Published:Updated:

பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழுவில் சாத்வி பிரக்யா சிங் தாகூர்... கிளம்பும் எதிர்ப்பு!

சாத்வி ப்ரக்யா
சாத்வி ப்ரக்யா

`மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தியதாகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சாத்வி பிரக்யா, நாட்டின் பாதுகாப்புத்துறையில் இடம்பெறுவது தவறான முன்னுதாரணமாகிவிடும்’

மத்திய பாதுகாப்புத் துறைக்கான ஆலோசனைக் குழுவில் போபால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் நியமனம் செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாத்வி பிரக்யா, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கைத் தோற்கடித்து, நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். 2008-ம் ஆண்டு, மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மாலேகானில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியொன்றில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், 6 பேர் உயிரிழந்தனர்; ஏறத்தாழ 100 பேர் படுகாயமடைந்தனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு
மாலேகான் குண்டுவெடிப்பு

மஹாராஷ்ட்ரா காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் என பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட 11 பேரைக் கைது செய்தது. இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால், மேலும் பல இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம் என அந்த வழக்கை விசாரித்த தீவிரவாத எதிர்ப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த கர்கரே தெரிவித்தார். ஹேமந்த் கர்கரே 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

`நான் ஒரு முஸ்லிம் என்பதே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது!’- பேராசிரியர் பிரோஸ் கான் உருக்கம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்ற சாத்வி பிரக்யா, 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஜாமீனில் வெளிவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்காகத் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு பல முறை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த அவருக்குக் கடந்த 2017-ம் ஆண்டு, விடுதலை அளிக்கப்பட்டது. பிரக்யா தாகூர் மீதான வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை (NIA), அவர் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டது. எனினும், பிரக்யா தாகூர் மீதான சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாலேகான் வழக்கில் என்னைக் கைதுசெய்த ஹேமந்த் கர்கரே மும்பை குண்டுவெடிப்பில் இறந்ததற்குக் காரணம், நான் அவரைச் சபித்ததுதான்.
சாத்வி பிரக்யா சிங் தாகூர்
சாத்வி பிரக்யா
சாத்வி பிரக்யா

பிரக்யா சிங் தாகூர் கடந்த ஏப்ரல் மாதம் பி.ஜே.பி-யில் இணைந்தார். கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு போபால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதே அது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரக்யா சிங் தாகூரின் பிரசாரங்களும் அவர் வெளிப்படுத்திய கருத்துகளும் சர்ச்சைகளாகவே வெளிப்பட்டன.

"மாலேகான் வழக்கில் என்னைக் கைதுசெய்த ஹேமந்த் கர்கரே மும்பை குண்டுவெடிப்பில் இறந்ததற்குக் காரணம், நான் அவரைச் சபித்ததுதான்" என்றார் பிரக்யா. தேர்தல் ஆணையம் பிரக்யா தாகூருக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. உடனடியாகத் தனது கருத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில், "பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றதற்காகப் பெருமை கொள்கிறேன்" என்று சாத்வி பிரக்யா பேசியது, பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. தேர்தல் ஆணையம் பிரக்யா தாகூரின் மீது வழக்கு பதிவு செய்தது. மேலும், அவர் தேர்தல் பிரசாரத்தில் 72 மணி நேரங்கள் பங்கேற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாட்டின் கரூரில், தேர்தல் பிரசாரத்தின்போது, கமல் ஹாசன் "இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து" எனப் பேசியது விவாதப் பொருளாக மாறியது. அதைக் கண்டித்துப் பேசிய சாத்வி பிரக்யா, "கோட்சே ஒரு தேசபக்தர்" என்று கூற, அது பெரும் சர்ச்சையாக மாறியது. அவரது பி.ஜே.பி கட்சியே அவரைக் கண்டித்தது. பிரக்யா சிங் மன்னிப்பு கோரிய போதும், பிரதமர் மோடி அவரை மன்னிக்க முடியாது எனக் கருத்து தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையின் ஆலோசனைக் குழு
பாதுகாப்புத் துறையின் ஆலோசனைக் குழு

இப்படித் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வரும் சாத்வி பிரக்யா சிங் தாகூர் தற்போது பாதுகாப்புத் துறையின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தியதாகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சாத்வி பிரக்யா, நாட்டின் பாதுகாப்புத்துறையில் இடம்பெறுவது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனக் கருத்துகள் எழுகின்றன.

இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதவி வகிக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, வில்சன் ஆகியோரும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

அடுத்த கட்டுரைக்கு