Published:Updated:

அரசியலில் சகாயம் ஐ.ஏ.எஸ்: கைகொடுக்கப்போவது சீமானா... கமல்ஹாசனா?

சகாயம்

ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று அரசியலில் இறங்கும் சகாயத்துக்கு, தேர்தல் கூட்டணியில் கைகொடுக்கப்போவது மக்கள் நீதி மய்யமா... நாம் தமிழர் கட்சியா?

அரசியலில் சகாயம் ஐ.ஏ.எஸ்: கைகொடுக்கப்போவது சீமானா... கமல்ஹாசனா?

ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று அரசியலில் இறங்கும் சகாயத்துக்கு, தேர்தல் கூட்டணியில் கைகொடுக்கப்போவது மக்கள் நீதி மய்யமா... நாம் தமிழர் கட்சியா?

Published:Updated:
சகாயம்

`லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்ற முழக்கத்துடன் அதிரடியாக அரசுப் பணியில் செயல்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீதான தன் ஆர்வத்தை வெளிப்படுத்திவந்தார். சமீபத்தில் ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற அவர், `அரசியல் களம் காண்போம்’ என்ற தலைப்பில் அரசியல் பொதுக்கூட்டம் நடத்தி, வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அச்சாரம் போட்டிருக்கிறார்.

கிரானைட் குவாரி
கிரானைட் குவாரி

சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரி முறைகேடுகளைக் கண்டறிந்தார். கிரானைட் குவாரி முறைகேடு காரணமாக தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் வெளியிட்ட தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் பதவியிலிருந்து கைத்தறித்துறைக்கு அதிடியாக அவர் மாற்றப்பட்டார். அப்போதிருந்தே அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. அவரும் பல சந்தர்ப்பங்களில் அரசியல் மீதான தன் ஆர்வத்தை வெளிப்படுத்திவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபத்தில் ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஞாயிறன்று (பிப். 21) `அரசியல் களம் காண்போம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று சகாயம் பேசினார். அப்போது, `தமிழக அரசுப் பணியில் நேர்மையாகப் பணியாற்றியபோது அவமானப்படுத்தப்பட்டேன். என் அரசுப் பணியை ஏழைகளுக்கு செய்ய முடியாமல் தடுக்கப்பட்டேன். எனவேதான், ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இளைஞர்களுடன் இணைந்து சமூகப் பணிகளை ஆற்றத் தொடங்கினேன். அரசியல் தாக்கத்துடன் நான் பயணிக்கவில்லை. அரசியல் களம் அவ்வளவு எளிதானது அல்ல.

நான் செல்லும் இடமெங்கும் அரசியலுக்கு வருமாறு இளைஞர்கள் என்னை அழைக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழித்து மொழிப்பற்றுடன் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரசியல் களம் காண்போம் என்கிற உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம்’ என்றார் சகாயம்.

சகாயம்
சகாயம்

வருகிற சட்டமன்றத் தேர்தலில் சகாயம் போட்டியிடுவார் என்று அவரது வட்டாரத்தில் சொல்கிறார்கள். மேலும், சகாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதும் அவரது ஆதரவாளர்களின் விருப்பம். ஆனால், அவர் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. நேர்மையான அதிகாரியாகப் பார்க்கப்பட்ட காரணத்தால், அரசியல்வாதிகளால் பழிவாங்கப்பட்டவர் சகாயம். அந்த அரசியல் களம், சகாயத்துக்கு எந்த அளவுக்கு சரிப்பட்டுவரும்?

இது குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். ``சகாயம் போன்ற நேர்மையாளர்கள் அரசியலுக்கு வர வேண்டியது அவசியம். அப்போதுதான் அரசியலைத் தூய்மைப்படுத்த முடியும். தமிழக அரசியல் களத்தில் மாற்றத்துக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. சகாயம் ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டால், மிகச் சிறப்பான ஆட்சியை அவரால் கொடுக்க முடியும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆனால், அவரைப் போன்றவர்கள் ஆட்சிக்கு வருவதற்கான பாதை கடினமானது. இன்றைய சூழலில். தேர்தலுக்கான காலம் மிகவும் நெருங்கிவிட்டது. கொஞ்சம் முன்கூட்டியே இந்தப் பணிகளை ஆரம்பித்திருந்தால், அவருக்கு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். சகாயத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் இருக்கின்றன. அரசியல் என்பது நீண்டகாலப் பயணமாக இருக்கும் என்பதை உணர்ந்தேதான் அரசியலுக்கு அவர் வருகிறார்.

செந்தில் ஆறுமுகம்
செந்தில் ஆறுமுகம்

ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று உற்சாகத்துக்குப் பேசினால்கூட யதார்த்தம் எப்படி என்பது நமக்குத் தெரியும். எனவே, எதிர்காலத்தில் நீண்டகாலப் பயணமாக அமையும்போது, இவர்கள் பிரச்னைகளைப் பேசப் பேச அது சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். மேலும் அதனால், ஆட்சியாளர்களுக்கு ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய கிரானைட் குவாரி முறைகேடு பற்றி அளிக்கப்பட்ட ரிப்போர்ட் என்னவானது என்று அவர் கேள்வி எழுப்பினால், அது அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும். இதுபோல ஒவ்வொரு விவகாரத்திலும் அவர் கேள்வி எழுப்பும்போது, பிரச்னைகளைப் பேசும்போது மற்ற அரசியல் கட்சிகளும் அது பற்றிப் பேசும். அது ஓர் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிகோலும்.

நாமக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக சகாயம் பணியாற்றியபோது, அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட ஏராளமான இளைஞர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதுபோல, ஊழல் எதிர்ப்பு என்ற வகையில் நேர்மையாளராக இருப்பதாலும், தமிழ் உணர்வு மிக்கவராக சகாயம் இருப்பதாலும், அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருக்கிறது. அவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் அவரது அரசியலுக்கு ஆதரவாக வருவார்கள் என்பது தெரியவில்லை. அதேநேரத்தில், அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு நல்ல முயற்சியாக அவரது அரசியல் வருகையைப் பார்க்க வேண்டும்” என்றார் செந்தில் ஆறுமுகம்.

சகாயம்
சகாயம்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலசந்திரனிடம் பேசினோம்.

``மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சகாயம். அது மட்டுமல்ல, அவரிடம் நேர்மையுடன் துணிச்சலும் சேர்ந்தே இருந்தது என்பது வெளிப்படையான ஒன்று. இன்றைய சூழலில் அவரது நேர்மைக்கும் துணிச்சலுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையோ, அதனால் ஏற்படக்கூடிய பலன்களோ எதுவும் ஏற்படாமல் போய்விட்டது என்பது வருத்தத்துக்குரியது.

அரசியல் வாழ்வில் நுழைந்துவிட்டால் பல சவால்கள் இருக்கின்றன. இன்றைக்கு அரசியல் என்பது அதிக செலவுபடைத்ததாக ஆகிவிட்டது. ஓரளவுக்கு என்றல்ல, மிகப்பெரிய அளவுக்கு நிதி ஆதாரங்கள் இருந்தாலன்றி, மிகப்பெரிய மாறுதல்களைக் கொண்டுவர முடியாது. இது ஒரு கசப்பான, நிதர்சனமான உண்மை.

இந்த நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றிச் சொல்லியாக வேண்டும். டெல்லியில் ஒரு மாற்றம் இருந்தது. டெல்லியில் இருக்கும் மக்களில் பெரும்பான்மையோர், கல்வியறிவும் பொதுவாழ்க்கை பற்றிய புரிதலும் சற்று அதிகமாகக் கொண்டவர்கள் என்பது யதார்த்தம். அதையும் தவிர, கெஜ்ரிவால் மிகப் புதுமையான முறையில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். முதலில் அரசியல் வாழ்வைத் தொடங்கும்போது, காசோலைகள் மூலமாகவோ, வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவோ மட்டும்தான் நிதி வாங்குவோம் என்றும், ரொக்கமாக வாங்க மாட்டோம் என்று அவர் சொன்னார். மேலும், இன்றைக்குள்ள எலெக்ட்ரானிக் மீடியாவை மிகவும் திறமையாகப் பயன்படுத்தினார். அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல், அகில உலக அளவிலும் அவரது செய்திகள் சென்று சேர்ந்தன. அதன் காரணமாக அவருக்கு மிக முக்கியமாக எது தேவையோ, அந்த நிதியாதாரங்கள் வந்து சேர்ந்தன.

லட்சிய நோக்குடைய பல இளைஞர்கள் அவர் பின்னால் திரண்டு வந்தனர். இன்றளவுக்கும் டெல்லி அரசியலில் கெஜ்ரிவால் ஒரு தகர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். அவரது அரசியல் கொள்கைகள் என்று எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவரது அரசியல் கொள்கை என்பது இந்துத்வாவின் இன்னொரு சாயல் என்ற விமர்சனம் பரவலாக இருக்கிறது. அந்த விமர்சனத்தில் உண்மையும் இருப்பதாகக் கருதுகிறேன்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

ஆனால், ஏழை எளியவர்களுக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் லஞ்ச லாவண்யம் இல்லாத ஓர் ஆட்சியைத் தர முடியும் என்று அவர் நிரூபித்துக்காட்டினார். அவர் அரசியலுக்கு வந்தபோது, அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தன. ஏற்கெனவே இருக்கும் அரசியல் சக்திகள் இவரைப் போன்றவர்கள் வருவது தங்களுக்கு இடையூறு என்று கருதி, கெஜ்ரிவாலைக் கீழே தள்ளப்பார்த்தார்கள். அதில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் அடக்கம்.

கெஜ்ரிவாலும் ஆரம்பகாலத்தில் பல தவறுகளைச் செய்தார். டெல்லி போன்ற யூனியன் பிரதேசத்தில் முதல்வருக்குரிய அதிகாரங்களை மீறி செயல்பட அவர் முயன்றார். டெல்லி போலீஸ் தன் அதிகாரத்தின்கீழ் இருக்க வேண்டும் என்று சொன்னார். துணைநிலை ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் தனக்கும் இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.  இவை எல்லாவற்றிலும் அவர் தோற்றுவிட்டார். அதேநேரத்தில் வணிகவரி, கல்வி போன்ற துறைகளில் தனக்கு முழு அதிகாரம் இருக்கும் நிலையில், அந்தத் துறைகளில் நிர்வாகச் சீர்திருத்தங்களை அவர் அமல்படுத்தினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இவற்றைச் செய்வதற்கு முதலில் அதிகாரத்துக்கு வர வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சகாயம் போன்ற நேர்மையாளர்கள் வெறும் மக்கள் சக்தியை மட்டுமே நம்பி அரசியலுக்கு வருவது கடினமானது. இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வேன் என்று சகாயம் கூறினால், அவர் கூறுகிற நேர்மையை முழுக்க முழுக்க கடைப்பிடிப்பவர்களாக எந்தக் கட்சியினர் இருக்கிறார்கள் என்ற வினா எழும். ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க ஆட்சி மீது விமர்சனம் இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அதன் மீது விமர்சனம் இருந்தது. அப்படியானால், இந்தக் கட்சிகளுடன் சகாயம் கூட்டணி அமைக்கிறார் என்றால், லஞ்ச லாவண்யம் இல்லாத நிலைதான் என் நிலை என்று சொல்வதற்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு மதிப்பு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

பாலசந்திரன்
பாலசந்திரன்

சகாயம் போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை நிச்சம் வரவேற்கலாம். ஒன்றை மட்டும்தான் சொல்ல விரும்புகிறேன். நல்லவராக மட்டும் இருந்தால் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும். வல்லவராக இருக்க வேண்டும் என்பதற்கு நேர்மைக் குறைவு தேவையில்லை. நேர்மையுடனும் வல்லவராக இருக்க முடியும். அப்படிப்பட்ட வல்லமைத்தன்மையை வளர்த்துக்கொண்டால் சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது நிச்சயம் நல்லதுதான்” என்றார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு இரண்டு கட்சிகள்தான் சகாயத்துக்கு வாய்ப்பாக இருக்கின்றன. ஒன்று, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மற்றொன்று சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. ஒருபோதும் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருப்பதாக சீமான் தொடர்ந்து சொல்லிவருகிறார். சட்டமன்றத் தேர்தல், நாடளுமன்றத் தேர்தல்,உள்ளாட்சித் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி இதுவரை தனித்தே களம் கண்டிருக்கிறது. அதே நிலைப்பாட்டை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் சீமான் எடுத்தால், அங்கு சகாயத்துக்கு வாய்ப்பு இல்லை. அல்லது சகாயம் மீதான நல்லெண்ணத்தில் அவரை சீமான் கூட்டணி சேர்த்துக்கொள்ளலாம். கமல்ஹாசனைப் பொறுத்தவரையில், `நேர்மையானவர்கள் எல்லோரையும் வரவேற்கிறேன்’ என்று அழைப்புவிடுத்துவருகிறார். எனவே, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சகாயம் சேரலாம்.

இவையெல்லாம் யூகங்கள்தான். மற்றபடி சகாயத்தின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதும் அதன் தாக்கங்களும் அவர், தனது அரசியல் பாதை குறித்துத் தெளிவாக அறிவித்தால்தான் தெரியவரும்.