அலசல்
அரசியல்
Published:Updated:

சச்சின் பைலட் Vs அசோக் கெலாட் - ரவுண்டுகட்டும் ராஜஸ்தான் அரசியல் - கவலையில் காங்கிரஸ்!

சச்சின் பைலட் யாத்திரை
பிரீமியம் ஸ்டோரி
News
சச்சின் பைலட் யாத்திரை

கட்சியின் தலைவர்கள் யாருடைய படமும் இதில் பயன்படுத்தப்படவில்லை. அதனால் இது சச்சின் பைலட் நடத்தும் தனிப்பட்ட யாத்திரை

கர்நாடகாவில் கிடைத்திருக்கும் வெற்றியைக் கொண்டாட முடியாத அளவுக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவரும் கோஷ்டி மோதல்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தீராத தலைவலியை ஏற்படுத்திவருகின்றன!

வரும் டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் முதல்வரான அசோக் கெலாட்டுக்கும், அந்தக் கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையிலான கோஷ்டி மோதல்களில் அனல் பறக்கிறது.

2020-ல், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக, அப்போதைய துணை முதல்வர் சச்சின் பைலட், 18 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் போர்க்கொடி தூக்கினார். இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த முதல்வர் அசோக் கெலாட், ‘‘2020-ல் எனது ஆட்சியைக் கவிழ்க்க நடைபெற்ற சதியிலிருந்து காப்பாற்றியவர் எதிர்க்கட்சியைச் (பா.ஜ.க) சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா’’ என்று சச்சின் பைலட்டை மறைமுகமாகத் தாக்கியிருந்தார்.

சச்சின் பைலட் யாத்திரை
சச்சின் பைலட் யாத்திரை

அசோக் கெலாட்டின் இந்தப் பதிலால் கொதித்துப்போன சச்சின் பைலட், ‘‘வசுந்தரா ராஜே சிந்தியா ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் தொடர்ந்து கூறிவந்த போதிலும், அசோக் கெலாட் மௌனம் காத்து வந்ததன் அர்த்தம் இப்போது புரிகிறது’’ என்று பதிலடி கொடுத்தார். மேலும், வசுந்தரா ராஜே அரசின் ஊழலுக்கு எதிராக, தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ‘ஜன் சங்கர்ஷ் யாத்திரை’ என்ற பெயரில் ஐந்து நாள் பாதயாத்திரையையும் தொடங்கிவிட்டார்.

சொந்தக் கட்சிக்கு எதிராகவே பாதயாத்திரை தொடங்கியிருக்கும் சச்சின் பைலட் குறித்துப் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங், “கட்சியின் தலைவர்கள் யாருடைய படமும் இதில் பயன்படுத்தப்படவில்லை. அதனால் இது சச்சின் பைலட் நடத்தும் தனிப்பட்ட யாத்திரை” என்று முடித்துக்கொண்டார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சுக்விந்தர் சிங்கிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘‘சச்சின் பைலட் நடத்தும் யாத்திரை குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இது பற்றி விசாரித்து, மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் நம்மிடம் கூறுகையில், “சொந்த லாபத்துக்காக சச்சின் பைலட் நடத்தும் பாதயாத்திரையைக் கட்சியினர் நிராகரித்துவிட்டார்கள்” என்றனர்.

பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சதீஷ் பூனியா, ‘‘ஊழல் தொடர்பாகச் சொந்தக் கட்சிக்குள்ளேயே மோதல் வெடித்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் அரசின் ஊழலை முன்னிறுத்தி, வரும் தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார் நம்பிக்கையுடன்.

டிசம்பருக்குள் சூடு இன்னும் அதிகமாகும் என்றுதான் தோன்றுகிறது!