Published:Updated:

சசிகலா ஆடியோ விவகாரம்: `கட்சிக்குள் சமூகரீதியாகப் பிரச்னையா?!’ - கே.சி.வீரமணி சொல்வதென்ன?

சசிகலா
News
சசிகலா

கே.பி.முனுசாமியைத் தொடர்ந்து, அவர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோரும் சசிகலாவை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் சமூகரீதியாக தன் பலத்தைக் காட்ட முயல்கிறாரா முனுசாமி என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

‘‘பதவி, பட்டம், அதிகாரம் ஆகியவற்றுக்கு நான் ஆசைப்பட்டவளில்லை. அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன்’’ என்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அடுக்குமொழி வசனத்தில் அறிக்கைவிட்டிருந்த சசிகலா, தற்சமயம் ரீ-என்ட்ரி கொடுக்க விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து சசிகலாவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தரப்பில் ரெட் சிக்னல் காட்டப்படுவதாகவும் தகவல்கள் உலாவுகின்றன.

‘‘ `பாகுபலி’, ராஜமாதாவைப்போல் சசிகலா தன்னை பாவித்துக்கொண்டு கண்ணசைவாலும், கையசைவாலும் அ.தி.மு.க தொண்டர்களைக் கட்டிப்போட திட்டமிட்டிருக்கிறார். அவரின் எண்ணம் ஈடேறாது’’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பதறுகிறது.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

அதிலும், துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமிக்குத்தான் சசிகலாவின் வருகை மிகவும் கவலையளிக்கச் செய்திருக்கிறது. சசிகலா பேசியிருந்த ஆடியோவுக்கு முதலில் எதிர்ப்புக்குரல் கொடுத்தவர் முனுசாமிதான். சசிகலாவுடன் முனுசாமிக்கு நீண்டகாலமாகவே பகை இருக்கிறது. 2011-ல், சசிகலா மற்றும் அவரின் உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, போயஸ் கார்டனிலிருந்தும் வெளியே அனுப்பினார்.

அந்த சமயம் பேசிய கே.பி.முனுசாமி, ‘‘சாணிகளெல்லாம் தங்களைப் பிள்ளையார் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அம்மா பிடித்து வைத்தால்தான் பிள்ளையார். இல்லையென்றால், அவர்கள் சாணிதான்’’ என்று சசிகலாவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சில காலம் கழித்து, மீண்டும் போயஸ் கார்டனுக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார் சசிகலா. அதன் பிறகு, கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மறைக்குப் பின்னரே லைம்லைட்டுக்கு வந்தார். சசிகலா தொடர்பான சில கேள்விகளுக்கு விளக்கம் பெறுவதற்காக கே.பி.முனுசாமியின் செல் நம்பரைக் கடந்த ஒரு வாரமாகத் தொடர்பு கொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து, முனுசாமியின் உதவியாளரான பழனிக்கு போன் செய்தோம்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

‘‘சசிகலா தொடர்பாக, கொஞ்ச நாளைக்கு எதையும் பேச வேண்டாம் என்றிருக்கிறார். சசிகலா ஆதரவாளர்கள் நிறைய பேர் போன் செய்கிறார்கள். அண்ணன் போனை எடுக்காததால், எனக்கு நள்ளிரவு 1 மணிக்கு ஒருவன் போன் செய்து வாயைப் பிடுங்கப் பார்க்கிறான்’’ என்றார் உதவியாளர் பழனி.

கே.பி.முனுசாமியைத் தொடர்ந்து, அவர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோரும் சசிகலாவை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் சமூகரீதியாகத் தன் பலத்தைக் காட்ட முயல்கிறாரா முனுசாமி என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்தநிலையில், சசிகலா தரப்பினரிடமிருந்து தனக்குக் கொலை மிரட்டல் வருவதாக திண்டிவனம் ரோஷனை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் சி.வி.சண்முகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகார் மனுவில், இதுவரை 500 போன் கால்கள் வந்திருப்பதாகவும், அனைவரும் ஆபாசமாகத் திட்டுவதாகவும் குமுறியிருக்கிறார் சண்முகம்.

கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரைப் போன்றே கே.சி.வீரமணிக்கும் சசிகலாவுடன் நீண்டகாலமாகப் பனிப்போர் நீடிக்கிறது. சி.வி.சண்முகத்துக்குக் கொலை மிரட்டல் வருவதையறிந்து கொந்தளித்துள்ளார் வீரமணி.

கே.சி.வீரமணியிடம் பேசினோம். ‘‘எடப்பாடியார் என்ன சொல்லியிருக்கிறாரோ, அதுதான் எங்களின் நிலைப்பாடும். கட்சித் தலைமைக்கு நாங்கள் கட்டுப்பட்டிருப்போம். சசிகலா மீது நடவடிக்கை எடுத்து ரொம்ப நாள் ஆகிறது. யாருடைய தூண்டுதலாலோ, அவர் இப்படிச் செய்கிறார். பின்னாலிருந்து அவரைப் பேச வைப்பவர் யாரென்றுதான் தெரியவில்லை.

கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி

இரட்டைத் தலைமையில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஓ.பி.எஸ்-ஸும், இ.பி.எஸ்-ஸும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்’’ என்றவரிடம்...

‘‘கட்சிக்குள் சமூகரீதியாக பிரச்னை எழுந்திருப்பதுபோல் தெரிகிறதே?’’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

‘‘அப்படியெல்லாம் இல்லைங்க’’ என்று ஒரே வரியில் அந்தக் கேள்வியைக் கடந்து சென்ற வீரமணி, ‘‘ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் எப்படியோ, பத்து ஆண்டுகள் இருந்துவிட்டோம். 2016 தேர்தலிலேயே, நாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது அதிசயம்தான். அந்தச் சமயத்தில், அம்மா கஷ்டப்பட்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். அம்மாவுக்குப் பிறகு வந்த எடப்பாடியாரும் சிறப்பாகத்தான் ஆட்சி செய்தார். விவசாயக் கடன்களை ரத்து செய்தார். எவ்வளவோ நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஆனாலும், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்’’ என்றவரிடம்...

‘‘ஒருவேளை சசிகலா கட்சியைக் கைப்பற்ற மீண்டும் அரசியலுக்குள் வந்துவிட்டால், உங்கள் முடிவு என்னவாக இருக்கும்?’’ என்றோம்.

அதற்கு அவர், ‘‘தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்றார்.