சமாஜ்வாடி கட்சித் தலைவர் மணீஷ் ஜெகன் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் தாஜ் மஹாலுக்குப் பின்னால் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளைச் சுட்டிக் காண்பித்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் யோகி ஆதித்யநாத் அரசை குற்றம்சாட்டி ட்வீட் பதிவிட்டிருந்தார். அவரின் அந்த ட்விட்டர் பதிவில், "மாநில பா.ஜ.க அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காண்பிக்கவேண்டிய கட்டாயத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இருக்கிறார்கள்.
பா.ஜ.க ஆட்சியில் யமுனாவில் அசுத்தம் நிரம்பி, தாஜ் மஹாலின் அழகுக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பா.ஜ.க அரசின் இயலாமையை, தவற்றை சுட்டிக்காட்டுவது மிகவும் வெட்கக்கேடானது" என்று ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் லிசிப்ரியா என்றும், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், லிசிப்ரியா மணீஷ் ஜெகன் அகர்வால் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து, ``மிக்க நன்றிகள்... நான் வெளிநாட்டு பயணியல்ல. நான் ஒரு பெருமைமிகு இந்தியர்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதன் பிறகு சமாஜ்வாடி கட்சித் தலைவர் மணீஷ் ஜெகன் அகர்வால் ட்விட்டர் பதிவில் யமுனை நதியின் அசுத்தங்களைச் சுத்தப்படுத்த வேண்டும் என சமூக வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
