Published:Updated:

“கட்சியைக் கலைத்துவிடு!” கட்டளையிட்ட சசிகலா

சசிகலா - தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா - தினகரன்

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையேயான உரசல் இப்போது ஏற்பட்டதல்ல. 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதே தொடங்கிவிட்டதாகச் சொல்கிறது சசிகலாவுக்கு நெருங்கிய வட்டாரம்.

“கட்சியைக் கலைத்துவிடு!” கட்டளையிட்ட சசிகலா

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையேயான உரசல் இப்போது ஏற்பட்டதல்ல. 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதே தொடங்கிவிட்டதாகச் சொல்கிறது சசிகலாவுக்கு நெருங்கிய வட்டாரம்.

Published:Updated:
சசிகலா - தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா - தினகரன்

இடியாப்பத்தில் இருக்கும் சிக்கலைக்கூட பதமாகப் பிரித்துவிடலாம்போல. அ.தி.மு.க., அ.ம.மு.க-வுக்குள் சசிகலாவால் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைத்தான் பிரிக்கவும் முடியாமல், புரிந்துகொள்ளவும் முடியாமல் தவிக்கிறார்கள் அந்தக் கட்சிகளின் தொண்டர்கள். ‘அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பேன்’ என்று அறிவித்த சசிகலா, மொபைல்போனிடமிருந்து விலகியிருக்கவே இல்லை. அன்றாடம் யாரோ ஒரு தொண்டரிடம் பேசி புதுப்புது போன் உரையாடல்களை வெளியிட்டுவருகிறார். “கட்சி விஷயமாக எம்.ஜி.ஆர் சில சமயங்களில் என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்” என்று அவர் பேசியதை பலரும் வேடிக்கையாக எடுத்துக்கொண்டாலும், அவரை நம்பி சில கட்சி நிர்வாகிகள் கடிதம் எழுதுவதும், அ.தி.மு.க-வை மீட்டெடுக்க கோரிக்கைவைப்பதும் தொடர்கதையாகிவருகிறது. இந்த காமெடிக் காட்சிகளுக்கு நடுவே சீரியஸாக ஒரு காட்சியும் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் மன்னார்குடி உறவுகள். அ.ம.மு.க-வைக் கலைத்துவிடும்படி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனுக்கு சசிகலா கட்டளையிட்டிருப்பதாகப் பரவும் தகவல்தான் மன்னார்குடியையும் தாண்டி சசிகலா ஆதரவாளர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நானே ராஜா... நானே மந்திரி

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையேயான உரசல் இப்போது ஏற்பட்டதல்ல. 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதே தொடங்கிவிட்டதாகச் சொல்கிறது சசிகலாவுக்கு நெருங்கிய வட்டாரம். அ.ம.மு.க மண்டலப் பொறுப்பாளரும், சசிகலாவுக்கு நெருக்கமானவருமான ஒரு முக்கிய நபர் நம்மிடம் பேசினார். “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் தினகரன் வெற்றிபெற்றார். அதிலிருந்தே தினகரனின் போக்கு மாறத் தொடங்கியது. அடையார் கற்பகம் அவென்யூவிலுள்ள தன் வீட்டில், தினமும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துவந்த தினகரன், தேர்தல் வெற்றிக்குப் பிறகு நிர்வாகிகளைச் சந்திப்பதையே குறைத்துக்கொண்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க, ஆறு மண்டலப் பொறுப்பாளர்களை தினகரன் நியமனம் செய்தார். இப்போது ஒன்பது மண்டலப் பொறுப்பாளர்கள் இருக்கிறோம். எங்களிடம் தினகரன் போனில் பேசுவதுகூட ஒரு கட்டத்தில் குறைந்துபோனது.

“கட்சியைக் கலைத்துவிடு!” கட்டளையிட்ட சசிகலா

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியைப் பதிவுசெய்ய முடியவில்லை. வேட்பாளர்கள் எல்லாம் சுயேச்சையாகத்தான் போட்டியிட்டனர். மிகுந்த சிரமத்துக்கிடையேதான் பரிசுப்பெட்டி சின்னத்தைப் பெற்றோம். குறைந்த காலத்துக்குள் அந்தச் சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று 5.65 சதவிகித வாக்குகளை அ.ம.மு.க பெற்றது. இந்த வாக்குகளை 2021 சட்டமன்றத் தேர்தலில் தினகரனால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே குக்கர் சின்னம் கிடைத்தும், வெறும் 2.65 சதவிகித வாக்குகளையே அ.ம.மு.க பெற்றது. ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம், தினகரனின் ‘நானே ராஜா... நானே மந்திரி’ மனப்போக்குதான்.

“சித்திக்கு விவரம் பத்தலை!”

1983-ல் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா அமர்ந்தபோது, அவரிடம் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. தான் ஒரு ஸ்டார் நடிகையாக இருந்தாலும், எந்த ஈகோவும் இல்லாமல் கட்சி அலுவலகத்தில் தினமும் தொண்டர்களைச் சந்திப்பதை ஜெயலலிதா வழக்கமாக வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா சந்தித்த சோதனைகள் ஏராளம். ஓர் இரவுகூட நிம்மதியான உறக்கத்தை அவர் கண்டிருக்க முடியாது. ஏறத்தாழ எட்டு வருட உழைப்புக்குப் பிறகுதான், 1991-ல் முதல்வராக அரியணை ஏறினார். அதன் பிறகு, அவரைக் கட்சி நிர்வாகிகள் எளிதாக அணுகுவது நின்றுபோனது. ஆனால், தினகரன் ஒரேயோர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவுடனேயே தன்னை நூறு ஜெயலலிதாக்களுக்குச் சமமாக நினைத்துக்கொண்டார். சிக்கலே அங்கேயிருந்துதான் ஆரம்பித்தது. கட்சி தொடர்பாகச் சிறையிலிருந்து சசிகலா கூறிய ஆலோசனையைக்கூட அவர் மதிக்கவில்லை.

2021 சட்டமன்றத் தேர்தலில், அ.ம.மு.க போட்டியிடுவதை சசிகலா விரும்பவில்லை. தன்னிடம் ஆதரவு கேட்டு தினகரன் அணுகியபோது, ‘நாம வளர்த்த அ.தி.மு.க-வை எதிர்த்து போட்டிபோடுவது நல்லா இருக்காது. கொஞ்சம் அமைதியா இரு. தேர்தலுக்குப் பிறகு கட்சி நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வரும்’ என்றார். ஆனால், அதை தினகரன் ஏற்கவில்லை. ‘நாம போட்டி போடலைன்னா பயந்த மாதிரி நினைச்சுடுவாங்க. குறைந்தது 50 தொகுதிகள்லயாவது நாம அ.தி.மு.க-வோட வெற்றி வாய்ப்பை பாதிச்சாத்தான் நம்மளோட சக்தி என்னன்னு அவங்களுக்குத் தெரியும். தவிர, என்னால ஐந்து எம்.எல்.ஏ-க்களைச் சட்டமன்றத்துக்குக் கொண்டுபோக முடியும்’ என்று உறுதியாகச் சொன்னார். ஆனால், தினகரனை நம்பாத சசிகலா, கடைசிவரை அவருக்கு வெளிப்படையான ஆதரவை அளிக்கவில்லை. தவிர, தினகரன் எதிர்பார்த்த நிதியுதவியையும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினகரன், ‘சித்திக்கு விவரம் பத்தலை. நாலு வருஷம் ஜெயில்ல இருந்ததால, அரசியல்னா என்னன்னு மறந்துபோச்சுபோல’ என்று தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஆத்திரத்தைக் கொட்டித்தீர்த்தார். இது அச்சுப் பிசகாமல் சசிகலாவுக்குச் சென்று சேர்ந்ததை தினகரன் அறிந்திருக்கவில்லை.

ஜனார்த்தனன்
ஜனார்த்தனன்

எங்கும் ஜனா ராஜ்ஜியம்!

தினகரனுக்கு ஆல் இன் ஆலாக இருப்பது ஜனா என்கிற ஜனார்த்தனன்தான். 90-களின் இறுதியில், ஜெயா டி.வி-யில் வரவேற்பறை உதவியாளராகப் பணியில் சேர்ந்த ஜனாவின் சுண்டுவிரல் அசைவில்தான் இன்று அ.ம.மு.க-வின் நிர்வாகமே நடக்கிறது. தினகரனைத் தொடர்புகொள்ள முடியாதபோது, அவரிடம் உதவியாளராக, தற்போது கோலோச்சும் ஜனாவிடம்தான் ஆலோசனையைப் பெற்று சில முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம். மண்டலப் பொறுப்பாளர்களான எங்களுக்கே இந்த நிலை என்றால், 72 மாவட்டச் செயலாளர்களின் நிலையை யோசித்துப்பாருங்கள். தி.மு.க-வில் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் இணைந்தபோது, அவரை விமர்சித்து முகநூலில் பதிவுபோடும்படி அ.ம.மு.க ஐடி விங் நிர்வாகி ஒருவருக்கு ஜனா கட்டளையிட்டிருக்கிறார். எங்கள் கட்சி நிர்வாகிகளுக்குக் கட்டளையிட ஜனா யார்? இதைக் கேட்க நாதியில்லாமல் போனதுதான் அ.ம.மு.க-வின் சாபக்கேடு.

கட்சிக்குள் நிலவும் குழப்பங்களையெல்லாம் சசிகலாவுக்குக் கடிதங்களாகக் கொண்டுசேர்த்தோம். ‘சசிகலாவை நம்பி அ.ம.மு.க என்கிற இயக்கத்துக்குள் இருக்கும் எங்களுக்கு என்ன வழி...’ என்று கேட்டிருந்தோம். இந்தக் கடிதங்கள் கிடைத்த பிறகுதான், முதன்முறையாக அ.ம.மு.க மூத்த நிர்வாகியான திருவாரூர் எஸ்.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஆம்பூர் பாலசுப்பிரமணியம், கதிர்காமு, சோளிங்கர் பார்த்திபன், தலைமை நிலையச் செயலாளர் உமாதேவன், செய்தித் தொடர்பாளர் தாம்பரம் நாராயணன் ஆகியோருடன் ஜூலை 1, 2 தேதிகளில் சசிகலா போனில் பேசியிருக்கிறார். இனிமேலாவது விடிவு பிறக்குமா என்று காத்திருக்கிறோம்” என்றார் அந்த மண்டலப் பொறுப்பாளர்.

கட்சிக்குள் ஜனாவோடு, தென் மண்டலப் பொறுப்பாளரான மாணிக்கராஜா மீதும் குற்றச்சாட்டுகள் எழும்புகின்றன. கட்சிக்குள் அவரின் ஆதிக்கத்தைப் பலமுறை தினகரனிடம் முறையிட்டும், அவர் நம்பவில்லை என்கிறார்கள். மாணிக்கராஜாவை நம்பி கோவில்பட்டி தொகுதியில் தினகரன் நின்று தோற்ற பிறகுதான் நிலைமையை அவர் உணர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இப்போது மாணிக்கராஜாவுடனும் தினகரன் அவ்வளவாகப் பேசுவதில்லையாம். இந்தக் களேபரங்கள் ஒருபக்கம் கட்சியை உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில், கட்சி என்கிற அமைப்பையே கலைத்துவிடும்படி தினகரனுக்கு சசிகலா கட்டளையிட்டிருப்பதாகப் பரவும் தகவல்தான் பற்றி எரிகிறது.

கட்சியைக் கலைத்துவிடு!

இது குறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் உறவினர் ஒருவர், “அ.ம.மு.க நிர்வாகிகளின் கதறல் கடிதங்கள் கிடைத்த பிறகு, சசிகலாவின் மனம் ஆத்திரத்தில் கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘எடப்பாடி பழனிசாமியெல்லாம் எனக்கு ஒரு போட்டியா’ என்கிற லெவலுக்கு சசிகலா போன் உரையாடலில் பேசிவரும் நிலையில், அ.ம.மு.க நிர்வாகிகளைச் சத்தமில்லாமல் தன் பக்கம் தூக்கிவருகிறார் எடப்பாடி. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளர் பொன்ராஜா, மத்திய சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்கள். மற்றொருபுறம், முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரே ஆலோசனை கேட்ட ஒரு தலைவியாகத் தன்னை சசிகலா கட்டமைக்க முயலும் நிலையில், அவரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட ஒரு கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறுவது சசிகலாவை வெறுப்பேற்றியிருக்கிறது.

இந்தக் கோபத்தையெல்லாம் சமீபத்தில் தினகரனிடம் போன் மூலமாக வெடித்துத் தீர்த்துவிட்டார் சசிகலா. தினகரனிடம் கடந்தகால சம்பவங்கள் பலவற்றைக் குறிப்பிட்டுப் பேசியவர், ‘2021 சட்டமன்றத் தேர்தலப்போ, அ.ம.மு.க., அ.தி.மு.க-வை ஒரே அணியில்வைக்க பா.ஜ.க ஒரு திட்டம்வெச்சுருந்தது. தகுதியிழந்ததால எம்.எல்.ஏ பதவியைப் பறிகொடுத்தவங்களுக்கும், அ.ம.மு.க சீனியர்களுக்கும் சேர்த்து 25 சீட் வாங்கித் தர்றதா டெல்லி சொன்னது. அப்படிப் போட்டி போடுறவங்க இரட்டை இலைச் சின்னத்துலதான் நிக்கணும்னு எடப்பாடி தரப்புல கண்டிஷன் போட்டாங்க. ஆனா, நீ அதை ஏத்துக்கலை. தனிச்சுப் போட்டியிட்டே. ஒரு இடத்துலகூட ஜெயிக்க முடியலை. ஒழுங்கா இரட்டை இலையில நின்னு ஜெயிச்சிருந்தா, இன்னைக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களாக நம்ம ஆளுங்க வந்திருப்பாங்க, கட்சியும் நம்ம கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கும்.

நான் ஜெயிலுக்குப் போனபோது கட்சியை உன்கிட்ட கொடுத்துட்டுப் போனேன். துணைப் பொதுச்செயலாளரா இருந்தது நீதான். சூப்பர் முதல்வரா உன்னைக் கற்பனை பண்ணிக்கிட்டே! கட்சியும் போச்சு, ஆட்சியும் நம்ம கட்டுப்பாட்டை விட்டுப் போச்சு. பண்ற தப்பையெல்லாம் பண்ணிட்டு, எனக்கு அரசியல் விவரம் பத்தலைன்னு கிண்டல் பண்றே.

இப்ப அ.ம.மு.க-காரங்க ஒவ்வொருத்தரா வெளியே போறாங்க. இதனால, என் பேர்தான் டேமேஜ் ஆகுது. கட்சியை நடத்தத் தெரியலைன்னா, எதுக்குவெச்சுக்கிட்டிருக்க... கட்சியைக் கலைச்சுடு. அக்காவும் நானும் கஷ்டப்பட்டு வளர்த்த ஒரு இயக்கத்தை நீ துண்டாக்கி நாசமாக்குனது போதும். பேசாம ஒதுங்கிடு, நான் பார்த்துக்குறேன்’ என்று சீறிவிட்டார்.

சசிகலாவின் இந்தக் கோபத்தை தினகரனும் எதிர்பார்க்கவில்லை. சில நாள்களுக்கு முன்னர் தஞ்சாவூர் வந்திருந்த தினகரன், தன் வருகையைக் கட்சிக்காரர்கள் யாரிடமும் சொல்லவில்லை. விஷயம் தெரிந்த கட்சிக்காரர்கள்கூட அவர் மீதிருக்கும் வருத்தத்தால் சென்று பார்க்கவில்லை. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா முடிவெடுத்திருக்கிறார். தினகரன் தலையீடு இல்லாத அரசியலைச் செய்ய விரும்புகிறார். அதற்கான வெளிப்பாடாகத்தான் ‘கட்சியைக் கலைத்துவிடு’ என்று தினகரனிடம் கடுமையாகச் சொன்னது” என்றார்.

“கட்சியைக் கலைத்துவிடு!” கட்டளையிட்ட சசிகலா

தினகரன் என்ன நினைக்கிறார்?

சசிகலா குடும்பத்துக்குள் தற்போது நடப்பது கிச்சன் கேபினெட் பாலிடிக்ஸ் என்று விளக்கமளிக்கிறது தினகரன் வட்டாரம். நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் ஒருவர், “சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், அவரது அண்ணி இளவரசியின் கஸ்டடிக்குள் முழுமையாகப் போய்விட்டார். வேறு யாரையும் சந்திக்க முடியாத அளவுக்கு சசிகலாவைச் சுற்றி வளையம் அமைத்துவிட்டார்கள். தினகரனையும், அவரது மனைவி அனுராதாவையும் குடும்பத்தில் மற்றவர்களுக்குப் பிடிக்காது. இளவரசி குடும்பம் சொல்லும் பொய்களை நம்பித்தான் சசிகலா செயல்படுகிறார். முதலில் அவர் சுற்றுப்பயணத்தைத் தொடங்கட்டும். அதுவே நடக்குமா என்று தெரியவில்லை. தினகரனைப் போன்ற தளபதி இல்லாமல், சசிகலாவால் என்ன அரசியல் நடவடிக்கை எடுக்க முடியும்?” என்றார் கோபமாக.

சசிகலாவின் கட்டளை ஒருபக்கம் இடியை இறக்கினாலும், இப்போதைக்கு மௌனம் காப்பதே மேல் என்கிற நிலையில் தினகரன் இருக்கிறாராம். வரும் அரசியல் மாற்றங்களுக்குத் தகுந்தாற்போல, தனது அரசியல் திட்டங்களை அரங்கேற்றலாம் என்கிற முடிவில் இருக்கிறார் என்கிறார்கள். தனக்கும் சசிகலாவுக்கும் நெருக்கமான தொழிலதிபர் ஒருவரிடம், “எடப்பாடி பழனிசாமியின் நயவஞ்சகச் சூழ்ச்சியில் சித்தி சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். நாம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஆரம்பத்தில் சம்மதிப்பதுபோல் நடித்து, கடைசியில் காலை வாரிவிடுவார் எடப்பாடி. அவரை நம்பி சித்தி ஏமாந்துவிடக் கூடாது” என்றிருக்கிறார்.

“சசிகலா உண்மையில் ரொம்பவே தாமதித்துவிட்டார். விஷயங்கள் அவர் கைமீறிப் போய்விட்டன. அ.ம.மு.க-வைக் கலைக்கச் சொல்வது, ஜெ-வின் நினைவிடத்துக்குச் செல்வது, தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என இப்போது அவர் எடுத்திருக்கும் எல்லா முடிவுகளுமே ரொம்பவே தாமதமானவை. இதன் விளைவுகள் பெரிய அளவில் இருக்காது” என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

மார்ச் 2018-ல், ஒரு பிரளயத்தையே உருவாக்கும் என்கிற எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட அ.ம.மு.க., இன்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனாலேயே பிரளயத்தைச் சந்தித்திருக்கிறது. தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க விரும்பும் சசிகலா, கட்சியையே கலைத்துவிடும்படி கட்டளையிட்டிருக்கிறார். சசியின் உத்தரவை தினகரன் ஏற்பாரா அல்லது திமிறி எழுவாரா? சீக்கிரமே தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism