Published:Updated:

ஆன்மிகப் பயணம்... அரசியல் புஸ்வாணம்!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

சசிகலா தவறவிட்டது விமானத்தை மட்டுமல்ல, அவரை சந்திக்கத் தயாராக இருந்த அ.தி.மு.க-வின் முன்னணியினரையும்தான்

ஆன்மிகப் பயணம்... அரசியல் புஸ்வாணம்!

சசிகலா தவறவிட்டது விமானத்தை மட்டுமல்ல, அவரை சந்திக்கத் தயாராக இருந்த அ.தி.மு.க-வின் முன்னணியினரையும்தான்

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

‘`அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தில் உள்ள பிள்ளைகளைப் பார்க்கச் செல்கிறேன். தொண்டர்கள் என்னை நிச்சயம் சந்திப்பார்கள்’’ என்று ஆன்மிகப் பயணமாக தென் மாவட்டங்களுக்குச் சென்றார் சசிகலா. கைக்கு வருவது போல் இருந்து அடிக்கடி நழுவிப் போகும் கட்சியைத் தன் பிடிக்குள் இழுக்கும் அரசியல் ஆசைக்கு அச்சாரமிட்டே பயணத்தைத் தொடக்கினார் அவர்.

நெல்லை மாவட்ட ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதி விஸ்வாமித்திரர் ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்ற வேண்டுதல் நீண்ட நாள்களாக சசிகலாவுக்கு இருந்தது. கடந்த மாத இறுதியில் தனக்கு நெருக்கமான ஜோதிடர்களிடம் கோயிலுக்குச் செல்வதற்கு நாள், நேரம் உள்ளிட்டவற்றைக் குறித்துத் தரச் சொல்லி மார்ச் 4-ம் தேதி சென்றார். சென்னையிலிருந்து துாத்துக்குடிக்கு விமானப் பயணம். அங்கிருந்து விஜயாபதி ஆலயத்திற்குச் சென்று சிறப்பு அபிஷேகங்களில் கலந்துகொண்டு, அங்கிருந்து திருச்செந்தூர் வந்தார்.

ஆன்மிகப் பயணம் என்று சொல்லப்பட்டாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க தலைமை மீது வருத்தத்தில் இருக்கும் தென் மாவட்ட நிர்வாகிகள் தன்னைச் சந்திக்க வருவார்கள் என்கிற அரசியல் கணக்கிலேயே இந்தப் பயணத்தை சசிகலா திட்டமிட்டதாகச் சொல்கிறார்கள் அவரின் உறவுகள். அதற்கு ஏற்றாற்போல அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும் அவருக்கு ஆதரவாக வெளிப்படையாகக் கருத்துச் சொல்லிப் பரபரப்பு கூட்டியிருந்தார்கள்.

ஆன்மிகப் பயணம்... அரசியல் புஸ்வாணம்!

ஜெயலலிதா பிறந்த நாளின்போது, அ.தி.மு.க-வின் இன்றைய நிலை குறித்த கவலையுடன் தனது கருத்தைப் பதிவு செய்துவிட்டே பயணத்தைத் தொடக்கினார் சசிகலா. தூத்துக்குடியிலிருந்து ராதாபுரம் செல்லும் வரையில் அவருக்கு சில இடங்களில் அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சசிகலா திருச்செந்துார் சென்றடைந்தபோது, அவரைச் சந்திக்க அங்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா.

சசிகலா தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த ராஜாவை சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வரவேற்று தனி அறையில் தங்க வைத்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தனி அறையில் காத்திருந்த பிறகே சசிகலாவைச் சந்தித்து ராஜா பேசினார். இந்தச் சந்திப்பில் பன்னீரிடம் தொலைபேசியில் சசிகலாவைப் பேசவைக்கும் திட்டம் ஓ.ராஜாவிடம் இருந்துள்ளது. ஆனால், கடைசி நேரத்தில் அது நடக்காமல்போனது. ராஜாவிடம் “கட்சியின் போக்கு எனக்குக் கவலை தருகிறது” என்று சசிகலா சொல்ல, ‘`உங்கள் பின்னால் தொண்டர்கள் பலரும் இருக்கிறார்கள்” என்று ராஜா உருக்கமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரே அடுத்த சில மணி நேரத்தில் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதும், அதில் அவர் அண்ணனே கையெழுத்திட்டதும் சசிகலாவே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

ஆன்மிகப் பயணம்... அரசியல் புஸ்வாணம்!

மறுநாள் 5-ம் தேதி திருச்செந்தூரிலிருந்து கிளம்பி திருநெல்வேலி சென்று, அங்கிருந்து குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமரன் கோயிலுக்குச் சென்றார். நெல்லையில் அ.ம.மு.க-வினர் வரவேற்பு கொடுத்தனர். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிலர் வந்து வரவேற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்கிற வருத்தம் சசிகலாவுக்கும் அவருடன் பயணித்தவர்களுக்கும் இருந்தது.

குறிப்பாக இந்தப் பயணத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் சசிகலாவைச் சந்திப்பதாக இருந்தது. அதற்காகவே மதுரை வரை காரில் வரும் திட்டம் சசிகலா தரப்பில் இருந்தது. அப்படி ஒரு சந்திப்பு நடந்தால், அ.தி.மு.க-வின் ரெட்டைத் தலைமை ஆடிப்போகும் என்று எதிர்பார்த்தனர் சசிகலா உறவுகள்.

ஆனால், 4-ம் தேதி ஓ.ராஜா-சசிகலா சந்திப்பு நடந்தவுடனே ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் சசிகலாவைச் சந்திக்கும் திட்டத்திலிருந்தவர்கள் பின்வாங்கிவிட்டார்கள். எனவே, மதுரை வரும்வழியில் தொண்டர்கள் மட்டுமே வரவேற்பு கொடுத்தனர். இதில் சசிகலா கடும் அப்செட். கோயில்களுக்குச் சென்றுவிட்டு, தொண்டர்களையும் சந்தித்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு வருவதற்குத் தாமதமானதால், மதுரையிலிருந்து சென்னை செல்லும் கடைசி விமானத்தையும் சசிகலா மிஸ் செய்துவிட்டார். இதனால் மதுரையிலிருந்து காரிலேயே சென்னை திரும்ப முடிவானது.

ஆன்மிகப் பயணம்... அரசியல் புஸ்வாணம்!

சசிகலா காரில் சென்னை வரும் தகவலை வட மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். வழிநெடுக அவர்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது சசிகலா தரப்பு. ஒரு காரில் சசிகலாவுடன் இளவரசி இருக்க, இன்னொரு காரில் விவேக் வர, எல்லோரும் சென்னை திரும்பினார்கள். விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிர்கோஷ்டியினர் ஏற்கெனவே சசிகலாவை சென்னையில் வந்து சந்தித்திருந்தனர். அவர்களையும் 5-ம் தேதி அ.தி.மு.க-விலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. இதனால் வட மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. எல்லாவற்றையும் தாண்டி விழுப்புரத்தில் சிலர் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். ஆனால், சொன்ன நேரத்திற்கு சசிகலா வந்து சேராமல்போனதால், அவர்கள் கடுப்பாகிக் கிளம்பிவிட்டார்கள். “பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா விடுதலையானபோது அவரை வரவேற்கப் பல இடங்களிலும் விடிய விடிய தொண்டர்கள் காத்திருந்தனர். அந்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல்போனதால், இப்போது வரவேற்பு கொடுக்கவே ஆள் தேடும் நிலைக்கு ஆகிவிட்டது. இப்போதும் சசிகலாவைச் சுற்றி அவருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் வலம்வருவதால் அ.தி.மு.க-வினர் பலரும் அவரைச் சந்திக்க யோசிக்கிறார்கள்” என்கிற எதார்த்தத்தைச் சொல்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

சசிகலா தவறவிட்டது விமானத்தை மட்டுமல்ல, அவரை சந்திக்கத் தயாராக இருந்த அ.தி.மு.க-வின் முன்னணியினரையும்தான். ஏற்கெனவே ஒருமுறை ஆன்மிகப் பயணம் சென்றபோது அ.ம.மு.க-வினர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த முறை அவர்களும் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் சசிகலாவுக்கு இது சறுக்கலான பயணமாகவே அமைந்துவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism