Published:Updated:

`இனி நாங்கள் எப்படி கட்சிப் பணியாற்ற முடியும்?' - கொதிக்கும் வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள்

வீரபாண்டி ராஜா ஆதரவாளர்களின் போராட்டம்
வீரபாண்டி ராஜா ஆதரவாளர்களின் போராட்டம் ( எம்.விஜயகுமார் )

சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து ராஜா நீக்கப்பட்டது அம்மாவட்ட தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து 3வது நாளாக ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள், ``கலைஞர் மகன் ஸ்டாலின், கட்சித் தலைவர். ஸ்டாலின் மகன் உதயநிதி மாநில இளைஞரணி செயலாளர். இது நியாயம். ஆனால், சேலம் வீரபாண்டியார் மகன் ராஜா மாவட்டப் பொறுப்பாளராக இருப்பது அநியாயமா?'' என்ற கோஷங்களை எழுப்பி தங்கள் உறுப்பினர் அட்டையைக் கிழித்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

ராஜா
ராஜா

தி.மு.க தலைமை கழகம் வீரபாண்டி ராஜாவை சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியை அளித்தது. அதையடுத்து ராஜாவின் ஆதரவாளர்களான கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் எனப் பலரும் கட்சியை விட்டு விலகி இருக்கிறார்கள்.

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தி.மு.க அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது திலிப் என்பவர் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் தடுத்து அவரைக் காப்பாற்றினர். திலிப்பிடம் பேசினோம்.``நான் வீரபாண்டியாரின் தீவிரத் தொண்டன். ஓசூரிலிருந்து நாமக்கல் வரை தி.மு.க என்ற கட்சியை வளர்த்தவர் எங்க வீரபாண்டியார். அவருடைய மகன் ராஜா அண்ணன் வகித்து வந்த மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இனி நாங்கள் எப்படி கட்சிப் பணியாற்றுவோம்.

திலிப்
திலிப்

உண்மையாகவும், நேர்மையாகவும் கட்சிப் பணியாற்றிய ராஜா அண்ணனை மாவட்டப் பொறுப்பிலிருந்து நீக்கியது எந்த விதத்தில் நியாயம்? சில ஒன்றியச் செயலாளர்கள் செய்த தவறுக்கு அண்ணன் எப்படிப் பொறுப்பேற்க முடியும். கட்சித் தலைமையின் இந்தச் செயல் எங்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. தலைமை ஆலோசனை செய்து மீண்டும் ராஜா அண்ணனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும்'' என்றார்.

வாழப்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டப் பிரதிநிதி பாலாஜி, ``சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து ராஜா அண்ணனை நீக்கியதையடுத்து தி.மு.கவிலிருந்து பலரும் வெளியேறி இருக்கிறோம். மூத்த நிர்வாகிகளான அத்தனூர்பட்டி ராமச்சந்திரன், பழனியாப்புரம் மாது, வாழப்பாடி கோபிநாத், ஆத்தூர் சுரேஷ் போன்றவர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையைக் கிழித்துப் போட்டிருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

ராஜா அண்ணனைத் தலைமை நீக்கியது தவறான முடிவு. இதனால், சேலத்தில் தி.மு.க பெரும் சரிவைச் சந்திக்கும். அதனால் மீண்டும் ராஜா அண்ணனை கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு