Published:Updated:

``அதிமுக-வுக்குள் சசிகலா வருவது, மோடி, அமித் ஷா கையில் இருக்கிறது” - திருநாவுக்கரசர் எம்.பி

திருநாவுக்கரசர்

``ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ சசிகலாவைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னால், இருவரும் பயந்துகொண்டு அவரைச் சேர்த்தாலும் சேர்த்துக்கொள்வார்கள்.” - திருநாவுக்கரசர்

``அதிமுக-வுக்குள் சசிகலா வருவது, மோடி, அமித் ஷா கையில் இருக்கிறது” - திருநாவுக்கரசர் எம்.பி

``ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ சசிகலாவைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னால், இருவரும் பயந்துகொண்டு அவரைச் சேர்த்தாலும் சேர்த்துக்கொள்வார்கள்.” - திருநாவுக்கரசர்

Published:Updated:
திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ``மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கப்படவில்லை, போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லை, பற்றாக்குறையாக இருக்கிறது என்பதே மின்தட்டுப்பாடுக்கு காரணம் என்று கூறப்பட்டது. இது அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருந்தார். செல்லுமிடமெல்லாம் பொதுமக்கள் மின் பிரச்னை குறித்துத் தெரிவிக்கின்றனர். உரிய மின்சாரத் தொகுப்பை மத்திய அரசு கொடுக்க வேண்டும். மின் தட்டுப்பாடு ஏற்படாமல் சரிசெய்ய வேண்டியதும் மாநில அரசின் கடமை.

காங்கிரஸ் என்பது வற்றாத ஜீவநதி போன்றது

ராஜ்ய சபா உறுப்பினராக வர வேண்டும் என்பதற்காக கட்சியிலிருந்து கபில் சிபல் விலகியிருக்கிறார். சிலர் சேர்வதும், விலகுவதும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். அவர்களது உரிமை. ஒரு சிலர் கட்சியைவிட்டுச் செல்வதால் காங்கிரஸ் கட்சி பலவீனம் ஆகிவிடாது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி 130 ஆண்டுக்கால வரலாறுகொண்ட கட்சி. காங்கிரஸ் என்பது வற்றாத ஜீவநதி போன்றது அது ஓடிக்கொண்டுதான் இருக்கும். யார் சேர்ந்தாலும், யார் விலகினாலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

ஆராய்ச்சியாளராக, தொழில்நுட்பம் தெரிந்தவராக பிரசாந்த் கிஷோர் இருக்கிறார். பல கட்சிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சில மாநிலங்களில் அது வெற்றி பெற்றுள்ளது. சில மாநிலங்களில் தோல்வியும் கண்டுள்ளது. அதனால் அவர் போகுமிடமெல்லாம் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுக்கு வராததுதான் அவருக்கும் நல்லது, காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கை அனைத்தும் ராகுல் காந்தி கையிலேயே உள்ளது. ராகுல் காந்தி கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்பு அவர் இந்தியா முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரும் பணிகளை அவர் செய்வார். நாட்டு மக்களும், கட்சித் தொண்டர்களும் ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுகின்றனர். அந்த வகையில் அவரது செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும்” என்றார்.

சோதனைகளை ப.சிதம்பரம் சட்டரீதியாக எதிர்கொள்வார்

தொடர்ந்து பேசியவர், ``ஒரு வீட்டில் எத்தனை முறைதான் சோதனை செய்வார்கள். ஏதோ ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி வீட்டுக்குச் சென்று சோதனை செய்கின்றனர். அப்படிச் சோதனையில் ஈடுபட்டு இதுவரை என்ன எடுத்துள்ளனர். ஒன்றுமே எடுக்கவில்லை. ஏதோ ஒரு குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு சோதனை செய்து அவர்களை பாதிக்க வைப்பதற்கு வேண்டுமென்றால் இது பயன்படுமே தவிர இதுவரை அவர்கள் அதிகாரபூர்வமாக எந்த ஒரு குற்றச்சாட்டும் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒருசிலர் வீட்டில் சோதனை நடத்துவதால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமோ தேர்தல் வெற்றியோ பாதிக்காது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சோதனைகளை ப.சிதம்பரம் சட்டரீதியாக எதிர்கொள்வார். இது போன்ற காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபடக் கூடாது என்பதே எனது கருத்து.

என்னைப் பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே எந்த ஒரு விரிசலோ, உரசலோ இல்லை, கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான். அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கருத்து என்பது கிடையாது அப்படிக் கருத்துகள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தால் வெவ்வேறு கட்சிகளின் தேவை இருக்காது. பேரறிவாளன் விடுதலையைப் பொறுத்தவரை திமுக, அதிமுக கருத்தோ அவர் விடுதலையை மற்ற கட்சியினர் தலைவர்கள் வரவேற்பதோ காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தெரியவில்லை. திமுக-வின் நிலைப்பாடு இதுதான் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். அந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்தது. சட்டத்தின்படி அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் ஆனால் அது தர்மத்தின்படி சரியானது அல்ல என்பது காங்கிரஸின் கருத்து. இது திமுக-வுக்கு புதிய கருத்தல்ல, காங்கிரஸின் கருத்து இதுதான் என்பது அவர்களுக்கும் தெரியும். இதற்கிடையில்தான் பத்து வருஷம் கூட்டணியாக ஆட்சியும் நடந்தது.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

திமுக ஆட்சிக்கு அதிமுக பாராட்டுப் பத்திரம் வைத்து கொடுக்க மாட்டார்கள் குற்றச்சாட்டை மட்டும்தான் வைப்பார்கள். அதிமுக எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தேர்தல் கால வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியிருக்கலாம். சிலவற்றை நிறைவேற்றாமல் இருக்கலாம். வாக்குறுதி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு தரப்பட்டது. ஐந்து மாதங்களுக்கான வாக்குறுதி அல்ல. ஆட்சி வந்தவுடன் ஒரே ஆண்டில் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அதைச் செய்யவும் முடியாது. ஏனென்றால் அதற்கான நிதி ஆதாரம் என்பது குறிப்பிட்ட அளவுதான், வருவாய் வரம்புக்கு உட்பட்டுதான் வரவு செலவு கணக்குகள் செய்ய முடியும். அதனால் சொன்ன வாக்குறுதியை ஏன் ஓராண்டில் நிறைவேற்றவில்லை என்று கேட்க முடியாது. இன்னும் நான்காண்டுகள் உள்ளன. சிலநேரம் கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றவேண்டிய சூழல் உள்ளது. திடீரென்று கொரோனா வந்தது... தேர்தல் அறிக்கையில் இரண்டாயிரம் மூவாயிரம் கோடி செலவு செய்வோம் என்றா கொடுத்தார்கள். எதிர்பாராதவிதமாக மக்களைக் காப்பாற்ற நிதி ஒதுக்க வேண்டியிருந்தது. இதனால் வாக்குறுதி கொடுத்த திட்டங்களைச் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம்.” என்றவர், சசிகலா விவகாரம் குறித்துப் பேச ஆரம்புத்தார்.

``சசிகலா எதிர்பார்ப்பதுபோல் அதிமுக செயல்படவில்லை. அதனால் ஜனநாயக முறைப்படி அவரின் கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-தான் பதில் சொல்ல வேண்டும். சசிகலாவை அதிமுக-வில் சேர்த்தாலும் சரி, சேர்க்காவிட்டாலும் சரி... என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்றுதான். சசிகலாவின் முயற்சி வெற்றி பெறுமா என்றால் எனக்கு ஜோசியம் பார்க்கத் தெரியாது. ஆனால் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது என்பது நடப்பதாகத் தெரியவில்லை. சசிகலா மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் அவரைச் சேர்ப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ சசிகலாவை சேர்த்துக்கொள்ளச் சொன்னால், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்ட இருவரும் பயந்துகொண்டு அவரைச் சேர்த்தாலும் சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள்தான் முடிவு செய்யும் அதிகாரத்தில் உள்ளனர். அதிமுக-வின் இரட்டைத் தலைமையை மோடியும், அமித் ஷாவும்தான் கொண்டுவந்துள்ளனர். அதிமுக-வில் இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என்பது பாஜக-வின் திட்டம். மோடி, அமித் ஷா போட்ட திட்டத்தில்தான் இவர்கள் செயல்படுகின்றனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism