Published:Updated:

``புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா..? கழகம் காக்கப்படும்!” - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

``தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கழகம் காக்கப்படும்... மக்கள் ஒற்றுமை உயிர்பெறும். காலத்துக்காகக் காத்திருப்பவன் ஏமாளி... காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி. அம்மாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ?” - சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா தீவிர அரசியலிலிருந்து விலகியே இருந்தார். அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிக்கைகூட வெளியிட்டார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் தோல்வி, தொடர்நது உள்ளாட்சித் தேர்தலில் படு தோல்வி என, அதிமுக-வின் தொடர் தோல்விகளால், சசிகலா மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். தொடர்ந்து தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்களை வெளியிட்டுவந்தவர், பொன் விழாவை முன்னிட்டு தனது அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். நான்கு வருடங்கள் கழித்து ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தியவர், ``எனது பாரத்தை இறக்கி வைத்துவிட்டேன்” என்றார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் இல்லத்தில் கொடியேற்றும் நிகழ்வில் பொருத்தப்பட்டிருந்த கல்வெட்டில், சசிகலா பெயருக்குக் கீழ் கழக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து அதிமுக கொடி கட்டிய காரையே பயன்படுத்துகிறார்.

அதிமுக கொடி கட்டியக் காரில் சசிகலா
அதிமுக கொடி கட்டியக் காரில் சசிகலா

இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``நிறை அன்புடைய சகோதரர்களே சகோதரிகளே... கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய தொடக்கம் ஓர் இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நம் கழகத்தை இயக்குவோம்.

அண்ணா கண்ட வழியில்... புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி.. ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில்கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம்... பகை வெல்வோம்... ஒற்றுமைப் பூக்களை ஒன்றாய்க் குவிப்போம்.

தமிழ்ச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணம் என்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள்... புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா... பொறுத்தல் தகுமா?

மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அ.இ.அ.தி.மு.க நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள்! எத்தனை எத்தனை இன்னல்களைக் கடந்த புரட்சித்தலைவி அம்மா சென்ற வழியில், தடையின்றி செல்ல உறுதி கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் நினைப்பது புரிகிறது... தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கழகம் காக்கப்படும்... மக்கள் ஒற்றுமை உயிர்பெறும். காலத்துக்காகக் காத்திருப்பவன் ஏமாளி... காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி. அம்மாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ? கரம் கோர்ப்போம்... அம்பாய் பயணிப்போம். இலக்குகளைத் தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம்.

எதிர்காலத்தை நாம் கழகத்தின் கையில் கொண்டு வர சூளுரைப்போம். அஞ்சாது உறுதி ஏற்போம். மக்களுக்காக நாம் இருப்போம். நமக்காக மக்கள் இருப்பார்கள். கழகத்தின் பாதையில் புரட்சித்தலைவர் காணாத சோதனையா? புரட்சித்தலைவி அம்மா காணாத இடர்ப்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாம் அறிவோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே... நான் இருக்கிறேன் என்பதைவிட நாம் இருக்கிறோம். ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம். தலைவர் புகழ் ஓங்கட்டும்... தலைவி புகழ் நிலைக்கட்டும்...

பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புதுநாள் ஆகட்டும். தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது... தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காகப் பயணிப்போம். சங்கமிப்போம் சாதிப்போம்.

``நிஜத்துக்கே இங்கு வேலை இல்லை; நிழலுக்கு என்ன வேலை?" - சசிகலா குறித்து சி.வி.சண்முகம் காட்டம்.

கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப் பயணத்தை, தொண்டர்களின் துணையோடும் மக்கள் பேராதரவோடும்... மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.

புரட்சித்தலைவர் நாமம் வாழ்க... புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க... வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்... வளர்க தமிழகம்! நன்றி வணக்கம்!”

- என்றும் அம்மா வழியில் வி.கே.சசிகலா,.

கழக பொதுச்செயலாளர் அஇஅதிமுக.

கழக பொதுச்செயலாளர் என மீண்டும் குறிப்பிட்டுள்ள சசிகலாவின் இந்த மடல், அதிமுக-வினர் இடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா, கட்சியைக் கைப்பற்றுவதற்கான அடுத்த நடவடிக்கைகளில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு