Election bannerElection banner
Published:Updated:

போயஸ் கார்டனில் சசிகலா..!

சசிகலா
சசிகலா ( ம.அரவிந்த் )

விநாயகருக்கு அலங்காரம் செய்ய 40 நிமிடங்கள் ஆனதாம். அதுவரை, அங்கேயே சசிகலா உட்கார்ந்து கண்களை மூடி தியானத்தில் மூழ்கிவிட்டார்.

சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையிலுள்ள இல்லத்தில் தங்கியிருக்கிறார். அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறேன் என்று அவர் அறிவித்த பிறகு, கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக தஞ்சைக்குச் சென்றிருந்தார். அங்கு, கணவர் நடராஜனின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவந்தார்.

இந்தநிலையில், ``போயஸ் கார்டனுக்குள் இன்று சசிகலா சென்றார்” என்கிற தகவல் நமக்குக் கிடைத்தது. நடந்தது என்ன என்று விசாரித்தோம்!

இன்று காலை 6:30 மணிக்கு ஹபிபுல்லா சாலையிலுள்ள வீட்டிலிருந்து சசிகலா புறப்பட்டார். நேராக அவரது கார் போயஸ் கார்டன் ஏரியாவுக்குள் நுழைந்தது. ஜெயலலிதாவின் வேதா இல்லம் எதிரே சசிகலாவின் அண்ணி இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்குச் சொந்தமான இடத்தில் புது வீடு ஒன்று கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கிறது. அங்கேதான் சசிகலா தங்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. கட்டடப் பணியை பார்வையிட இரவு நேரத்தில் வருவதாகச் சொல்லியிருந்தாராம். அந்தவகையில், அண்மையில் ஒரு நாள் சசிகலா அந்த வீட்டுக்கு விசிட் வந்தார் என்று அ.தி.மு.க-வினர் சொல்கிறார்கள். அப்படித்தான் இந்த முறையும் வந்தார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

சசிகலா
சசிகலா

ஆனால், அவர் வந்தது, வேதா இல்லத்தை ஒட்டியுள்ள விநாயகர் கோயிலுக்கு! கடந்த பல வருடங்களாக அந்தக் கோயிலில் குருக்கள் ஒருவர் பூஜைகளைச் செய்துவருகிறார். அவருக்கு நேற்றே சசிகலாவின் உதவியாளர் தகவல் சொல்லியிருக்கிறார். அதன்படி, இன்று காலை குருக்கள் வந்துவிட்டார். சற்று நேரத்தில் சசிகலாவும் வந்துவிட்டார். விநாயகருக்கு அலங்காரம் செய்ய 40 நிமிடங்கள் ஆனதாம். அதுவரை, அங்கேயே சசிகலா உட்கார்ந்து கண்களை மூடி தியானத்தில் மூழ்கிவிட்டார். பூஜை முடிந்ததும், சாமி கும்பிட்டுவிட்டு காரில் ஏறி, வேதா இல்லத்தின் வாசலருகே கார் திரும்பியபோது, அந்த வீட்டை சோகமாகப் பார்த்தாராம் சசிகலா. வேதா இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டதற்கு பிறகு அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போயஸ்கார்டனிலிருந்து நேராக திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு சசிகலா சென்றிருக்கிறார். அங்கே கொஞ்ச நேரம் அமர்ந்து சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினார்.

சசிகலா
சசிகலா

சசிகலாவின் நடவடிக்கைகள் உளவுத்துறை அதிகாரிகள் மூலம் முதல்வரின் காதுக்கும் சென்றிருப்பதாகச் சொல்கிறது நம்பத் தகுந்த வட்டாரம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு