Published:Updated:

சசிகலாவுக்கு இருக்கும் வசதிகள் பிற கைதிகளுக்கு இல்லை! ஓர் ஆதங்கக் குரல்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த வினய்குமார் அறிக்கை பற்றி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பகிர்ந்துகொண்டவை...

சசிகலா
சசிகலா

''சசிகலாவும் இளவரசியும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொர்க்கத்தில் இருப்பதைப் போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கர்நாடக அரசியல்வாதிகளும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளும் சிறப்புச் சலுகைகள் செய்து வருகிறார்கள். வினய்குமார் அறிக்கை தாக்கல் செய்து 2 வருடங்கள் ஆகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சிறைத்துறை அதிகாரிகள் பயப்படாமல் சசிகலாவுக்குப் பல சலுகைகள் செய்து வருகிறார்கள்'' என்கிறார், கர்நாடக சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.

பரப்பன அக்ரஹாரா சிறை
பரப்பன அக்ரஹாரா சிறை
Vikatan

இதுபற்றி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தியிடம் கேட்டதற்கு, ''இந்தியா முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் மீறப்பட்டுவருகின்றன. சில சிறைவாசிகள், உறவினர்களையும் நண்பர்களைக்கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். சிலர், தண்டனைக் காலம் முடிந்தும் சிறைவாசியாக சித்ரவதைகள் அனுபவித்துவருகிறார்கள். ஆனால், அதிகார பலமும் பணபலமும் படைத்தவர்களுக்கு சிறைச்சாலை சொர்க்கபுரியாக இருந்துவருகிறது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவும் இளவரசியும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொர்க்கத்தில் இருப்பதைப் போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கர்நாடக அரசியல்வாதிகளும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகளும் சிறப்புச் சலுகைகள் செய்து வருகிறார்கள்.

சிறைக்குள் சசிகலாவுக்குப் பல சலுகைகள் செய்யப்படுகின்றன என்று சிறைத்துறை டிஐஜி ரூபா பகிரங்கமாக ஆதாரங்களை வெளியிட்டார். அதையடுத்து கர்நாடக அரசு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் கமிஷன் அமைத்தது. வினய்குமார் தலைமையிலான கமிஷன், சிறைக்குள் சென்று பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, கடந்த 2017 நவம்பர் மாதம் அரசுக்கு அறிக்கை தாக்கல்செய்தது.

அறிக்கை
அறிக்கை

அந்த அறிக்கையில், ''சசிகலா, இளவரசிக்கு 5 செல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு மட்டும் சிறப்புச் சமையலராக அஜந்தா என்ற சிறைவாசி இருப்பதாக சிறைத்துறை மருத்துவர் உமா தெரிவித்தார். தன்னைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்காகத் தனியாக சௌகரியமான மீட்டிங் ஹால் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொந்தமாகக் கட்டில், மெத்தை, படுக்கைகள் மற்றும் உடைகளும், இதர பொருள்களும் வைத்திருந்தார்கள்.

சசிகலாவுக்கு இருக்கும் கட்டில் மெத்தையைப் போல மற்ற சிறைவாசிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. சசிகலாவுக்காக தனியாக, தரமான கம்பெனி எல்.ஈ.டி டி.வி பொருத்தப்பட்டுள்ளது. மற்ற சிறைவாசிகளுக்குப் பழைய பெட்டி டி.வி இருக்கிறது. அதுவும் தனித்தனி அறையில் இல்லை. ஒரு சில டி.வி-கள் மட்டும் இருக்கின்றன. அதிலும் சில பழுதடைந்திருக்கிறது.'' இப்படி சிறைத்துறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெளிவாகத் தெரிவித்துள்ளது.

நரசிம்மமூர்த்தி
நரசிம்மமூர்த்தி
க. தனசேகரன்

வினய்குமார் அறிக்கை தாக்கல் செய்து 2 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த அறிக்கை சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நான் 5.2.2018 கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்த ராமலிங்க ரெட்டியிடம் நடவடிக்கை எடுக்கக் கூறி கடிதம் கொடுத்தேன். அதன் பிறகு, உள்துறை அமைச்சராக வந்த பட்டேலிடமும் கொடுத்தேன். தற்போதுள்ள அமைச்சரிடமும் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்காததால், சிறைத்துறை அதிகாரிகள் பயப்படாமல் சசிகலாவுக்குப் பல சலுகைகள் செய்துவருகிறார்கள்'' என்றார்.

இதுபற்றி அ.ம.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ''சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமான வரி கட்டிவருகிறார்கள். ஏற்கெனவே, அவர்கள் முதல் வகுப்பு பெற அனைத்து தகுதியும் உண்டு என வழக்காடு மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் முதல் வகுப்பைப் பயன்படுத்தவில்லை. அதற்காக நான்தான் பல முயற்சிகளை எடுத்தேன். ஆனால், அரசு தரப்பில் மெத்தனம் காட்டப்பட்டதால், முதல் வகுப்பு பெற முடியாமல்போனது.

புகழேந்தி
புகழேந்தி
க. தனசேகரன்

வினய்குமார் கமிஷனில் அதிக நேரம் பார்வையாளர்களைச் சந்தித்ததாகவும், சமையல் செய்ததற்கான ஆதாரங்களும் இல்லை. ஆனால், அங்கு மஞ்சள் கிடந்ததாக விசாரணைக் கமிஷனில் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த வினய்குமார் கமிஷனில் பெரிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை. முதல் வகுப்பு பெறும்போது, தனியாக ஒரு சிறைவாசியைச் சமையலராக நியமிக்கலாம். படுக்கை, கட்டில் வைத்திருக்கலாம். ஓர் உதவியாளரை வைத்துக்கொள்ளலாம் என வழக்காடு மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. அதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மொத்த சிறைத்தண்டனை நாள்களிலிருந்து ஒரு வருடம் குறைய வாய்ப்பு இருக்கிறது. சீக்கிரத்தில் வெளியே வருவார்கள்.'' என்றார்.