Published:Updated:

`தொழிற்பேட்டையே 'கூட்டுறவு' இளங்கோவனுக்காகத்தான்!' - பட்ஜெட் அறிவிப்பால் கொதிக்கும் சேலம்

`கூட்டுறவு' இளங்கோவன்
`கூட்டுறவு' இளங்கோவன்

இளங்கோவனுக்கு, சொந்தமாக சுமார் 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பை அதிகரிக்கவே, இந்த இடத்தில் தொழிற்பேட்டையை அமைக்க இருக்கிறார்கள்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட்டை நேற்றுத் தாக்கல்செய்தார், துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். பட்ஜெட்டில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உமையாள்புரம், புத்திரகவுண்டன் பாளையம் கிராமத்தில், 4.50 கோடி ரூபாய் செலவில் புதிய தொழிற்பேட்டை நிறுவப்படும்' என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு, சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கப்படும் 'கூட்டுறவு' இளங்கோவனுக்காக அறிவிக்கப்பட்டதாகக் குமுறுகிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அறிவிக்கப்பட்டது. இங்கு, அரசின் திட்டங்கள் எதுவும் கொண்டுவரப்பட்டதில்லை. அதற்கு மாறாக, இளங்கோவனின் சொந்த ஊரான புத்திரக்கவுண்டன் பாளையத்துக்கே அனைத்துத் திட்டங்களும் கொண்டு செல்லப்படுகின்றன" என்ற ஆதங்கத்தோடு விவரித்த பெத்தநாயக்கன் பாளையம் பகுதி பொதுமக்கள், தொடர்ந்து பேசுகையில்,

``பெத்தநாயக்கன்பாளையத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிலத்தில் வேளாண்மை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்திரகவுண்டன்பாளையத்துக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள். அதேபோல, பெத்தநாயக்கம்பாளையம் தாலுகா அலுவலகத்தை புத்திரகவுண்டன்பாளையத்துக்குக் கொண்டுசெல்ல முயன்றார்கள். நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று மீட்டு, பெத்தநாயக்கன்பாளையத்துக்கே கொண்டுவந்திருக்கிறோம்.

`கவரிங் நகைகளுக்கு ரூ. 2 கோடி கடன்!'- கூட்டுறவு வங்கிக்கு அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க நிர்வாகி

தாலுகா அந்தஸ்தில் இருக்கும் பெத்தநாயக்கன்பாளையத்துக்குத் தொழிற்பேட்டையைக் கொண்டு வராமல் புத்திரகவுண்டன்பாளையத்திலிருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் சாலையில் துணை மின்நிலையம் அருகே இந்தத் தொழிற்பேட்டை அமைய உள்ளது. இந்த துணை மின்நிலையத்திற்கு எதிரே கிழக்குப்புறத்தில், இளங்கோவனுக்குச் சொந்தமாக சுமார் 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பை அதிகரிக்கவே, இந்த இடத்தில் தொழிற்பேட்டையை அமைக்க இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன்
எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன்

சேலத்தைப் பொறுத்தவரை நிழல் முதல்வராக வலம்வருகிறார் இளங்கோவன். அவருக்காகவே இப்படியொரு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெத்தநாயக்கன்பாளையத்தைப் புறக்கணித்துவிட்டு, கூட்டுறவு இளங்கோவனுக்குச் சாதகமாக புத்திரகவுண்டன்பாளையத்தில் தொழிற்பேட்டையை அமைக்க இருக்கிறார்கள்''என்று கொந்தளிக்கின்றனர்.

`உங்களுக்காகத்தான் புதிய தொழிற்பேட்டை அமைகிறது என குற்றம் சாட்டுகிறார்களே?' என கூட்டுறவு இளங்கோவனிடமே கேட்டோம். '' தற்போது ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன். இப்போதைக்கு எதுவும் பேச முடியாது" என்றதோடு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

Vikatan
பின் செல்ல