Published:Updated:

`வைகோ பதவிப் பிரமாணம் ஏற்பதை அனுமதிக்கக் கூடாது!' - வெங்கைய நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம்

LOGESHWARI

`தேச விரோத கருத்துகளைப் பேசும் வைகோ நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் ஏற்பதை அனுமதிக்கக் கூடாது' என்று மாநிலங்களவைத் தலைவருக்கு அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.

வைகோ
வைகோ

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு 11 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். தி.மு.க - ம.தி.மு.க கூட்டணியின் சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ-வும் மாநிலங்களவை உறுப்பினருக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியது.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

இந்நிலையில், வைகோ-வின் மனு ஏற்கப்பட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராவதில் எந்தச் சிக்கலும் இல்லை. தமிழகத்தில் இருந்து தி.மு.க கூட்டணியில், போட்டியிட்ட வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான சான்றிதழை அவர் சட்டப்பேரவை செயலரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்தநிலையில், அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா, குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கைய நாயுடுவுக்கு, வைகோ பதவியேற்பது குறித்துக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ''தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோ-வுக்கு மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது. பிரதமர் மோடியை, தமிழர் விரோதியாகத் தொடர்ந்து சித்திரித்து வருகிறார் வைகோ.

கடிதம்
கடிதம்

சட்டப்படி ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரால், தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்றாலும், தேச விரோத கருத்துகளைப் பேசும் வைகோவை ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் ஏற்பதை அனுமதிக்கக் கூடாது. தமிழ்ச் சமூகத்தைத் தவறாக வழிநடத்துகிறார் வைகோ.

எந்தக் குற்றத்துக்காக நீதிமன்றம் வைகோவுக்குத் தண்டனை விதித்ததோ, அதைப் பொருட்படுத்தாமல், 'ஊடகங்களில் தான் தொடர்ந்து அதே செயலைச் செய்வேன்' என்றும் கூறிவருவது நீதித்துறையை அவமதிப்பதாகும். எனவே, அறநெறிகளுக்கு உட்பட்டு, வைகோமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை நாட்டுக்கு எதிராகவும், நாட்டின் பிரதமருக்கு எதிராகவும் பேசுவோருக்குத் தகுந்த பாடமாக அமையட்டும்'' என்று சசிகலா புஷ்பா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சான்றிதழ் பெறும் வைகோ
சான்றிதழ் பெறும் வைகோ
வி.ஸ்ரீனிவாசுலு

அ.தி.மு.க-விலிருந்து விலக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா விரைவில் பி.ஜே.பி-யில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இவரது கடிதமும் அதைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. இதன்மீது மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.