Published:Updated:

நெடுஞ்சாலைப் பணியின்போது விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளர்கள் - மாநகராட்சிமீது எழுந்த குற்றசாட்டு

விபத்து

`முதல்வர் நிகழ்ச்சிக்காக எந்தவிதப் பாதுகாப்பு முறையையும் பின்பற்றாமல் தூய்மைப் பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தியதே விபத்துக்குக் காரணம்!' - திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாறன்

நெடுஞ்சாலைப் பணியின்போது விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளர்கள் - மாநகராட்சிமீது எழுந்த குற்றசாட்டு

`முதல்வர் நிகழ்ச்சிக்காக எந்தவிதப் பாதுகாப்பு முறையையும் பின்பற்றாமல் தூய்மைப் பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தியதே விபத்துக்குக் காரணம்!' - திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாறன்

Published:Updated:
விபத்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 28-ம் தேதி திருச்சிக்கு வருகைதந்து நலத்திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார். இதற்காக, முதல்வர் வந்திறங்கும் திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சுத்தம் செய்யும் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை திருச்சி ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் ஓரமாக உள்ள மண்ணைச் சுத்தம் செய்வதற்கான வேலைகள் நடந்திருக்கின்றன. இதற்காக திருச்சி மாநகராட்சி, மண்டலம் 2, வார்டு 20-ல் உள்ள தாழம்பூ சுயஉதவிக்குழுவில் பணிபுரியும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை வரவழைத்திருக்கின்றனர். அவர்கள் மாநகராட்சியின் பேட்டரி வாகனத்தை சென்டர் மீடியனை ஒட்டி நிறுத்திவிட்டு, சாலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு வந்த கார் ஒன்று, சென்டர் மீடியன் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாநகராட்சி பேட்டரி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது.

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்
நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியில் தூய்மைப் பணியாளர்கள்

இதில், பேட்டரி வாகனத்தை ஒட்டி நின்றிருந்த தூய்மைப் பணியாளர்களான செல்வி, குணசுந்தரி, மாரியப்பன் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். கை கால் எனப் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதையடுத்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எந்தவிதப் பாதுகாப்பும், மேற்பார்வையும் இல்லாமல், தூய்மைப் பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்தியதே விபத்துக்குக் காரணம் என மாநகராட்சி நிர்வாகம்மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது குறித்து திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் (CITU) மாறனிடம் பேசினோம். “திருச்சி ஏர்போர்ட்டுக்கு முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் யாராவது வருகிறார்கள் என்றால் எப்போதுமே அந்தப் பகுதியை, மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களை வைத்து சுத்தப்படுத்தும். முதலில் அதுவே தவறு. ஏனென்றால், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தச் சாலையை, நெடுஞ்சாலைத்துறையின் ஆட்களை வைத்துத்தான் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், நெடுஞ்சாலைகளில் சாலைப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்யும்போது இத்தனை மீட்டருக்கு முன்பு சவப்புக்கொடி கட்ட வேண்டும், ரிஃப்ளெக்டர்கள், எச்சரிக்கைப் பலகை போன்றவற்றை வைக்க வேண்டும், ஒரு மேற்பார்வையாளர் இருக்க வேண்டும் எனச் சில வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படியான எந்தப் பாதுகாப்பு வழிமுறையையும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை. இதனால்தான் இந்த விபத்தும் நடந்திருக்கிறது” என்றார்.

விபத்தில் காயமடைந்த தூய்மைப் பணியாளர்
விபத்தில் காயமடைந்த தூய்மைப் பணியாளர்

தொடர்ந்து பேசியவர், “விபத்து நடந்த ஏர்போர்ட் பகுதி பொன்மலை மண்டலம் பகுதிக்குள் இருக்கிறது. ஆனால், முதல்வர் வருகிறார் என்பதற்காக அரியமங்கலம் மண்டலத்திலிருந்து சம்பந்தமேயில்லாமல் தூய்மைப் பணியாளர்களை அழைத்து வந்து வேலை வாங்கியிருக்கின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று தூய்மைப் பணியாளர்களுக்கும் உரிய சிகிச்சை மற்றும் அவர்களது பாதிப்புக்கு ஏற்றவாறு உரிய நிவாரணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும், பாதுகாப்பு குறைவாக தூய்மைப் பணியாளர்களை வேலையில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.