Published:Updated:

ராஜஸ்தான்: சச்சின் பைலட் பதவிப் பறிப்பு; ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமா? - என்ன நடந்தது?

சச்சின் பைலட்
News
சச்சின் பைலட்

சச்சின் பைலட்டின் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் துணை முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டதாக இன்று அறிவிப்பு வெளியானது.

இந்தியாவில் ஒருபுறம் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும் அரசியல் ஆட்டங்களும் களம் காணத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசியலில் இந்தப் பிரச்னை தீவிரமாகியுள்ளது. கடந்த சில நாள்களாக ராஜஸ்தானின் ஆளும்கட்சியான காங்கிரஸின் உட்கட்சிப் பிரச்னையும் தீவிரமடைந்து வந்தது. தற்போது கட்சியின் முக்கிய தலைவராகவும் மாநில துணை முதல்வராகவும் செயல்பட்டு வந்த சச்சின் பைலட் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதன் மூலம் பிரச்னை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
ANI

என்ன நடந்தது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 200 இடங்களில் 107 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. சில சுயேச்சை உறுப்பினர்களும் பிற கட்சி உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தனர். காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது உறுதியானாலும், முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் சச்சின் பைலட். அதற்கு பலனாக முதல்வர் பதவி கிடைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் எல்லாம் மாறியது.

முதல்வர் பதவி அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கும் வழங்கப்பட்டது. எனினும், இருவரிடையேயும் அதிகாரம் தொடர்பான அதிருப்தி நிலவி வந்தது. அசோக் கெலாட், சச்சின் பைலட்டை ஓரம் கட்ட முயல்வதாக விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன. இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவை வைத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைப் போல ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க திட்டமிடுவதாகக் காங்கிரஸ் கட்சியினர் கொதித்தனர். ஆனால், பா.ஜ.க இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது.

சச்சின் பைலட், அஷோக் கெலாட்
சச்சின் பைலட், அஷோக் கெலாட்

இதனிடையே நேற்று முன்தினம் சச்சின் பைலட், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் பரவியது. மேலும் அவர் டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. எனினும், இந்தத் தகவலை சச்சின் பைலட் மறுத்தார். தான் பா.ஜ.க தலைவரை சந்திக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என என்.டி.டி.வி ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்தார். இதனிடையே ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ``தனக்கு 30 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார். மேலும், மாநில சட்டசபை காங்கிரஸ் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை’ என்று அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும், சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் சில எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதாகக் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தனக்கு இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுகளை வீடியோவாக வெளியிட்டார் சச்சின் பைலட். சுமார் 15 எம்.எல்.ஏ-க்கள் ஒன்றாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. எனினும் வீடியோ எடுக்கப்பட்ட இடம் குறித்த தகவல் எதுவும் அதனுடன் வெளியாகவில்லை. அந்த வீடியோவில் சச்சின் பைலட் இடம்பெறவில்லை.

`சத்தியத்தைத் தொந்தரவு செய்யலாம். ஆனால் தோற்கடிக்க முடியாது.’
பதவி பறிப்புக்கு பின் சச்சின் பைலட்

சச்சின் பைலட் பதவி பறிப்பு:

இந்தநிலையில், சச்சின் பைலட்டின் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் துணை முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டதாக இன்று அறிவிப்பு வெளியானது. ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் என்பவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் பதவிக்கு மறு அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்துப் பேசினார். தங்கள் கட்சிக்கு இருக்கும் ஆதரவு தொடர்பாக ஆளுநருக்கு தெளிவுபடுத்த இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் பதவி பறிப்பு தொடர்பான தீர்மான கடிதமும் ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

இதனிடையே ட்விட்டரில் சச்சின் பைலட், `சத்தியத்தைத் தொந்தரவு செய்யலாம். ஆனால், தோற்கடிக்க முடியாது’ எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும், தனது ட்விட்டர் பயோவில், தனது பெயரில் கீழ், துணை முதல்வர் என்று இருந்ததையும் நீக்கியுள்ளார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
ANI

காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தா?

200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு 124 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு உள்ளது. அதில் காங்கிரஸுக்கு மட்டும் 107, பாரதிய டிரிபள் கட்சிக்கு 2 , சிபிஐ-எம் கட்சிக்கு 2, ஆர்எல்டி கட்சிக்கு 1. இது தவிர்த்து சுயேச்சைகள் 12 பேர் ஆதரவு அளிக்கின்றனர். அதேநேரத்தில் பா.ஜ.க, கூட்டணியில் 76 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அக்கட்சிக்கு 72 பேரும், கூட்டணி கட்சியான ஹனுமன் பெனிவால் ராஷ்டிரிய லோக்மந்திரிக் கட்சிக்கு 3 பேரும், சுயேச்சை ஒருவரின் ஆதரவு உள்ளன.

சச்சின் பைலட் தன்னிடம் 30 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகக் கூறி வருகிறார். என்றாலும் அவருக்கு 15 முதல் 20 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுதான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் சச்சின் பா.ஜ.க உடன் இணைந்தாலும் ஆட்சி மாற்றம் அளவுக்கு பாதிப்பு இருக்காது என்கிறார்கள். மத்தியப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசம்தான் இருந்தது என்பதால், ஆட்சி மாற்றம் எளிதில் சாத்தியப்பட்டது. ஆனால், ராஜஸ்தானில் உடனடியாக அது சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது. எனினும், அரசியல் என்னும் பரமபத விளையாட்டில் சாத்தியமில்லாத பல விஷயங்கள்கூட சாத்தியப்பட்ட வரலாறுகள் இருக்கிறது. சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நடவடிக்கையே அதைத் தீர்மானிக்கும்!