Published:Updated:

சசிகலா விடுதலை: ஜெ.நினைவிடத் திறப்பு... டி.டி.வி.தினகரன் சூளுரைப்பு... பின்னணி என்ன?

சசிகலா - தினகரன் - ஜெயலலிதா
சசிகலா - தினகரன் - ஜெயலலிதா

சமீபநாள்களாக அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் இணையப்போகிறது என செய்திகள் கசிந்துகொண்டிருந்த நிலையில், தினகரனின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் பல அதிரடியான நிகழ்வுகள் அரங்கேறிய நாளாக நேற்றைய தினம் இருந்தது. ஒருபுறம் சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த நான்காண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்த சசிகலா, முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா தொற்றின் காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். மறுபுறம் தமிழகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழா சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழக அமைச்சர்கள், பல்வேறு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இரண்டு நிகழ்வுகளும் திட்டமிட்டு ஒரே நாளில் நடத்தப்படுகின்றனவா இல்லை இது எதேச்சையான ஒன்றா என அரசியல் அரங்கில் பல விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், பல புதிய அரசியல் அணுகுண்டுகளையும் வீசிச் சென்றிருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், டி.டி.வி. தினகரன்.

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா

சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு வந்தார் தினகரன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஜெ. நினைவிடத் திறப்பு குறித்துக் கேட்க,

``சின்னம்மாவின் விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன்'' என்றார். தொடர்ந்து அவரிடம், அ.தி.மு.க., அ.ம.மு.க இணைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்க,``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே அ.தி.மு.க-வை மீட்டெடுத்து அம்மாவின் உண்மையான ஆட்சியைக் கொடுக்கத்தான். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன’' என்றார்.

சமீபநாள்களாக அ.தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் இணையப்போகின்றன எனச் செய்திகள் கசிந்துகொண்டிருந்த நிலையில், தினகரனின் இந்தக் கருத்து அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

இது குறித்து அ.ம.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், வீர.வெற்றி பாண்டியனிடம் பேசினோம்.

``சின்னம்மா விடுதலையாகி விரைவில் தமிழகம் வந்துவிடுவார். மக்களின் கவனமும், ஊடகங்களின் கவனமும் அவரின் மீது விழுந்துவிடும் என்பதால், ராஜதந்திரமாகச் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு அம்மாவின் நினைவிடத் திறப்புவிழாவை அதே தினத்தில் வைத்தார்கள். ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக, சின்னம்மா தமிழகம் வருவது தள்ளிப்போயிருக்கிறது. அதேவேளையில், அவரின் விடுதலைச் செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதேநாளில், அம்மாவின் நினைவிடமும் திறக்கப்படுவதை எங்கள் தலைவர் நேர்மறையான ஒரு விஷயமாகத்தான் பார்க்கிறார். அதைத்தான் அவர், `சின்னம்மாவின் விடுதலையைச் சென்னையிலும் கொண்டாடுகிறார்கள்' என்று சொன்னார்.

காரணம், சின்னம்மா, அம்மாவுடன் பல்லாண்டு காலம் கூடவே பயணித்தவர். பல நெருக்கடியான காலகட்டத்தில் உறுதுணையாக நின்றவர். கூடவே, அம்மாவின் இறப்புக்குப் பிறகு, உடலை தகனம் செய்ய இடம் இல்லை. மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்க வேண்டும் எனப் பல குழப்பமான சூழல் நிலவியது. அந்த நேரத்தில், தலைவரின் நினைவிடம் இருக்கும் இடத்திலேயே இடம் இருக்கிறது; அது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என சின்னம்மாதான் ஆலோசனை கொடுத்தார்.

வீர.வெற்றி பாண்டியன்
வீர.வெற்றி பாண்டியன்

அதை அப்போதைய தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் பாராட்டினார். எடப்பாடி பழனிசாமியும் சின்னம்மாவின் புத்திக்கூர்மை குறித்து மேடைகளில் பேசியிருக்கிறார். நினைவிடம் அமைப்பதற்கான இடத் தேர்விலும் சின்னம்மாவின் பங்கு இருக்கிறது. இந்தநிலையில், அம்மாவின் நினைவிடத் திறப்புவிழா நடக்கும்போது, சின்னம்மா சிறையில் கைதியாக இருந்திருந்தால், அவருக்கு அதுவே பெரிய மன உளைச்சலைக் கொடுத்திருக்கும். ஆனால், தற்போது அவர் வெளியில் வந்துவிட்டார். அந்தவகையில், எங்கள் சின்னம்மாவின் விடுதலைச் செய்தியும் நினைவிடத் திறப்பும் ஒரே நாளில் நடந்திருப்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். அதேவேளையில், அகில இந்திய அளவில் பல தலைவர்களை அழைத்து இந்தத் திறப்புவிழாவை நடத்தியிருக்கலாம் என்கிற வருத்தம் எங்களுக்கு உண்டு.

அ.ம.மு.க என்கிற கட்சி ஆரம்பிக்கப்பட்டதே அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டும், அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும் சின்னம்மா இருக்கிறார். அது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. கட்சியை மீட்டெடுப்பதற்காகச் சட்ட நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பார்கள். மக்களின் மீதும், உண்மையான அ.தி.மு.க தொண்டர்களின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது. இந்த ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு, பெரும்பான்மையான அ.தி.மு.க நிர்வாகிகளும் சின்னம்மாவின் பக்கம் வந்துவிடுவார்கள்'' என்கிறார் அவர்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

தினகரனின் இந்தக் கருத்துகள் குறித்து, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜிடம் பேசினோம்.

``அரசியல் களத்தில் காணாமல்போய்விட்ட ஒருவர் தினகரன். அவர், அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இன்று விடுதலையாகியிருக்கும் சசிகலாவின் மீது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த வெறுப்புமில்லை. ஆனால், அவர்களுக்கும் அ.தி.மு.க என்கிற கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். அ.தி.மு.க-வுக்கு பல துரோகங்களைச் செய்தவர் தினகரன். அவரால் நாங்கள் பல தொல்லைகளை அனுபவித்தோம். அதையும் மீறி, ஆட்சியையும் கட்சியையும் ஒற்றுமையாகக் கட்டிக் காப்பாற்றிவந்திருக்கிறோம்.

ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த சசிகலா குடும்பத்தினர், அம்மாவின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.கவில் அதிகாரம் செலுத்தியதை எங்கள் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தினகரனோ, சசிகலாவோ அ.தி.மு.க-வின் உறுப்பினர்களே கிடையாது. அதனால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தினகரனாலும், அந்தக் குடும்பத்தினராலும் அ.தி.மு.க-வைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

சசிகலா
சசிகலா
க.தனசேகரன்

அம்மா அவர்களுடைய நினைவு மண்டபத்தையும், அருங்காட்சியகத்தையும் இந்தத் தேதியில் திறக்க வேண்டும் என்பது, ஒரு மாதத்துக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு. நல்ல முகூர்த்த நாள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆனால், சசிகலா அவர்கள் இன்றைய தேதியில் விடுதலை செய்யப்படுகிறார் என்கிற விஷயம் பத்து நாள்களுக்கு முன்பாகத்தான் தெரியவந்தது. அதனால், இரண்டு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சசிகலாவின் தமிழக வருகையை மடைமாற்ற வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களின் கவனம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை வெற்றிபெறவைத்து, அம்மாவின் ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதில் மட்டும்தான் இருக்கிறது'' என்கிறார் அவர்.

சசிகலா: முடிவுக்கு வந்தது 4 ஆண்டுகள் சிறை தண்டனை! -  மருத்துவமனையில் இருந்து நேரடி விடுதலை

இனி என்ன நடக்கும்... மூத்த பத்திரிகையாளர் கணபதியிடம் பேசினோம்.

``அ.தி.மு.கவுடன் அ.ம.மு.க இணையப்போகிறது என்கிற செய்தி அரசியல் வட்டாரத்தில் சமீபத்தில் பேசப்பட்டுவந்தது. குருமூர்த்தியும், தி.மு.க-வைத் தோற்கடிக்க இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தார். தினகரனும் பா.ஜ.க குறித்து எதுவும் பேசாமல் இருந்தார். சசிகலா விடுதலைக்குப் பிறகு அதற்கான முன்னெடுப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினகரன் இன்று பேசியிருப்பதைவைத்துப் பார்க்கும்போது, எடப்பாடி சொன்னதுபோல நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. `இணைப்பு வேண்டாம்' என்கிற எடப்பாடியின் கருத்தை பா.ஜ.க-வும் ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)
கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

எடப்பாடி, ஓ.பி.எஸ் குறித்து சமீபத்தில் எதுவும் பேசாமல் இருந்த தினகரன், இனிமேல் கடுமையாகப் பேசுவார். பா.ஜ.க-வை தற்போது இல்லாவிட்டாலும், தேர்தல் நெருக்கத்தில் விமர்சிப்பார். அ.ம.மு.க-வை வலிமைப்படுத்தும் வேலையில் இறங்குவார். அ.தி.மு.க-வில் இருக்கும் அதிருப்தியாளர்களைத் தன் பக்கம் இழுப்பார். சசிகலாவின் விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னதுகூட, தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள், சசிகலா ஆதரவு நிர்வாகிகள் இன்னும் அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள் என்று வெளிப்படுத்துவதற்காகத்தான். வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தினகரன் இன்னும் சில நாள்களில் அறிவிப்பார். கண்டிப்பாக, கணிசமான வாக்குகளைப் பிரிப்பார். இதுதான் நடக்கும்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு