Published:Updated:

பா.ஜ.க-வுக்கு கெடு; காங்கிரஸ் உடன் டீல்? - சிவசேனாவின் ஆக்‌ஷன் பிளான் என்ன?

``அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில், பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைத்துள்ளனர். ஆனால், இத்தனை நாள்களாக பா.ஜ.க ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை.''

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

நாளொரு திட்டம்; பொழுதொரு காட்சியாக மகாராஷ்டிரா அரசியல் தினமும் தகித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து நாள்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. எனினும், ஆட்சி யாருக்கு என்பதில் விடை கிடைத்தபாடில்லை. மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில், ஆட்சியமைக்க வருமாறு பா.ஜ.க -வுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆளுநர் அழைப்பு விடுத்து 24 மணி நேரம் நெருங்கப்போகிறது. ஆனாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உள்ளதால், மற்ற மாநிலங்களில் தைரியமாக செயல்பட்டதைப்போல இங்கு செயல்பட பா.ஜ.க தாமதம் காட்டி வருகிறது.

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

ஆளுநரின் அழைப்பை அடுத்து, இன்று மும்பையில் பா.ஜ.க-வின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ஆட்சியமைப்பதுகுறித்து பா.ஜ.க முக்கிய முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. அவர்களின் முடிவுக்குப் பிறகே மகாராஷ்டிரா அரசியலின் அடுத்த கட்டம் குறித்து தெரியவரும். இதற்கிடையே, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``ஆளுநரின் அழைப்பை சிவசேனா வரவேற்கிறது. அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க-வை ஆட்சி அமைக்க அழைத்துள்ளனர். ஆனால், இத்தனை நாள்களாக பா.ஜ.க ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

பா.ஜ.க-வுக்கு நம்பிக்கை இருந்தால் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதானே. என்னைப் பொறுத்தவரை ஆட்சி அமைக்கும் வலிமை பா.ஜ.க-வுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். நவம்பர் 11-ம் தேதி இரவு 8 மணிக்குள் பா.ஜ.க-வின் முடிவு குறித்து அறிவித்துவிடுங்கள் என்று கூறிவிட்டோம். எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை எங்கள் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பின், ஆட்சி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுப்போம்" என்றவரிடம், ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் டீல் பேசப்படுகிறதா... தேர்தலுக்குப் பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் குறித்து சிவசேனா விமர்சிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

அதற்கு, ``பா.ஜ.க போல் குதிரை பேரத்தில் எல்லாம் நாங்கள் ஈடுபடப்போவதில்லை. லாபம், நஷ்டம் கணக்கு பார்த்து செயல்படுவதற்கு அரசியல் ஒன்றும் வியாபாரம் அல்ல. சிவசேனா அகராதியில் அரசியலில் லாபம், நஷ்டம் என்ற வார்த்தை இல்லை. எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி செல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். எந்தக் கட்சியையும் உடைத்து எம்.எல்.ஏ-க்களை இழுக்க முயன்றால், அது இந்த மாதிரியான நேரத்தில் பயன்தராது. எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் அகந்தை, அகங்காரம் மிகுந்த போக்கு நீண்ட காலத்துக்கு மகாராஷ்டிராவில் எடுபடாது. நீர்க்குமிழி நீண்ட நேரத்துக்கு இருக்காது; உடைந்துவிடும்.

சரியான நேரத்தில், எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரே தகுந்த முடிவை எடுப்பார். யாராலும் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில், சிவசேனாவின் செயல்திட்டம் அறிவிக்கப்படும். அதுவும் விரைவில்... சிவ் ஷைனிக் (சிவசேனா உறுப்பினர்) ஒருவர்தான் முதல்வராக வர உள்ளார் என்பதை ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டோம். தேர்தலுக்குப் பின் பா.ஜ.க-வைக்கூட நாங்கள் விமர்சிக்கவில்லை. தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது தேவையற்ற ஒன்று. சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஒன்றும் மகாராஷ்டிராவுக்கு எதிரி அல்ல. அந்தக் கட்சியும் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்கு உழைத்துள்ளது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதனால் நிலையான ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தால், அதை சிவசேனா வரவேற்கும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் மற்ற கட்சியுடன் முரண்பட்டதுதான். சிவசேனாவுக்கும் பா.ஜ.க-வுக்கும்கூட முரண்பாடு இருக்கிறது. எல்லைப் பிரச்னை தொடர்பாக கர்நாடக பா.ஜ.க-வுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முரண்பாடு இருக்கிறது" என்று பேசினார்.