Election bannerElection banner
Published:Updated:

செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு சிறை - என்ன நடந்தது?

சரத்குமார் ராதிகா
சரத்குமார் ராதிகா

மொத்தம் உள்ள 7 வழக்குகளில், சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில், தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார், பங்குதாரர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செக் மோசடி வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான வழக்குகளை நடத்தும் சிறப்பு நீதிமன்றம் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கும் அவரது மனைவி ராதிகாவுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இருவரும் பங்குதாரர்களாக உள்ள ‘மேஜிக் ஃபிரேம்ஸ்' மற்றும் ‘ரேடான் மீடியா' குரூப் நிறுவனம், சினிமா தயாரிப்பதற்காக வருண் மணியனின் ‘ரேடியன்ஸ் மீடியா' என்ற நிறுவனத்திடம் கடந்த 2014-ஆம் ஆண்டு பெற்ற ரூபாய் 2 கோடி கடனுக்காக மொத்தம் 7 செக்குகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த செக்குகளை வைத்து வங்கியில் கடன் தொகையை பெற வருண் மணியன் தரப்பில் முயன்ற போது வங்கிக் கணக்கில் போதிய பணமில்லை என அவை திரும்பி வந்துள்ளன. இதனால், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் மற்றும் இவர்களுடன் பங்குதாரராக உள்ள ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 7 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மொத்தம் உள்ள 7 வழக்குகளில், சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில், தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார், ராதிகா சரத்குமார், பங்குதாரர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ராதிகாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார் நீதிபதி அலீசியா.

சரத்குமார்
சரத்குமார்

``தனக்கு கொரோனா இருப்பதால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை” என்று ராதிகா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் மூன்றாண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை என்பதால், மேல் முறையீடு செய்யும்வரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார், லிஸ்டன் ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து இருவரது சிறை தண்டனையையும் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டுச் சிறை! - சென்னை சிறப்பு நீதிமன்றம் #NowAtVikatan

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரத்குமார், ``சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நான் எதிர்பார்க்கவில்லை. ஜூன் 2019-இல் தான் அக்ரிமெண்டே முடிகிறது. அதற்கு முன்னரே செக்கை வங்கியில் போட்டுவிட்டனர் என்று நாங்கள் வாதிட்டோம். அதுமட்டுமல்ல ஏதும் பிரச்னை இருந்தால் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அக்ரிமெண்டிலேயே இருக்கிறது. ஆனால், இவர்கள் செக் பவுன்ஸை, வழக்காக கொண்டுவந்துவிட்டனர். 1.5 கோடி ரூபாய் கடனுக்காக 2 கோடிக்கு வங்கி உத்திரவாதப் பத்திரமும், என்னுடைய 4.5 கோடி மதிப்பிலான சொத்துக்குரிய பத்திரமும் அவர்களிடம் இருக்கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை" என்றவர்...

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

``இப்படி ஒரு தீர்ப்பே வந்திருக்கக் கூடாது. வழக்கை தள்ளுபடி தான் செய்திருக்க வேண்டும். இதை தள்ளுபடி செய்வார்கள் என்றுதான் நானும் நீதிமன்றமே வந்தேன். ஆனால், தீர்ப்பு இப்படி வந்திருப்பதை எதிர்ப்பார்க்கவில்லை. சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

ராதிகா மற்றும் சரத்குமார் மீதான செக் மோசடி வழக்கின் விவரங்கள் குறித்து விசாரணையில் இறங்கினோம்...

2014-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘இது என்ன மாயம்’ என்ற படத்தை தயாரிக்க ராதிகா மற்றும் சரத்குமார் பங்குதாரர்களாக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம், ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ. 1.5 கோடி கடனாக பெற்றது. இந்தக் கடனை 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திரும்பத் தருவதாகவும், தொலைக்காட்சி மற்றும் சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ரேடியன் நிறுவனத்திற்கு தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஆனால், சரத்குமார் தரப்பு கடனைத் திருப்பிக் கொடுக்காமல் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த ஆதம்தாசன் இயக்கத்தில் ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தனர். அந்தப்படம் 2017 ஆண்டே திரைக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் ஒளிபரப்பு உரிமையையும் ரேடியன்ஸ் நிறுவனத்துக்கு தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ‘குறிப்பிட்ட தேதியில் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை’ என வருண் மணியன் தரப்பில் சரத்குமார், ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக 2019-ஆம் ஆண்டில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.

வருண் மணியன்
வருண் மணியன்
twitter

வழக்கு விசாரணையின்போது ``பணத்தைத் திரும்பத் தரக்கூடாது என நினைக்கவில்லை. 1.5 கோடி ரூபாய் அசலுக்கு வட்டியுடன் சேர்த்து 2.5 கோடி ரூபாய் வரை செலுத்தச் சொன்னார்கள். வட்டி கூடுதலாக இருந்ததால் பணத்தை உடனே திரும்பத் தரமுடியவில்லை” என்று மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. ``செக் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் சரத்குமார், ராதிகா இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது” என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பிலேயே சரத்குமார் பேசிவிட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த தயாரிப்பாளர் வருண் மணியனின் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினோம். இப்போது பேச விருப்பமில்லை என்றும், பிறகு தொடர்பு கொள்வார் என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது. அவர் சார்பில் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு