Published:Updated:

` நம்மை விட்டு ஏன் விலகிச் செல்கிறார்கள்?!' - தினகரனிடம் ஆதங்கப்பட்ட சசிகலா

சசிகலா

பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். ` நம்மிடம் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது நல்லது இல்லை' என தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.

` நம்மை விட்டு ஏன் விலகிச் செல்கிறார்கள்?!' - தினகரனிடம் ஆதங்கப்பட்ட சசிகலா

பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். ` நம்மிடம் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது நல்லது இல்லை' என தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.

Published:Updated:
சசிகலா

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக விலகிச் சென்று கொண்டிருக்கின்றனர். கடந்த வாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் அ.ம.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன். `கொள்கையே இல்லாத கட்சியில் கொ.ப.செ பதவி எதற்கு?' எனத் தினகரனைக் காட்டமாக விமர்சித்துவிட்டு, அறிவாலயத்தில் ஐக்கியமானார். அவரைத் தொடர்ந்து அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா, அ.தி.மு.க-வில் இணைய இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

தினகரன்
தினகரன்

இதுதொடர்பாகப் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், `கட்சியைவிட்டு வெளியே போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவை. இசக்கி சுப்பையா பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய தொகைகள் அதிகம் உள்ளன. வேலுமணி அதிகப்படியான தொல்லைகளைத் தருகிறார் எனச் சொல்வார். நாங்கள் இப்போது தோல்வியடைந்ததால் அவர் போகலாம். எங்களுக்கு இது பின்னடைவா என்பதை வருங்காலம் முடிவு செய்யும். எங்களால் கை காட்டப்பட்ட நிர்வாகிகள் வேறு இடம் தேடிப்போவதால் இன்னும் வலுவடைவோமே தவிர பாதிக்கப்பட மாட்டோம்' எனக் கொதித்தார்.

தினகரனின் பேட்டியைக் கவனித்த இசக்கி சுப்பையாவும், ` அவர் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டது. ஒரு தலைவருக்கு இது அழகல்ல. தினகரன் பதற்றத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் ஈர்க்கப்பட்டுத்தான் கட்சிக்கு வந்தோம். ஜூலை 6-ம் தேதி அ.தி.மு.க-வில் 20,000 தொண்டர்களுடன் இணைகிறேன். மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய்க் கழகத்துக்கே செல்கிறோம்" என விளக்கமளித்தார்.

இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா

செந்தில் பாலாஜி, பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன், தங்க.தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா என அ.ம.மு.க-வில் இருந்து விலகிச் செல்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தநிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், தினகரன், டாக்டர் வெங்கடேஷ், விவேக் ஜெயராமன், பெங்களூரு புகழேந்தி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலரும் வந்திருந்தனர்.

சிறை சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

`` பொதுவாக, சசிகலாவைச் சந்திக்கச் செல்லும் காலங்களில் எந்தவிதக் கெடுபிடிகளும் இருந்ததில்லை. சிறைக் கண்காணிப்பாளராக இருந்த சுந்தர் என்ற அதிகாரிதான் நடைமுறைகளைச் சரிசெய்து சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பார். அவர் மாற்றலாகிச் சென்றுவிட்டதால், 40 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்தமுறையும் இதேபோல் தாமதம் ஏற்பட்டதால், அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யும் சூழல் ஏற்பட்டது. இன்று நடந்த சந்திப்பில் மிக அமைதியாகவே நடக்கும் விவகாரங்களைக் கேட்டறிந்தார் சசிகலா" என விவரித்த மன்னார்குடி குடும்ப உறவுகள் சிலர்,

தினகரன்
தினகரன்

`` அ.ம.மு.க-வில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக விலகிச் செல்வது குறித்து, சில விஷயங்களை விளக்கியிருக்கிறார் தினகரன். தங்க தமிழ்ச்செல்வன் விலகியதற்கான தனிப்பட்ட காரணங்கள், இசக்கி சுப்பையாவுக்கு அரசுத் தரப்பில் இருந்து வர வேண்டிய காண்ட்ராக்ட் பணம் உள்ளிட்ட விவரங்களைக் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டுக் கொண்ட சசிகலா, ` நம்மிடம் அவர்கள் நன்றாகத்தானே இருந்தார்கள். ஒவ்வொருவராக விலகிச் செல்வது நல்லதில்லை. இனி யாரும் நம்மிடம் இருந்து விலகிச் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார்.

இதன்பிறகு, அ.ம.மு.க-வில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான பட்டியல் ஒன்றை சசிகலாவிடம் காட்டியிருக்கிறார் தினகரன். அதில் யார் யாருக்கு என்னென்ன பதவிகள் கொடுக்கப்பட இருக்கின்றன என்பதைப் பற்றி விளக்கியிருக்கிறார். இதனை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார். இதன்பிறகு விவேக் ஜெயராமனிடம் வர்த்தகரீதியிலான வரவு செலவு விவரங்களை கேட்டறிந்தார்" என்றவர்கள்,

`` கடந்த சில வாரமாகவே சசிகலா உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்றரீதியில் தகவல்கள் வெளிவந்தன. உண்மையில், அவர் மிக ஆரோக்கியமாக இருக்கிறார். உடல்நலனில் எந்தப் பிரச்னையும் இல்லை. விரைவில் சிறையைவிட்டு வெளியே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நம்மிடம் அவர்கள் நன்றாகத்தானே இருந்தார்கள். ஒவ்வொருவராக விலகிச் செல்வது நல்லதில்லை.
சசிகலா

நன்னடத்தை விதிகளின்படி அவர் முன்கூட்டியே விடுதலை ஆவதில் எந்தவிதச் சட்டச் சிக்கலும் இல்லை. சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டால், அனைத்துப் பிரச்னைகளும் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகிறார் சசிகலா. அதுதொடர்பாக சட்டரீதியான பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன" என்றனர் நிதானமாக.