அரசியல்
Published:Updated:

உறவுகள் தொடர்கதை... சங்கடத்தில் சசிகலா!

சசிகலா, தினகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா, தினகரன்

- அ.கல்யாணசுந்தரம்

கடந்த 1996 தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்த நேரம். மூத்த நிர்வாகிகள் பலரையும் அழைத்து, தோல்விக்கான காரணங்களை விசாரித்தார் ஜெயலலிதா. மிக ஒல்லியான தேகம்கொண்ட முன்னாள் அமைச்சர் ஒருவர், “வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை நீங்கள் மிக ஆடம்பரமாக நடத்தியதால்தான் இவ்வளவு பெரிய தோல்வி. மன்னார்குடிச் சொந்தங்களை நீங்கள் ஒதுக்கிவைத்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்” என்றார். அடுத்த கணமே நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. ஆம், சொந்தங்களை ஒதுக்கச் சொன்ன முன்னாள் அமைச்சரைக் கட்சியிலிருந்து ஒதுக்கிவைத்தார் ஜெ.

ஜெயானந், திவாகரன்
ஜெயானந், திவாகரன்

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயத்தில் சசிகலாவும் இப்படித்தான். ஜெயலலிதா இறந்தபோது, ராஜாஜி ஹாலில் மன்னார்குடி உறவினர்கள் புடைசூழ நின்றதுதான் சசிகலாவுக்கு எதிரான புகைச்சலை உருவாக்கியது. ஜெ-வால் ஒதுக்கப்பட்ட டி.டி.வி.தினகரனைக் கட்சிக்குள் கொண்டுவந்து துணைப் பொதுச்செயலாளராக நியமித்ததுதான் இன்று கட்சிக்குள் நடக்கும் அத்தனை சிக்கல்களுக்கும் காரணமாக அமைந்தது. ஆனாலும், உறவுகள் விஷயத்தில் இன்னமும் கடிவாளம் போட முடியாமல் சசிகலா திண்டாடவே செய்கிறார்.

டி.டி.வி.தினகரன் ஒருபுறம், மன்னார்குடி திவாகரன் மறுபுறம் என சசிகலாவைத் திண்டாடவைக்கும் மோதல் குறித்து விரிவாகப் பேசுகிறார்கள் உறவு வட்டாரத்தினர்.

“சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் இறந்தபோது, துக்கம் விசாரிக்க வந்திருந்த அமைச்சர்களை தினகரனுக்கு எதிராகக் களமிறக்கியதே திவாகரன்தான். தினகரனின் அரட்டல் மிரட்டல் உத்தரவுகளால் நொந்துபோயிருந்த அமைச்சர்கள், திவாகரனின் தயவு கிடைத்ததும் பொங்கியெழுந்தார்கள். தினகரனைக் கட்சியைவிட்டு ஒதுங்கியிருக்கச் சொல்கிற அளவுக்குத் துணிந்தார்கள். தினகரன் தனிக்கட்சி தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒருவழியாக சசிகலா சமாதானம் பேசி, திவாகரனையும் தினகரனையும் சேர்த்துவைத்தார். ஆனாலும் சில மாதங்களிலேயே தினகரனுக்குப் போட்டியாகப் புதுக்கட்சி தொடங்கினார் திவாகரன். ‘என் பெயரை திவாகரன் பயன்படுத்தக் கூடாது’ என சசிகலா நோட்டீஸ் அனுப்ப, ‘சசிகலா என் அக்காவே கிடையாது’ என அறிவித்தார் திவாகரன். அப்படியே முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான ஆளாகவும் மாறினார். எடப்பாடியின் தாயார் மறைவுக்கு, தன் மகன் ஜெயானந்தை நேரில் அனுப்பி ஆறுதல் சொல்லவைத்தார். இதற்கிடையில், தினகரனால் ஏற்பட்ட அத்தனை சிக்கல்களையும் தன் தரப்பு நியாயத்தையும் பட்டியலாக்கி சசிகலாவுக்குக் கடிதம் எழுதினார். சசிகலாவும் மன்னிக்கும் மனநிலைக்கு வந்தார். சசிகலா ரிலீஸ் நேரத்தில் திவாகரனை அணுகிய எடப்பாடி தரப்பு, ‘நாங்கள் எப்போதும் சின்னம்மாவுக்கு விசுவாசமானவர்கள்தான். டெல்லியின் அழுத்தத்தால்தான் சில சங்கடங்கள். சின்னம்மா வெளியே வரும்போது இரு தரப்பும் அமர்ந்து பேசினாலே சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிடும். கட்சியிலும் அவருக்கு உரிய பொறுப்பை நிச்சயம் ஒதுக்கித் தருவோம்’ எனப் பேசியது. இதைக் கடிதம் மூலமாக சசிகலாவிடம் கொண்டுபோனார் திவாகரன்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

இதற்கிடையில் சசிகலா வருகையை வைத்துப் பரபரப்பு கிளப்ப தினகரன் முடிவெடுத்தார். பிரஸ் மீட் வைத்து, ஆளும் அரசைச் சீண்டினார்; மந்திரிகளைக் கலாய்த்தார். இதில், எடப்பாடி தரப்பு அப்செட். மறுபடியும் திவாகரனை அவர்கள் அணுக, ‘அக்காவிடம் பேசுறேன். அவங்க தினகரனைக் கண்டிப்பாங்க’ என்றார். ஆனால், ஆளும்தரப்புக்கும் சசிகலாவுக்குமிடையே சமாதானம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த தினகரன், ஆளும் தரப்பைச் சீண்டிக்கொண்டே இருந்தார்; மோதல் பெரிதானது. எடப்பாடியா, சசிகலாவா என்கிற அளவுக்கு இன்றைக்கு மாறிவிட்டது. கட்சியே கைக்கு வந்திருக்க வேண்டிய நல்ல வாய்ப்பை தினகரன் நொறுக்கிவிட்டதாக சசிகலாவிடம் குமுறியிருக்கிறார் திவாகரன். ‘எடப்பாடியின் பணத்துக்கு திவாகரன் விலைபோய்விட்டார்’ என தினகரன் புகார் வாசிக்க, ‘தி.மு.க-விடம் விலைபோனது தினகரன்தான்’ எனப் பதிலுக்குப் பாய்ந்திருக்கிறார் திவாகரன். தினகரனைவிட்டு விலகினால்தான் சசிகலாவுக்கு விடிவு பிறக்கும் என்கிற வகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனைப் பேசவைத்ததும் திவாகரன் வேலைதான். தம்பி திவாகரனா, அக்கா மகன் தினகரனா எனத் திண்டாடுகிறார் சசிகலா” என விவரித்தவர்கள், அடுத்தகட்ட உறவுகளின் நெருக்கடிகளையும் சொன்னார்கள்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

“வெளியே வந்திருக்கும் சசிகலாவிடம் யார் நல்ல பெயர் வாங்குவது என உறவுகள் மத்தியில் பெரிய போட்டியே நடக்கிறது. இப்போதைக்கு சசிகலாவிடம் முக்கியத்துவம் பெற்றிருப்பவர் டாக்டர் வெங்கடேஷ். தினகரனின் சொந்த மைத்துனர். ஆனாலும், இவருக்கும் தினகரனுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால், வெங்கடேஷுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தினகரனை முகம்சுளிக்கவைக்கிறது. இதற்கிடையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா சசிகலாவை தினமும் சந்தித்துப் பேசுகிற தகவல் தெரிந்து தினகரன் கொந்தளிக்கிறார். காரணம், ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறுகிற வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டபோது அதை எதிர்த்து பிரஸ் மீட் வைத்தவர் கிருஷ்ணபிரியா. அதனால், சசிகலாவின் எதிர்ப்புக்கும் ஆளானவர். ஆனால், இப்போது சசிகலாவுக்கு கிருஷ்ணபிரியா பக்கபலமாக இருக்கிறார். எப்போதுமே எம்.நடராஜனின் உறவினர்களுக்கும் தினகரனுக்கும் ஆகாது. இப்போது முக்கியத்துவம் பெறும் உறவினர்களில் நடராஜனின் சகோதரர்கள் எம்.ராமச்சந்திரனும் பழனிவேலும் முதன்மையானவர்கள். இவ்வளவு சங்கடங்கள் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தினமும் வந்து சசிகலாவைச் சந்தித்து அரசியல் ஆலோசனைகளை நடத்திவிட்டுப் போகிறார் தினகரன். அ.ம.மு.க-வை 234 தொகுதிகளிலும் போட்டியிடவைத்து ஆளும்தரப்புக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் திட்டம். அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகத் திட்டியதைக்கூட தினகரன் ரசிக்கவே செய்தார். காரணம், இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் தினகரனின் எண்ணம். திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், கிருஷ்ணபிரியா போன்றவர்கள் சசிகலாவை இந்த எண்ணத்திலிருந்து மாற்றிவிடக் கூடாது என்பதுதான் தினகரனின் பதற்றம்” என்கிறார்கள் விளக்கமாக.

இளவரசி
இளவரசி
கிருஷ்ணபிரியா
கிருஷ்ணபிரியா
விவேக் ஜெயராமன்
விவேக் ஜெயராமன்

சென்னை திரும்பிய நாளிலிருந்து அமைதியாக இருக்கும் சசிகலா, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாத புதிர். தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செல்லும் திட்டம், பயண வழிகளோடு ரெடியாகியிருப்பதாகச் சொல்லும் சிலர், “இந்தப் பயணத்தில் சசிகலாவுடன் செல்லப்போவது யார் என்கிற போட்டி பெரிதாக நடக்கிறது. ஒரு பெண்ணாக கிருஷ்ணபிரியா உடனிருப்பது சசிகலாவுக்கு உதவியாக இருக்கும். ஆனால், கிருஷ்ணபிரியா சசிகலாவுக்கு அருகே இருக்கக் கூடாது எனப் பெரிய டீமே வேலைசெய்கிறது. பிசினஸ்ரீதியான வேலைகளைக் கச்சிதமாகச் செய்துவரும் விவேக் ஜெயராமன், இந்தச் சுற்றுப் பயணத்தில் முக்கிய அங்கம் வகிக்கலாம். ஆனால், தன் மகன் ஜெய் ஆனந்தை முன்னிலைப்படுத்த நினைக்கும் திவாகரன், விவேக் ஜெயராமன் குறித்துப் பெரிய புகார்ப் பட்டியல் வாசித்திருக்கிறார். பெங்களூரிலிருந்து வந்தபோது ஜெய் ஆனந்தின் கார் விபத்துக்குள்ளானது. அது குறித்துக்கூட சசிகலா விசாரிக்கவில்லை. பெங்களூரூ டு சென்னைப் பயணத்தில் தானாகச் சேர்ந்த கூட்டத்தை, தானே திரட்டியதாக தினகரன் சொல்கிறார். அதைக் கண்மூடித்தனமாக நம்பும் சசிகலா, திவாகரன் தரப்புக்குக் காதுகொடுக்காமல் இருக்கிறார். அ.தி.மு.க-விலுள்ள யாருமே சசிகலாவைத் திட்டவில்லை; தினகரனைத்தான் திட்டுகிறார்கள். அமைச்சர் சி.வி.சண்முகம் ‘தினகரனிடம் சசிகலா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ எனப் பேசினார். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அ.தி.மு.க-வில் ஒன்றுபட்ட தலைமை குறித்துப் பேசுவார் எனத் தெரிந்து ஒரத்தநாட்டில் திடீர் பிரஸ் மீட் வைத்த தினகரன், கிட்டத்தட்ட தனித்துப் போட்டி என்கிற அளவுக்கு அறிவித்தார். இருதரப்பும் இணைவதை தினகரன் விரும்பவில்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணமில்லை. இவ்வளவுக்குப் பிறகும் சசிகலா தினகரனை விட்டுக்கொடுக்காமல் நம்புகிறார். அதனால், வெளிப்படையாகவே இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிற முடிவுக்கு வந்துவிட்டார் திவாகரன். சசிகலாவுக்கு இது பெரிய தலைவலியாக அமையும்” என்கிறார்கள் ஆதங்கமாக.

பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களைச் சமாளிப்பதைவிட தினகரன், திவாகரன் என நீளும் உறவு வட்டாரங்களைச் சமாளிப்பதுதான் இப்போது சசிகலாவுக்கு இருக்கும் பெரிய சவால்!

போயஸ் கார்டனில் சசிகலா!

கொரோனா பாதிப்புக்காகச் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, தனியார் விடுதியில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அப்போது அவருடன் உடனிருக்க தினகரனின் மனைவி அனுராதா விரும்ப, அவரை வர வேண்டாம் எனச் சொன்ன சசிகலா, எம்.நடராஜனின் சகோதரர் மருமகளை அனுப்பச் சொன்னார். தற்போது தி.நகர் வீட்டிலிருக்கும் சசிகலா, தன் அண்ணி இளவரசியைத் தன்னுடனேயே தங்கும்படி சொல்லியிருக்கிறார். இன்னும் சில நாள்களில், போயஸ் கார்டனில் வேதா இல்லத்துக்கு எதிரே கட்டப்பட்டுவரும் வீட்டுக்கு மாறவிருக்கிறார் சசிகலா. அதன் பிறகே சசிகலாவின் அரசியல் அதிரடி ஆரம்பமாகும் என்கிறார்கள்.