Published:Updated:

அ.தி.மு.க-வை நெருக்கும் சசிகலா ஆடியோக்கள்! - பின்புலமும் வியூகமும் என்னென்ன?

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

சசிகலாவின் ஆடியோ யுத்தமும், ஓ.பி.எஸ்-ஸின் அறிக்கை யுத்தமும் ஒரே புள்ளியில் இணைவது குறித்து, மூத்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை.

''நாங்க இங்க சென்னையில சின்னம்மா வீட்டுல இருந்து பேசுறோம்.இதோ அம்மா பேசுறாங்க... கொடுக்குறேன்'' என ஓர் ஆண் குரல் முதலில் பேச, பிறகு மறுபுறமிருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் கடந்த சில நாள்களாக இணையதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலான உரையாடல்களில், '' கட்சியைக் காப்பாற்ற நான் மீண்டும் களமிறங்குவேன்'' என்கிற தொனியிலேயே சசிகலா உரையாடிவருகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல... இதுவரை 23 ஆடியோ உரையாடல்கள் வெளிவந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்பாக `அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப்போகிறேன்’ என்று அறிவித்த சசிகலா, மீண்டும் களமிறங்கப்போவதாகப் பேசி வருவதன் பின்னனி என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்பாக, ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்.

சசிகலா
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுச் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. ஓசூரிலிருந்து சென்னை வரை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அவரின் ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்டது. பதினைந்து நாள்கள் வரை வெளியில் வராமல் இருந்த சசிகலா, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியில் வந்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றுவார் சசிகலா என அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபட வேண்டும்'' எனப் பேசியதை அவரின் ஆதரவாளர்களே எதிர்பார்க்கவில்லை. இது ஒருபுறமிருக்க, 'சசிகலா சிறையிலிருந்து வெளியானால், அ.தி.மு.க-வில் பல களேபரங்கள் வெடிக்கும்; பல நிர்வாகிகள் சசிகலாவின் பக்கம் வந்துவிடுவார்கள்' என சசிகலாவின் ஆதரவாளர்கள் சொன்னார்கள். ஆனால், அது போன்ற எந்தவொரு நிகழ்வும் நடைபெறவில்லை. தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வருவார்கள் எனச் சொன்னார்கள். அப்போதும் யாரும் வரவில்லை. ஆனால், கடந்த சில நாள்களாக சசிகலா, அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவதைப் போன்ற ஆடியோக்கள் மட்டும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தொடங்கிய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையிலான பனிப்போர் பின்னர் அறிக்கைப் போராகி, தற்போது போஸ்டர் யுத்தத்தில் வந்து முட்டி நிற்கிறது.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

மேற்கண்ட இரண்டு விஷயங்களும் ஒரே புள்ளியில் இணைவது குறித்து, மூத்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசியபோது,

''ஜெயிலிலிருந்து ரிலீஸான பிறகு அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில்தான் இருந்தார் சின்னம்மா. ஆனால், சின்னம்மாவுக்கு மிகவும் நம்பிக்கையான சேலத்தைச் சேர்ந்த ஜோசியக்காரர் ஒருவரிடம் கடந்த மாதம் தனது ஜாதகத்தைப் பார்த்திருக்கிறார். அவர், ''கேது திசை இன்னும் ஆறு மாதங்களில் முடிவடையப்போகிறது. அதற்குப் பிறகு சுக்கிர திசை ஆரம்பித்திருக்கிறது. அதற்குப் பிறகு எந்தவொரு விஷயத்தில் இறங்கினாலும் மகத்தான வெற்றியைப் பெறலாம்'' என கணித்துச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் தற்போது அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் சின்னம்மா. அதுமட்டுமல்ல, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், '' சசிகலா அ.தி.மு.க-விலேயே இல்லை'' என எடப்பாடி பழனிசாமி பேசியது அவரை அதிகமாகக் கோபமுறச் செய்திருக்கிறது.

அதனால்தான், முதற்கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கு ஆதரவாக யார் வருவார்கள் என பல்ஸ் பார்ப்பதற்காக இரண்டு பேரை நியமித்து, வேலையையும் தொடங்கிவிட்டார். அவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோரிடம் பேசிவருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமல்லாமல், அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும் பேசிவருகிறார்கள். அவர்களில் தங்களுக்கு ஆதரவாக வருபவர்களிடம் பேசி, அவர்கள் மூலம் மற்றவர்களை அணி திரட்டும் வேலைகளையும் ஜூலை மாதத்தில் செய்யவிருக்கின்றனர். தற்போது, எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களிலேயே, ஆறு பேர் மற்றவர்கள் வந்தால் தாங்களும் வருகிறோம் என உறுதி தந்திருக்கிறார்கள்'' என்றவர் தொடர்ந்து, ஓ.பி.எஸ்-ஸின் காய்நகர்த்தல்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

ஓ.பி.எஸ் - சசிகலா
ஓ.பி.எஸ் - சசிகலா

''ஏற்கெனவே ஓ.பி.எஸ் மனதிலும் சசிகலாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற யோசனை இருக்கிறது. தான் மட்டும் தனித்து நின்று எடப்பாடி அண்ட் கோவுடன் மோத முடியாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் அவர். எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார். அதனால், சின்னம்மாவின் துணையுடன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். முன்னாள் அமைச்சர்களில் பலரும் சின்னம்மாவுடன் போனில் பேசியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள், ஓ.பி.எஸ்-ஸுடனும் பேசிவருகிறார்கள். வரும் 14-ம் தேதி அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. 12-ம் தேதியே தங்கள் ஆதரவாளர்களை சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார் ஓ.பி.எஸ். சட்டசபைக் கூட்டம் முடிந்த பிறகு தன் புது வீட்டிலிருந்து தன் ஆதரவாளர்களுடன், பத்திரிகையாளர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார். மறுபுறம், கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனனுடனும் சசிகலா தரப்பில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. எல்லாம் கூடி வந்துவிட்டது. இனி புயல் கிளம்பும்'' என்கிறார் அதிரடியாக.

"சசிகலா அம்மா வந்தாதான் கன்ட்ரோல் பண்ண முடியும்!" - சசிகலாவிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சொல்வதென்ன?

சசிகலாவின் தொடர் ஆடியோ லீக்ஸை தொண்டர்கள் எப்படிப் பார்க்கிறார்கள், சிலரிடம் பேசினோம்.

''இப்போது மட்டுமல்ல, எப்போதும் தொண்டர்களுடன் சசிகலாவுக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மட்டுமே அவருடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தார்கள். அதனால், தொண்டர்களின் மனதில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தவிர, சசிகலா பேசிவரும் நிர்வாகிகள் அனைவரும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். குறிப்பாக, சென்னை விருகம்பாக்கம் பகுதி அம்மா பேரவைச் செயலாளர் ஶ்ரீதேவி பாண்டியனெல்லாம் தீவிர ஓ.பி.எஸ் விசுவாசி. அப்படி ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாகத் தேர்ந்தெடுத்துத்தான் சசிகலா பேசிவருகிறார்.

சசிகலா
சசிகலா

கட்சியில் அவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அ.ம.மு.க-வுக்குச் சென்று பின்னர் அதிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் மீண்டும் சேர்ந்தவர்கள், எடப்பாடியின் மீது அதிருப்தியில் இருக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்தான் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் அவரால் பயனடைந்திருந்தாலும், அவர்களின் குடும்ப ஆதிக்கத்துக்குள் மீண்டும் செல்ல விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல, சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் தற்போது எந்தச் சம்பந்தமுமில்லை'' என்கிறார்கள் ஆணித்தரமாக.

புயல் கிளம்புமா இல்லை புஸ்வாணமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு