Published:Updated:

எடப்பாடி மீதான வருத்தம்; சசிகலாவின் தூது - யூகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த வைத்திலிங்கம்!

வைத்திலிங்கம் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. இது தொடர்பாக அ.தி.மு.க-வினரும், அ.ம.மு.க நிர்வாகிகளும் பல்வேறுவிதமான தகவல்களை வெளியிட்டுவந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம், சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டபோது, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிராக காட்டமான கருத்துகளைத் தெரிவித்துவந்தனர். ஆனால், எம்.பி வைத்திலிங்கம் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதிகாத்து வந்தார். இது டெல்டா பகுதி அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களையும் யூகங்களையும் கிளப்பியது. அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது.

சசிகலா
சசிகலா

இது தொடர்பாக அ.தி.மு.க-வினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் பல்வேறுவிதமான தகவல்களை தெரிவித்துவந்தனர். `எடப்பாடி பழனிசாமியோடு தொடர்வாரா அல்லது சசிகலா பக்கம் சாய்வாரா?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பம் நீடித்துவந்தது.

சசிகலா சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர் வைத்திலிங்கம். 2001-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சசிகலா குடும்பத்தினரால்தான் இவர், ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக்கப்பட்டார். முதன்முதலில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலும்கூட, இவரை அமைச்சராக்கி அழகு பார்த்ததும் சசிகலா குடும்பம்தான். சசிகலாவின் ஆசியால், கட்சியிலும் ஆட்சியிலும் கிடுகிடுவென வளர்ந்தார் வைத்திலிங்கம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கியத் தளபதியாக வலம்வந்தார். அ.தி.மு.க-வின் ஏழு மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் செல்வாக்குடன் திகழ்ந்த ஐம்பெரும் தலைவர்களில், வைத்திலிங்கம் மூன்றாம் இடம் வகித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்தபோது, `இனி அவருக்கு இறங்குமுகம்தான்’ என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், கணிப்புகளுக்கு மாறாக மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைவாசம், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக அரியணை ஏறியது... எனத் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவியபோது, இனி வைத்திலிங்கம் என்ன ஆவார் என்ற கேள்வி டெல்டாவில் எழுந்தது. ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் மோதல், அதன் பிறகு ஏற்பட்ட இணைப்பு ஆகிய நிகழ்வுகளில், வைத்திலிங்கம் மிக சாமர்த்தியமாகக் காய்நகர்த்தி தன்னைத் தக்கவைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

ஆனால், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருந்தபோது ஆட்சியிலும் கட்சியிலும் தனக்குக் கிடைத்த அங்கிகாரமும் அதிகாரமும் இப்போது கிடைக்கவில்லை என்ற வருத்தம் நீறுபூத்த நெருப்பாக இவருக்குள் கனன்றுகொண்டே இருந்துவந்தது. குறிப்பாக, மத்திய அமைச்சரவையில், அ.தி,மு.க-வுக்கு பிரநிதித்துவம் அளிக்க பா.ஜ.க முன்வந்தது. கண்டிப்பாக, தான் அமைச்சராகிவிடுவோம் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார் வைத்திலிங்கம். ஆனால், ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தும் அந்தப் பதவிக்கு ஆசைப்பட்டதால், வைத்திலிங்கத்தின் மத்திய அமைச்சர் கனவு தவிடு பொடியானது. எடப்பாடி பழனிசாமி, ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தார். அவரைக் காட்டி இவரையும், இவரைக் காட்டி அவரையும் சமாளித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திலிங்கத்துக்கு வருத்தம் அதிகரித்தது. அதோடு, கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சியில் உரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கப்படுவதாகவும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இந்தநிலையில்தான் சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு வைத்திலிங்கம் யார் பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. சசிகலா குடும்பத்தினர், வைத்திலிங்கத்துக்கு ரகசியத் தூதுவிட்டதாகப் பேச்சு நிலவியது. கணிசமான எண்ணிக்கையிலான பொதுக்குழு உறுப்பினர்களோடு இவர் சசிகலாவுடன் செல்லப்போகிறார் எனப் பேசப்பட்டது. இவர், சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், டெல்டாவைச் சேர்ந்தவர் என்பதாலும் இவர் சசிகலா பக்கம் செல்ல வாய்ப்பு அதிகம் எனப் பேசப்பட்டது. இந்தச் சந்தேக நெருப்புக்கு நெய் ஊற்றுவதுபோல, வைத்திலிங்கம் அமைதி காத்துவந்தார்.

என்ன செய்கிறார் சசிகலா?

இந்தநிலையில்தான், தற்போது தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெளிவுப்படுத்தியிருக்கிறார் வைத்திலிங்கம். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய வைத்திலிங்கம் ``நடைபெற்றவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், அ.தி.மு.க-வுக்கு வாழ்வா சாவா என்கிற தேர்தல். நாம் வெற்றி பெறவில்லையெனில், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதை மனதில்வைத்து, வரும் தேர்தலில் கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும்.

ரகசிய சந்திப்பு... தூதுவிட்டாரா சசிகலா?! - சைலன்ட் மோடு வைத்திலிங்கம்; பரபரப்பில் தஞ்சை அ.தி.மு.க

மழை நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என பல்வேறு சாதனைகளை இந்த அரசு செய்துவருகிறது. வரப்போகும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்னும் பல சலுகைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் மக்கள்மீது பற்றுடன் இருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வைத்திலிங்கம்
ம.அரவிந்த்

எனவே, அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, பணியாற்றுங்கள். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிதான்’’ என தெரிவித்திருக்கிறார். இதனால், `சசிகலாவுடன் சென்றுவிடுவார்’ என்று வைத்திலிங்கம் குறித்துப் பேசப்பட்டுவந்த யூகங்களுக்கு நேடியாகவே பதில் சொல்லிவிட்டார் என்று சொல்லிவருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு