சேலம் தாரமங்கலம் அருகே கடந்த 30 ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது தினசரி மார்கெட். நகராட்சி ஆணையரின் மேற்பார்வையில் இயங்கக்கூடிய இந்த மார்கெட்டில், டெண்டர் அடிப்படையில் கடைகள் ஏலம் விடப்படுகின்றன. அவ்வாறு விடப்பட்ட கடைகளில் அதிக வரி கேட்டு குத்தகை தாரர்கள் மிரட்டுவதாக வியாபாரிகள் நேற்றைய தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வியாபாரிகளிடம் பேசியபோது, ``தாரமங்கலம் மார்க்கெட்டில் மொத்தம் 60 கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் மொத்த வியாபாரம் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால் லாபம் என்பது பெரிதாக இருக்காது. அதனால், நகராட்சி நிர்வாகம் கடைக்காரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிர்ணய வரித்தொகையை வசூலித்து வருகிறது. ஒரு கடைக்காரர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வரி கட்டி வந்த நிலையில், தற்போது 500 ரூபாய் கட்டி வருகிறோம்.

இதுகுறித்து வரி வசூல் செய்யக்கூடிய குத்தகை தாரர் ஆனந்தனிடம் கேட்டால், அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதாகவும், நகராட்சி நிர்ணயித்த தொகை கட்டுப்படியாகவில்லை என்றும் கூறுகிறார். மேலும் வியாபாரிகள் உடல்நலக்குறைவு காரணமாகக் கடையைத் திறக்காவிட்டால், எத்தனை நாள்கள் கடை திறக்கவில்லையோ, அதற்கும் சேர்த்து பணம் கட்டினால் மட்டுமே கடை போட விடுகின்றனர். அரசு நிர்ணயித்த வரியை விட 4 மடங்கு அதிகம் கேட்கிறார்கள். அதனால், எங்களுக்கு முதல் கூட மிஞ்சுவதில்லை" என்று புலம்பினார்கள்.
வியாபாரிகளின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து நகராட்சி ஆணையர் மங்கையக்கரசனிடம் கேட்டோம். ``இதுகுறித்து புகார் எதுவும் எனக்கு வரவில்லை. நேற்று நடந்த பிரச்னை குறித்து வியாபாரிகளிடம் எனக்கு மனு கொடுக்க சொல்லிருக்கிறேன். அதன்படி கண்டிப்பாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.