Published:Updated:

`நரசிம்மராவின் பணிவும் மோடி அரசின் ஆணவமும்..!’- வெளியுறவுக் கொள்கையை விமர்சித்த சசி தரூர்

சசி தரூர்
சசி தரூர் ( @ShashiTharoor - Twitter )

`முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அண்டை நாடுகளுடன் நல்லுறவை மிகச்சிறந்த முறையில் கையாண்டார். தற்போதைய ஆளும் பா.ஜ.க இதைச் சிறப்பாகச் செய்யத் தவறிவிட்டது' என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, `இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான நரசிம்மராவின் பார்வை' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.

கருத்தரங்கு
கருத்தரங்கு
@ShashiTharoor - Twitter

இந்தக் கருத்தரங்கில் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``இந்தியா ஒரு பெரிய சக்தியாக அங்கீகரிக்கப்படுவதற்குத் தேவையான மாற்றங்களை பி.வி.நரசிம்மராவ் கொண்டுவந்தார். அவரின் லுக்-ஈஸ்ட் கொள்கை இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இந்தியாவிலுள்ள பல்வேறு உள்நாட்டுக் காரணிகளின் தாக்கத்தையும், பிரிவினைவாத இயக்கங்களையும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வழிவகுத்த பொருளாதார சீர்திருத்தங்களையும் கருத்தில்கொண்டு நரசிம்மராவ் உலகளாவிய கூட்டணிகளைத் திறமையாக நிர்வகித்தவர்.

சார்க் நாடுகளில் பி.வி.நரசிம்மராவ், தனது தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்தியா மேலாதிக்க நட்பான நாடாக இருப்பதை உறுதிசெய்தார்.
சசி தரூர்

கூட்டணிகளைத் திறமையாகக் கையாளும் திறமை, பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் தைரியம் இந்தியாவை வளர்சிப் பாதைக்குக் கொண்டு சென்றது என அவர் தனது புத்திகூர்மையால் சிறுபான்மை அரசாங்கத்தை வெற்றிகரமாகக் கையாண்டார். அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை அடைந்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.

இந்தியா 1991-ம் ஆண்டில் மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்தது. பி.வி.நரசிம்மராவ் என்ற அந்தச் சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவர்தான், நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு சென்றவர்’’ என்றார் சசி தரூர்.

சசி தரூர்
சசி தரூர்

நரசிம்மராவ் மற்றும் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சசி தரூர், ``நரசிம்மராவ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் காலத்தில் அண்டை நாடுகளை அமைதியாகவும், புரிந்துகொள்ளும் தன்மை மற்றும் தாழ்மையாகவும் அணுகினார். ஆனால், தற்போது ஆணவத்துடனும் பிளவுபடுத்தும் தன்மையுடனும் இந்த அரசு செயல்படுகிறது’’ என்றார். மேலும், ``ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என நரசிம்மராவ் எண்ணினால், எதுவுமே மாறாதது என்பதுபோல் மென்மையாக அந்த விஷயத்தை மாற்றிக்காட்டும் திறன் படைத்தவர்’’ என்றும் சசி தரூர் பாராட்டினார்.

இந்த கருத்தரங்கில் குழுத் தலைவர் ஜே.கீதா ரெட்டி, டிபிசிசி தலைவர் மற்றும் என்.உத்தும்குமார் ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், தெலங்கானா பொறுப்பாளர் குந்தியா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு