Published:Updated:

சசி ரெடி! - நிறைவேறுமா சபதம்?

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

ஜனவரி 30, 31-ம் தேதிகளில் சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படவிருக்கிறது. அதன் ரிசல்ட்டைப் பொறுத்து, பிப்ரவரி முதல் வாரம் அவர் தமிழகம் வருவார்.

சசி ரெடி! - நிறைவேறுமா சபதம்?

ஜனவரி 30, 31-ம் தேதிகளில் சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படவிருக்கிறது. அதன் ரிசல்ட்டைப் பொறுத்து, பிப்ரவரி முதல் வாரம் அவர் தமிழகம் வருவார்.

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

பிப்ரவரி 15, 2017, காலை 11:55 மணி. சசிகலாவின் லேண்ட் க்ரூஸர் ப்ரேடோ கார் ஜெயலலிதா சமாதி அமைந்திருந்த வளாகத்துக்குள் நுழைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சிறைவாசத்தை அனுபவிக்க அன்றைய தினம் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்ல வேண்டும். முன்னதாக ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்திருந்த சசிகலாவின் முகம் ரெளத்திரம், குழப்பம், சொல்லொண்ணா சோகம் என உணர்ச்சிப்பெருக்கில் கொந்தளித்தது. ஜெயலலிதா சமாதியில் ரோஜா இதழ்களைத் தூவியவர், திடீரென வெடித்தவராக சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சபதமெடுத்தார். நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், ஏறக்குறைய 40 ஆண்டுக்கால சசிகலாவின் ‘அ.தி.மு.க’ அரசியல் வரலாற்றில் முதன்முறையாக எடுத்த அதிரடி சபதம் அது. அதைக் கண்டு சசிகலாவைச் சுற்றியிருந்த இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் மட்டுமல்ல... டெல்லி பா.ஜ.க தலைமையும் சற்று ஆடித்தான் போனது.

விறுவிறுவென நகர்ந்துவிட்டன நான்காண்டுகள். அதற்குள் அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள். சசிகலாவின் நம்பிக்கைக்குரிய உள்வட்டப் பாதையிலிருந்து விலகி, அவரது அதிகார எல்லைக்கு அப்பால் போயிருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ட் கோ. சமீபத்தில் டெல்லியின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு, சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி. இந்தச் சூழலில், தண்டனைக் காலம் முடிந்து ஜனவரி 27-ம் தேதி முறைப்படி விடுதலையாகியிருக்கும் சசிகலா, தனது சபதத்தை நிறைவேற்றுவாரா என்ற கேள்விக்கு விடை தேடிப் புறப்பட்டோம்.

சசியின் முதல் அட்டாக்!

முதலில் சசிகலாவுக்கு மிக நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம். ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளரின் ஒப்புதல் இல்லாமல் மற்றொரு பொதுக்குழுவைக் கூட்ட முடியாது. ஆனால், இந்த விதியைமீறி 2017, செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டப்பட்டது. சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியதுடன், கட்சியின் கட்டமைப்பையும் மாற்றினார்கள். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு இப்போது வரை கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுக்கக் கோரி சசிகலா முறையீடு செய்யவிருக்கிறார். தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தையும் நாடவிருக்கிறார். இப்போதைய அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் சசிகலா தரப்பின் முதல் அட்டாக் இதுதான்.

சசிகலா
சசிகலா

ஜனவரி 30, 31-ம் தேதிகளில் சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படவிருக்கிறது. அதன் ரிசல்ட்டைப் பொறுத்து, பிப்ரவரி முதல் வாரம் அவர் தமிழகம் வருவார். பிப்ரவரி 5-ம் தேதி இளவரசி ரிலீஸாக இருப்பதால், அவரையும் தன்னுடன் அழைத்துவர சசிகலா விருப்பப்படுகிறார்’’ என்றவர்கள், சசிகலாவின் தற்போதைய மனநிலை குறித்தும் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘‘அக்காவின் ஆசீர்வாதம்!”

‘‘ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்ட சமயத்தில்தான், ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழாவைக் கோலாகலமாக நடத்தியது எடப்பாடி அரசு. சசிகலா மீது தொண்டர்களின் கவனம் குவிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அதே தேதியில் விழாவை நடத்தினார் எடப்பாடி. அப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், சசிகலாவிடம் பேசுவதற்காக மன்னார்குடி உறவுகளை அலைபேசியில் அழைத்தார்கள். ஆனால், ‘எதுவா இருந்தாலும் நீங்களே பேசிடுங்க’ என்று சொல்லி அவர்களிடம் சசிகலா சொல்லிவிட்டார். நினைவிடத் திறப்புவிழாவில் சசிகலாவின் முகமூடியை அணிந்துகொண்டு மாஸ் காட்ட ஆயிரம் பேரைத் தயார் செய்தது அ.ம.மு.க தரப்பு. விஷயம் கேள்விப்பட்டு கோபப்பட்ட சசிகலா, ‘அங்கே போய் எந்த கலாட்டாவும் செய்யக் கூடாது. நான் ரிலீஸ் ஆகுற தேதியில, நினைவிடத் திறப்புவிழா மூலமா அக்காவே என்னை ஆசீர்வதிச்சுருக்காங்க’ என்று சொல்லிவிட்டார். அதன் பிறகுதான், அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன், ‘சின்னம்மா விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகிறார்கள்’ என்று பத்திரிகையாளர்களிடம் சொன்னார்.

விக்டோரியா அரசு மருத்துவமனையில் தமிழ் தெரிந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் சகஜமாகப் பேசினார் சசிகலா. அவர்களில் சிலர் சசிகலாவிடம், ‘ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் நீங்கதான்னு சொல்றாங்கம்மா. தமிழ்நாட்டு பெண்கள்கிட்டயும் இந்தக் கருத்து இருக்கு’ என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள். இதே குற்றச்சாட்டைத்தான் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் சொல்வதாக சசிகலாவின் காதுக்கு ஏற்கெனவே தகவல் எட்டியிருந்தது. அதனால்தான், மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தன்மீது அதிருப்தியிலிருப்பதாக சசிகலா நினைக்கிறார். இந்த அவப்பெயரைக் களைவது சசிகலாவுக்கு மற்றொரு சவாலாக மாறியிருக்கிறது. இதற்காக ஒரு திட்டத்தையும் தயார் செய்திருக்கிறார் சசிகலா.

வீடியோ பிரம்மாஸ்திரம்!

2017, டிசம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மறைந்த அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ, கண நேரத்தில் சசிகலா மீதிருந்த வெறுப்பை நொறுக்கித் தவிடுபொடியாக்கியது. சிகிச்சையிலிருந்தபோது ஜெயலலிதா பேசிய பேச்சுகள், தற்போதைய அமைச்சர்களைப் பற்றி அவர் சொன்ன கருத்துகள், தன்னை உடனிருந்து கவனித்துவரும் சசிகலா பற்றி அவர் பெருமைப்பட்ட விஷயங்கள் எல்லாமே வீடியோக்களாக உள்ளன. சசிகலா தமிழகம் வந்ததும், ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் இல்லாத வகையிலான வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்வைக் கிளப்பும். ஆறுமுகசாமி ஆணையத்தைக் கையில் வைத்துக்கொண்டு, சசிகலாவுக்கு குடைச்சல் கொடுக்க எடப்பாடி தரப்பு திட்டமிடுகிறது. அந்தத் திட்டங்களையெல்லாம் இந்த வீடியோக்கள் உடைத்துவிடும். ஜெயலலிதாவின் பிம்பத்துக்கு எந்த பாதிப்பும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகள் அந்த வீடியோக்களை வெளியிடாமல் சசிகலா அமைதிகாத்தார். ஆனால், இனி அந்த பிரம்மாஸ்திரத்தைக் கையிலெடுக்க அவர் தயாராகிவிட்டார்’’ என்றார்கள் விரிவாக.

‘சசிகலா என்ன திட்டமிட்டாலும், டெல்லி பா.ஜ.க அதிகாரத்தை மீறி அவரால் செயல்பட முடியாது’ என்கிற கருத்து அரசியல் வட்டாரத்தில் பலமாக நிலவுகிறது. அவர்களிடம் பேசியபோது, ‘‘சசிகலா மீது வருமான வரித்துறையின் பிடி இறுக்கமாகவே விழுந்திருக்கிறது. 2017, நவம்பரில் சசிகலா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்புடைய 175 இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றினர். பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலகட்டத்தில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சசிகலா வாங்கியதாகவும் வருமான வரித்துறை கண்டறிந்தது. இதற்கு ஆதாரமாக இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் மொபைலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு போட்டோவையும், செந்தில் என்பவரின் வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் சமர்ப்பித்தனர். 2020, ஆகஸ்ட் 31-ம் தேதி, சசிகலாவுக்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது.

இந்த வழக்குகள் போக, 1996-ம் வருடம் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் ஜெயா டி.வி-க்கு வெளிநாட்டிலிருந்து கருவிகள் வாங்கிய விவகாரத்தில் ஃபெரா சட்டத்தின்கீழ் சசிகலா உள்ளிட்ட சிலரின் பெயர்களில் மத்திய அமலாக்கப்பிரிவுத்துறை வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூரிலுள்ள பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சிறைச்சாலையில் இருக்கும்போது, சசிகலா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக ஆஜராகிவந்தார். இந்த வழக்கும் காலைச் சுற்றிய பாம்பாக சசிகலாவை அச்சுறுத்திவருகிறது. இந்த வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்கும்படி நீதிமன்றத்திடம் சசிகலா தரப்பு கோரிக்கை வைக்கத் தயாராகிவரும் நிலையில், டெல்லியின் கருணைப் பார்வையிருந்தால் மட்டுமே தப்பிக்க முடியுமென்ற நெருக்கடியில் சசிகலா இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதையும் மீறி பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் தாக்க சசிகலா தயாரா என்பதுதான் கேள்வி’’ என்கிறார்கள். ஆனால், ‘சசிகலா ரெடி’ என்கிறார்கள் அவருக்கு மிக மிக நெருக்கமானவர்கள்.

சசி ரெடி! - நிறைவேறுமா சபதம்?

நிறைவேறுமா சபதம்?

நம்மிடம் பேசிய மன்னார்குடி சசிகலா உறவினர்கள் சிலர், ‘‘சசிகலாவுக்கு 66 வயதாகிவிட்டது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்த ஒரே காரணத்தாலேயே, பொய்யான சொத்துக்குவிப்பு வழக்கில் இத்தனை ஆண்டுகள் சிறைவாசத்தையும் அவர் அனுபவித்துவிட்டார். சிறையில் கொசுக்கடியிலும் மன இறுக்கத்திலும் உழன்றவருக்கு, அதற்கு மேல் எதுவும் பெரிய ஆபத்து வந்துவிடப் போவதில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தையே கடும் சிரமப்பட்டுதான் செலுத்தினோம். இதற்காக ம.நடராஜனுக்குச் சொந்தமான வீட்டை ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அடமானம்வைக்க வேண்டியதாகிவிட்டது. சுதாகரனுக்குக் கட்டுவதற்காக இன்னும் பணம் திரட்ட முடியவில்லை. இதற்கு மேல் சசிகலா சந்திப்பதற்கு எதுவுமில்லை. அவர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டார். பிப்ரவரி 15, 2017-ல் ஜெயலலிதா சமாதியில் செய்த சபதத்தை நிறைவேற்ற அவர் தயாராகிவிட்டார்.

இத்தனை ஆண்டுகளில், அரசியல் குழப்பம் ஏற்படும்போதெல்லாம், ‘ஏதாவது அறிக்கை வெளியிடுங்கள்’ என்போம். அதற்கு, ‘அமைதியாக இருங்கள். நான் ஒரு சிறைக்கைதி... இப்போது எந்த அறிக்கையும் என் பெயரில் வெளியிட வேண்டாம்’ என்று மறுத்துவிடுவார் சசிகலா. அந்தச் சபதம் குறித்து நாங்கள் கேட்கும்போதெல்லாம் ‘அக்கா என்கிட்ட ஒரு விஷயம் சொன்னாங்க. அவர் சொன்னதை நிறைவேற்றுவேன்னு சத்தியம் செஞ்சேன்’ என்று அமைதியாகிவிடுவார். 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் சிறை சென்றார்கள். பிறகு அவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுதலையானாலும், ஜெயலலிதாவின் மனமும் உடலும் நலிவடைந்துவிட்டன. இதற்குப் பின்னணியில் நடைபெற்ற அரசியல் சதுரங்கம் அனைத்தும் சசிகலாவுக்குத் தெரியும். ‘அக்காவை இப்படி ஆக்கியதே பா.ஜ.க-வும் தி.மு.க-வும்தான். அவர்களைச் சும்மாவிடக் கூடாது’ என்ற கோபம் இன்றுவரை சசிகலா மனதில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது. அதன் தீ ஜுவாலை டெல்லியைப் பொசுக்கப்போவது நிச்சயம்.

அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்குள் பிரச்னை முடிந்தபாடில்லை. வேட்பாளர் தேர்வின்போது நிச்சயமாகச் சச்சரவு எழும். பட்டியல் வெளியானதும் சீட் கிடைக்காதவர்கள் சசிகலாவிடம் சரணாகதி அடைவார்கள். இதற்கு மேல் சசிகலாவை பா.ஜ.க தொடர்ந்து தாக்கினாலும், அது சசி மீது மக்களிடம் அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தும். சசிகலா ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்’’ என்றார்கள்.

ஒவ்வொரு நாளும் மாறிவரும் அரசியல் சூழலில் எதுவும் நடக்கலாம். சசிகலா, சபதத்தை நிறைவேற்றுவாரா... அரசியல் நிர்பந்தங்களுக்கு பணிவாரா என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்!