகளுக்குப் புத்துயிர் அளித்திருக்கிறது. ஆரம்பம் முதலே சச்சினுக்கு ஆதரவளித்துவரும் பிரியங்கா காந்தி அவரது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிவைப்பதாக வெள்ளிக்கிழமை உறுதியளித்ததாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சச்சினின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் டெல்லியில் கடந்த மூன்று நாள்களாகப் பேசுபொருளாக இருந்துவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், உத்தரப்பிரதேச பாஜக மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி , ஜிதின் பிரசாதா பாஜக-வில் இணைந்ததை அடுத்து, தான் காங்கிரஸின் சச்சின் பைலட்டிடம் பேசியதாகவும், அவர் விரைவில் பாஜக-வில் இணையவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சச்சின் காங்கிரஸிலிருந்து வெளியேறவிருப்பதாக அவர் கூறிய கருத்து காங்கிரஸ் தலைவர்களைக் கலங்க வைத்துவிட்டது. ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் பாஜக-வினர் சச்சினின் வருகையை இதைவைத்து உறுதி செய்துவிட்டு, `கடந்த ஆண்டு சிந்தியா, இந்த ஆண்டு ஜிதின், நாளை சச்சின். காங்கிரஸின் ஆட்டம் முடியப்போகிறது’ என்று விமர்சித்து கருத்துகளை பதிவிட்டுக்கொண்டிருந்தனர்.

ரீட்டா பகுகுணா ஜோஷி
ரீட்டா பகுகுணா ஜோஷி
ANI

ஆனால், ரீட்டா பகுகுணா ஜோஷியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, "ரீட்டா பகுகுணா ஜோஷி சச்சினுடன் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அவர் சச்சின் டெண்டுல்கரிடம் பேசியிருக்கலாம். அவருக்கு என்னிடம் பேச தைரியம் கிடையாது'' என்று தெரிவித்தார்.

ஜிதின் பிரசாதா விலகியதிலிருந்து நிலவிவந்த வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் சச்சின் டெண்டுல்கரின் பெயரால் மிகவும் அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சச்சின் பைலட். காங்கிரஸ் தலைவர்களை இழுப்பதில் பாஜக முனைப்புக் காட்டிக்கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் சத்தமில்லாமல் தன் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தவர்களைச் மீண்டும் தன் கட்சிக்கு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றுக்கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.

`பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சித் தாவல்கள் பலமாகத்தான் இருக்கும்’ என்றபடி அடுத்தது யார், எந்த கட்சிக்கு போகப்போகிறார்கள் என்பதை யூகிக்கத் தொடங்கியிருக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.