Published:Updated:

சிக்னல் கொடுக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது!

சரத்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சரத்குமார்

சசிகலா சந்திப்பு... சமாளிக்கும் சரத்குமார்

தி.மு.க - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அ.தி.மு.க தரப்பிலோ இதுவரையிலும் எந்தவித ரியாக்‌ஷனும் இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தே.மு.தி.க-வும் பொங்கி முடித்து ஓய்ந்துவிட்டது. இந்தநிலையில், ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’யின் நிறுவனத் தலைவர் சரத்குமாரைச் சந்தித்தோம்...

‘‘ ‘சீமான், சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம்’ என அழைப்பு விடுத்திருக்கும் கமல்ஹாசனுக்கு நீங்கள் பதில் ஏதும் சொல்லவில்லையே?’’

‘‘கமல்ஹாசன் அழைப்பை நான் வரவேற்கிறேன். ஆனால், ‘அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்வழியே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில்தான் ச.ம.க என்ற கட்சியையே ஆரம்பித்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது ‘எதற்காகக் கூட்டணி சேர வேண்டும்’ என்று சிந்திப்பவன் நான்.’’

‘‘ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க கூட்டணியில்தானே ச.ம.க அங்கம் வகித்துவருகிறது?’’

‘‘உண்மைதான்! தற்போதும்கூட, ‘அ.தி.மு.க கூட்டணி அப்படியே தொடர்கிறது’ என்றுதான் முதல்வரும் அறிவித்திருக்கிறார். ஆனாலும்கூட, ஒரு சீட், இரண்டு சீட் என்று நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தை இம்முறை நாங்கள் பிரதிபலித்திருக்கிறோம். மேலும், ‘தனிச் சின்னத்தில் போட்டியிடுவதுதான் நல்லது’ என்ற எங்கள் நிலைப்பாட்டையும் தொடர்ந்து சொல்லிவருகிறோம். எனவே, கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தை வரும்போது, இதையெல்லாம் ச.ம.க வலியுறுத்தும்!’’

சரத்குமார்
சரத்குமார்

‘‘தே.மு.தி.க கூறுவதுபோல், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் அ.தி.மு.க சுணக்கம் காட்டுவதாக நினைக்கிறீர்களா?’’

‘‘ஆமாம்... இந்த நேரத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தொடர்ந்து இந்தக் குழப்பநிலை நீடித்துவருவதால்தான் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவும் ‘ஏன் இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?’ என வெளிப்படையாகக் கேட்டேவிட்டார். உடனே த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் இது குறித்துக் கருத்து சொல்கிறார். ஜி.கே.வாசன் என் நண்பர்தான். ஆனாலும், இந்த விஷயத்தில் அவருக்குக் கருத்து சொல்லும் அதிகாரம் இருக்கிறதா என்ன? இவர்களெல்லாம் சிபாரிசு செய்யும் அளவுக்கு தே.மு.தி.க-வும் இல்லையே!’’

‘அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்கிறார்களே?’’

‘‘கூட்டணியில் யார் முக்கியம், யாரெல்லாம் முக்கியமில்லை என்று அ.தி.மு.க ஒரு கணிப்பை வைத்திருக்கலாம். அந்த கணிப்புகளெல்லாம் மாறவும் செய்யலாம். அதனால், இன்றைக்கு இருக்கிற அந்த முக்கியத்துவம் நாளை இல்லாமலும் போகலாம்!’’

‘‘அ.தி.மு.க கூட்டணியில், ச.ம.க-வுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்தான் நீங்களும் சசிகலாவை நேரில் சந்தித்தீர்களா?’’

‘‘இல்லையில்லை... அ.தி.மு.க கூட்டணியில் தொடர்ந்து 10 வருடங்களாகப் பயணித்து வருகிறோம். அந்த வகையில் சசிகலாவையும், அவரின் உறவினர்களையும் எனக்கு நன்கு தெரியும். ஏற்கெனவே உடல்நலமின்றி இருந்த சசிகலாவை நலம் விசாரிப்பதற்காக மட்டுமே அவரை நேரில் சந்தித்தேன். மற்றபடி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு எங்களை இன்னும் அழைக்க வில்லை என்பதற்காக ‘சிக்னல்’ கொடுக்கும் பழக்கமெல்லாம் என்னிடம் கிடையாது!’’

‘‘எந்தச் சூழ்நிலையிலும் தி.மு.க கூட்டணியில் இணையக் கூடாது என்பதில் ச.ம.க உறுதியாக இருப்பது ஏன்?’’

‘‘சரத்குமாரை நம் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதில் தி.மு.க எப்படி உறுதியாக இருக்கிறதோ, அதே உறுதியோடு ‘தி.மு.க கூட்டணியில் சேரக் கூடாது’ என்று நானும் இருக்கிறேன்!’’

‘‘தி.மு.க கூட்டணிக்குள் ச.ம.க செல்ல முடியாது என்பதாலேயே அ.தி.மு.க-வும் உங்களை உதாசீனப்படுத்துகிறதா?’’

‘‘அதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். சரத்குமார் தேவைப்படாமலா இத்தனை ஆண்டுகளாக அ.தி.மு.க கூட்டணியில் வைத்திருக்கிறார்கள்? சரத்குமார் பிரசாரத்துக்குச் சென்றால், அவரைப் பார்ப்பதற்கும் அவர் சொல்வதைக் கேட்டு வாக்களிப்பதற்கும் குறிப்பிட்ட சதவிகித மக்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும்தானே!

அ.தி.மு.க எனும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். தி.மு.க-வை எதிர்த்து ‘ஊழல் குற்றச்சாட்டு மனு’வை ஆளுநரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சென்றபோது இருந்த கூட்டத்தில் கல்லூரி மாணவனான நானும் ஒருவன். இன்றைய அ.தி.மு.க-வினருக்கு இதெல்லாம் தெரியுமா?’’

“ச.ம.க, மூன்றாவது அணியில் இணையும் வாய்ப்பு இருக்கிறதா?”

“கூட்டணி குறித்து அ.தி.மு.க-விலிருந்து அழைத்துப் பேசுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவர்கள் அழைக்காவிட்டாலும், பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படாவிட்டாலும்கூட தேர்தலை நாங்கள் புறக்கணித்துவிட முடியாது. தனித்து நிற்பதற்கும்கூட தயாராகவே இருக்கிறோம். தேர்தலில், நாங்கள் நோட்டாவைவிடக் குறைவான வாக்குகள் வாங்குகிறோமா அல்லது பெரும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறோமா என்பதை மக்களே தீர்மானிக்கப்போகிறார்கள். கட்சியின் பொதுக்குழு முடிவுக்குப் பிறகுதான் முழுமையாகச் சொல்ல முடியும்!’’

“ச.ம.க-வின் முதன்மை துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமாருக்குப் பதவி கொடுக்கப்பட்டிருப்பது, வாரிசு அரசியல்தானே?’’

“அவருக்கு நீண்ட நெடிய அரசியல் அனுபவம் இருக்கிறது. தகுதியின் அடிப்படையில்தான் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. என் மகன் படித்துக்கொண்டிருக்கிறான். அவனைக் கொண்டுவந்து, ‘பொதுச்செயலாளர் இவர்தான்’ என்று சொன்னால், யாராவது ஒப்புக்கொள்வார்களா? நாங்கள் அப்படிச் செய்யவில்லையே!’’