Election bannerElection banner
Published:Updated:

தி.மு.க-வின் மாதிரி வேட்பாளர் பட்டியல் - உற்சாகத்தில் உதயநிதி... உதறலில் உடன்பிறப்புகள்!

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்

தி.மு.க-வின் வேட்பாளர்கள் பட்டியலில் 45 வயதுக்குக் குறைவானவர்களே அதிகம் இடம்பெறும் வகையில் மாதிரிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க-வுக்கு எதிராக பா.ஜ.க தரப்பில் அஸ்திரத்தை ஏவிவரும் நிலையில், கட்சியை வலுப்படுத்தவும், சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் காணவும் தீவிரமான வேலைகள் கட்சிக்குள் நடந்துவருகின்றன.

தி.மு.க-வின் தேர்தல் வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாகத் தமிழகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் பணியாளர்கள் கள ஆய்வு செய்துவருகிறார்கள். மாவட்ட வாரியாகவும், தொகுதிவாரியாகவும் தி.மு.க-வின் பலம் பலவீனம், நிர்வாகிகளின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டு வருகிறார்கள். மற்றொருபுறம் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தரப்பும் மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர் அமைப்பின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராகவும், தலைமை நிலையச் செயலாளராகவும் இருந்த கு.க.செல்வம் பா.ஜ.க ஆதரவாளராக மாறியது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் களம் இறங்கப்போகிறார்” என்று கு.க.செல்வத்துக்கு உறுதியாக வந்த தகவல்தான் அவர் அணி மாறியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே சில முடிவுகளை செல்வம் எடுத்தார் என்கிறார்கள். இதை தி.மு.க தரப்பிலும் உறுதிப்படுத்துகிறார்கள். அதற்குள் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டார்களா என்று தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

கடந்த மூன்று மாதங்களாகவே ஒவ்வொரு தொகுதியாக அலசி ஆராய்ந்துவருகிறது ஐ.பேக் டீம். அந்த டீம் ஏற்கெனவே ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் பட்டியலைத் தயார் செய்து தலைமைக்குக் கொடுத்துள்ளார்கள்.

அந்தப் பட்டியலில் ஐந்து முக்கிய காரணிகளை மையமாக வைத்துள்ளார்கள். ஒரு வேட்பாளரின் சமூகம் முதலில் ஆராயப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்குத் தேர்வு செய்யப்படும் வேட்பாளர் அந்தத் தொகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதைத் தங்களுக்கு சாதகமான தகுதியாகப் பார்க்கிறார்கள். அடுத்தகட்டமாக, அந்தத் தொகுதியில் சம்பந்தப்பட்ட நபருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு என்ன என்கிற கள ஆய்வை தனியாக நடத்துகிறார்கள். மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் நபராகவும், தொண்டர்கள் வீட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நபராகவும் இருக்கிறாரா என்பனவற்றையெல்லாம் விசாரிக்கிறார்கள்.

பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்

இந்த இரண்டு காரணிகளை ஆராய்ந்து முடித்த பிறகு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் அவரால் எவ்வளவு செலவு செய்ய முடியும், அவரது வசதி வாய்ப்புகள், குடும்பச் சூழ்நிலை உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்துச் சேர்க்கிறார்கள். முக்கியமாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக தி.மு.க எதிர்க்கட்சியாகவே இருப்பதால் பல தி.மு.க நிர்வாகிகள் ஆளும்கட்சியினருடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அதை வைத்து கரன்சிகளை கல்லாக்கட்டி வருகிறார்கள். இதனால் பல இடங்களில் அ.தி.மு.க-வின் அதிரடிக்கு எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. அ.தி.மு.க-வுடன் உறவாடுபவர்கள் இந்த முறை தேர்தல் களத்தில் நின்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க தலைமை. அதையும் ஐ.பேக் நிறுவனம் உளவு பார்த்து வருகிறது.

அதேபோன்று தி.மு.க 2011-ம் ஆண்டுத் தேர்தலில் பெரும் சரிவை சந்திக்கக் காரணம் தி.மு.க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட அராஜகப் போக்கு. எனவே, இந்த முறை வேட்பாளராகக் களத்தில் நிற்பவர்களுக்கு பொதுமக்களிடம் உள்ள இமேஜ் மற்றும் அவரது தொழில் பின்புலமும் தனியாக ஆராயப்படுகிறது. இந்த விவரங்களை மட்டும் தனியாக ஸ்டாலின் தன்வசம் ஒப்படைக்கச் சொல்லியுள்ளார். காரணம் தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் பலரது பின்புலமும், தொழில்களுமே சிக்கலுக்குரியவையாக இருப்பதால் இந்த சர்வே விவரங்கள் சம்பந்தவர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று தலைவர் தரப்பிலிருந்து கடுமையாக உத்தரவு வந்துள்ளது. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகிய மூவருக்கு மட்டுமே இந்த விவரங்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்துள்ளது ஐ.பேக் டீம். இந்தப் பட்டியலில் தங்கள் பெயர் இருக்குமோ என்கிற அச்சத்தில் மூத்த நிர்வாகிகளே கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஐந்து அடிப்படை காரணங்களை வைத்து ஐ.பேக் நிறுவனம் பட்டியலைத் தயார் செய்துவருகிறது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு என்கிற முடிவில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். எனவே, இளைஞர் அணியின் நிர்வாகிகள் பல தொகுதிகளிலும் களம் இறங்க உள்ளார்கள். அந்தப் பட்டியலை உதயநிதி தரப்பு தயார் செய்துள்ளது. இதைத்தாண்டி கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்று தனிப்பட்டியலும் உள்ளது.

அந்தப் பட்டியலோடு, ஐ.பேக் நிறுவனம் தரும் பட்டியலையும் சேர்த்து இறுதிப் பட்டியலைத் தயார் செய்ய இருக்கிறார் ஸ்டாலின். கருணாநிதி காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கு ஒரு பட்டியலை வழங்குவார்கள். இந்த முறை ஸ்டாலின் அவரின் மகன், மருமகன் ஆகியோர் தாண்டி குடும்பத்தினர் தலையீடு வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. இதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஐந்து பேரை முதற்கட்டமாக இப்போது தேர்வு செய்துள்ளார்கள். சில தொகுதிகளுக்கு மட்டும், தங்கள் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் ஒருவரையே வேட்பாளராக முடிவு செய்துள்ளார்கள்.

இந்த, மாதிரிப் பட்டியலில் இருந்துதான் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர்களை உறுதி செய்ய இருக்கிறார்கள். ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதியைக் களமிறக்க அவர்கள் குடும்பத்தினர் விரும்பியுள்ளார்கள். அதேபோல, அன்பில் மகேஷ், சிற்றரசு, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட உதயநிதிக்கு நெருக்கமானவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள் என்கிறார்கள் இளைஞர் அணியின் தரப்பினர்.

 நேர்காணலில் ஸ்டாலின்
நேர்காணலில் ஸ்டாலின்
உச்சத்தில் ஐபேக் - தி.மு.க ஐ.டி விங் மோதல்... திணறும் ஸ்டாலின்!

தி.மு.க-வின் வேட்பாளர்கள் 45 வயதுக்குக் குறைவானவர்களே அதிகம் இடம்பெறும் வகையில் அந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி இருந்தவரை, நேர்காணல் முதலில் நடக்கும். அதில் வேட்பாளர்கள் பட்டியல் `ஷார்ட் லிஸ்ட்’ செய்யப்படும். அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனைகள் ஆகியவை நடைபெறும். பிறகு, தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்படும்.

ஆனால் இந்த முறை, பெரும்பாலான தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஸ்டாலின் தரப்பு இப்போதிலிருந்து உறுதி செய்யவிருக்கிறார்கள். அதன்பிறகு அவர்களுடன் நேர்காணல் உள்ளிட்ட வழக்கமான விஷயங்கள் அரங்கேற உள்ளது. கடைசி நேரத்தில் மாற்றம் தேவை என்றால் மட்டும் வேட்பாளர்கள் மாற்றப்படுவர். இதைத்தவிரக் கட்சியிலும் சில புதிய பொறுப்புகளும் உருவாக்கப்பட உள்ளன. விரைவில் இவை குறித்த அறிவிப்புகள் எல்லாம் வெளியாக இருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு