Published:Updated:

``நானென்ன எதிர்க்கட்சி எம்.பி-யா?” - மாநகராட்சிக்கு எதிராக கொதித்த சேலம் திமுக எம்.பி; நடந்தது என்ன?

பார்த்திபன்

சேலம் மாநகராட்சியின் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் புறக்கணிக்கப்பட்டதாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

``நானென்ன எதிர்க்கட்சி எம்.பி-யா?” - மாநகராட்சிக்கு எதிராக கொதித்த சேலம் திமுக எம்.பி; நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சியின் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் புறக்கணிக்கப்பட்டதாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Published:Updated:
பார்த்திபன்

சேலம் மாநகராட்சியில், தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 994 நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களுக்கும், 1,166 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களும் மொத்தமாக 2,160 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி தி.மு.க எம்.எல்.ஏ ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஆனால், சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து எம்.பி எஸ்.ஆர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பி-க்கு அழைப்பு கொடுக்கக் கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நான் ஒரு எம்.பி. மக்கள் பணிகளை செய்யவிடாமல் தடுப்பது சட்டவிரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர், நான் ஏதோ எதிர்க்கட்சி எம்.பி என்று நினைக்கிறார். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்குச் சமம். நான் போராட்டக்காரன் என்பதை அனைவரும் அறிவார்கள். இதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி

இது குறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, ``சமீபத்தில் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வரிடம் விருது வாங்கினோம். இதைச் சிறப்பிக்கும்விதமாக மாநகராட்சியின் கடைக்கோடி ஊழியர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு எனது சொந்தப் பணத்தைக்கொண்டு வேட்டி, புடவை எடுத்துக் கொடுத்து சிறப்பித்தேன். இது அரசு நிகழ்ச்சி அல்ல, இதற்கு எம்.பி-ஐ கூப்பிட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அப்படியிருக்கும்போது எம்.பி இது மாதிரியான செய்திகளை வெளியில் பரப்பியது வருத்தத்தை அளிக்கிறது. மேலும் அவரே நேற்று மாலை வருந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். இதில் எங்கள்மீது எந்தத் தவறும் இல்லை" என்றார்.

பின்னர் எம்.பி பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதை வரவேற்கிறேன். நன்றி, சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். எல்லோருடைய நோக்கமும் மக்களுக்குச் சிறந்த சேவையைக் கொடுப்பதுதான்” என்று பதிவிட்டிருக்கிறார்.