முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்குமிடையிலான அதிகாரப் போட்டி தீவிரமடைந்திருக்கிறது.

வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான முந்தைய பா.ஜ.க அரசின் ஊழல்கள்மீது தற்போதைய அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சச்சின் பைல்ட் எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தை வைத்து இன்று (ஏப்ரல் 11) ஜெய்ப்பூரில் சச்சின் பைலட் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். சொந்தக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெய்ப்பூரில் ஜோதிபாபூலே சிலை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து அவர் மட்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேடையில் மகாத்மா காந்தி படம் இருக்கிறது. அந்த இடத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் குழுமியிருக்கிறார்கள். அவருக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களையோ, கட்சி நிர்வாகிகளையோ உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொள்ளவில்லை.
ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற
சச்சின் பைலட்டின் கோரிக்கைக்கு அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருக்கும் பிரதாப் சிங் காச்சாரியாவாஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்குமிடையே நடந்துவரும் அதிகாரப் போட்டி வெளிப்படையான ஒன்றுதான். ஆனாலும், பொதுவெளியில் போராட்டம் நடத்தும் அளவுக்குப் போயிருப்பது இப்போதுதான் முதல் முறை. அவர்களுக்குள் மோதல்கள் எழும்போது கட்சி மேலிடம் தலையிட்டு சமரசம் செய்வது வழக்கமாக இருந்துவந்தது. இந்த முறை சச்சின் பைலட் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டவுடன், இது கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று கட்சி மேலிடம் எச்சரித்தது.
மேலிடம் எச்சரித்த காரணத்தால், அவர் போராட்டத்தைக் கைவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடியே அவர் போராட்டத்தில் இறங்கிவிட்டார். அசோக் கெலாட் கட்சியில் மிகவும் சீனியர் என்றாலும், சச்சின் பைலட்டைப் பொறுத்தளவில் இவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், கட்சி மேலிடத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் இறங்கியது, சச்சினுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே முதல்வர் நாற்காலியில் உங்களை அமர்த்திவிடுவோம்... தேர்தலின்போது நீங்கள்தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக இருப்பீர்கள் என்றெல்லாம் கட்சி மேலிடம் சச்சின் பைலட்டிடம் உறுதியளித்ததாம். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் விரக்தியடைந்த சச்சின் பைலட், போராட்டத்தில் இறங்கும் முடிவை எடுத்துவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
கட்சி மேலிடத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் இறங்கியது தவறு என்று பார்க்கும் காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர், சச்சின் பைலட் கூறும் காரணம் நியாயமானது என்றும் நினைக்கிறார்கள். அதாவது, “முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் ஊழல் தொடர்பாக தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘ரூ.45,000 கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம்’ என்று வாக்குறுதி அளித்தோம்.

தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால், எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது, ஏதோ சதி இருக்கிறது என்ற தவறான தகவலை அரசியல் எதிரிகள் பரப்புவார்கள். எனவே, முந்தைய ஆட்சியின் ஊழல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்குமிடையே வித்தியாசம் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வார்கள்” என்கிறார் சச்சின் பைலட்.
அதே நேரத்தில், என்னதான் காரணம் சொன்னாலும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சச்சின் பைலட் மீது கட்சி மேலிடம் கோபமாக இருப்பதாகவே தெரிகிறது. இது குறித்து ராஜஸ்தான் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளரான சுகிந்தர் சிங் ரந்தவா, “சச்சின் பைலட் மேற்கொள்ளும் போராட்டம், கட்சிக்கு எதிரான நடவடிக்கை. அது, கட்சியின் நலனுக்கு எதிரானது. தங்கள் அரசில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதைக் கட்சிக்குள் விவாதித்திருக்க வேண்டும். மாறாக, ஊடகங்களிலும் பொதுவெளியிலும் அதை வெளிப்படுத்துவது நல்லதல்ல” என்றார்.

முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது சச்சின் பைலட்டின் குறிக்கோள். ஆனால், முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியையே வேண்டாம் என்று சொல்லிவிட்டுவந்தவர் அசோக் கெலாட். அசோக் கெலாட்டுக்கு 71 வயதாகிறது. எனவே, சச்சின் பைலட் கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம். அவசரப்பட்டு போராட்டத்தில் இறங்கிவிட்டார். இதை வைத்தே அடுத்த முறையும் கெலாட் முதல்வராக வாய்ப்பிருக்கிறது. ஆனால், இவர்களின் கோஷ்டிப்பூசல் பிரச்னையை மீறி வரும் தேர்தலில் காங்கிரஸால் அங்கு ஜெயித்துவிட முடியுமா என்பதே முதல் கேள்வி!