Published:Updated:

சங்கரன்கோவில்: 30 ஆண்டுகளாக அ.தி.மு.க-வின் கோட்டை... சரிந்த வரலாறு!

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

1996 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றபோதும், தமிழகத்தின் நான்கு தொகுதிகளில் மட்டுமே அந்தக் கட்சி வென்றபோதும் அவற்றில் ஒரு தொகுதியாக சங்கரன்கோவில் இருந்தது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் யார் அமர்ந்தாலும் சரி, சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அ.தி.மு.க-வின் கொடிதான் பறக்கும். 96 சட்டமன்றத் தேர்தலில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றபோதும், தமிழகத்தின் நான்கு தொகுதிகளில் அந்தக் கட்சி வென்றபோதும் அவற்றில் ஒரு தொகுதியாக சங்கரன்கோவில் இருந்தது. அந்த அளவுக்கு `அ.தி.மு.க-வின் கோட்டை’ என்றே சங்கரன்கோவிலை நாம் வர்ணிக்க முடியும். ஆனால், இந்த முறை, தி.மு.க-விடம் 11,297 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது அ.தி.மு.க.

அமைச்சர் ராஜலெட்சுமி
அமைச்சர் ராஜலெட்சுமி

அ.தி.மு.க சார்பில், கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு அமைச்சரான ராஜலெட்சுமி மீண்டும் போட்டியிட்டார். தி.மு.க சார்பில் ராஜா போட்டியிட்டார். இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,52,939 பேர். இந்தத் தொகுதியில் 71 சதவிகித வாக்குகள் பதிவாகின. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜா, 71,347 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அமைச்சர் ராஜலெட்சுமி 60,050 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

Vikatan

தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும்போதே, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி, அமைச்சர் ராஜலெட்சுமிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை எனப் பல ஊர்களில் ஊருக்குள் வர விடாமல் மக்கள் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமல்ல, இந்தத் தொகுதியில், அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை, 22,682 வாக்குகளைப் பெற்றதும் ராஜலெட்சுமியின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

1989 அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டு போட்டியிட்ட தேர்தலுக்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் இங்கு அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு