சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சசிகலாவின் செகண்ட் இன்னிங்ஸ்!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

`தீவிர விசுவாசிகள்' என்று கருதப்படும் சிலரின் கடிதங்களை மட்டும் தனியாகப் பிரித்து வைக்கிறார், சசிகலாவின் உதவியாளர் கார்த்தி என்கிற கார்த்திகேயன்.

சசிகலா தரப்பு வெளியிட்ட ஆடியோக்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது சசிகலாவைக் கண்டித்து அ.தி.மு.க மாவட்டக் கூட்டங்களில் போடப்பட்ட தீர்மானங்களின் எண்ணிக்கை அதிகமா?

இப்படி ஓர் அரசியல் பட்டிமன்றம் நடத்தலாம் என்கிற அளவுக்கு அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு பற்றி எரிகிறது. அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா பேசியதாக இதுவரை சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவிடம் பேசியதால் இதுவரை சுமார் 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவின் செகண்ட் இன்னிங்ஸ்!

'இந்தக் கட்சியில் நான்தான் அதிகார மையம். என் பேச்சுக்குத்தான் கட்சி கட்டுப்படுகிறது' என்று காட்டுகிறார், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி. அவரின் கட்டளைக்கு ஏற்றபடி ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கூட்டம் நடக்கிறது. ஒரேமாதிரியான தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்படுகின்றன. `கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இப்போது அவர் அ.தி.மு.க-வை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத சசிகலா தினமும் தொலைபேசியில் சிலருடன் பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றிவருகிறார். அ.தி.மு.க-வுக்கும் சசிகலாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவருடன் பேசுவோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்பதுபோல அந்தத் தீர்மானத்தின் வாசகங்கள் இருக்கின்றன.

தீவிர அரசியலிலிருந்து ஒதுங்குவதாக கடந்த மார்ச் 3-ம் தேதி அறிவித்தார் சசிகலா. அதன்பின் தேர்தல் நேரத்தில் கோயில்களுக்குச் சுற்றுப்பயணம் செய்ததைத் தாண்டி அவர் வெளியில் எங்கும் வரவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையான நாள் முதல் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் சசிகலா வசிக்கிறார். அங்கிருந்தபடி அவர் தரப்பினர் வெளியிடும் ஆடியோக்கள் `சசிகலா அரசியலின் இரண்டாவது இன்னிங்ஸ்' என்று வர்ணிக்கப்படுகின்றன.

இந்த ஆடியோக்கள் எப்படி வெளியாகின்றன? தன்னுடன் பேசுவோரை சசிகலா எப்படித் தேர்வு செய்கிறார்?

சசிகலா பெங்களூரு சிறையில் இருந்த நாள்களில் அவருக்கு அ.தி.மு.க தொண்டர்கள் பலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் படித்த சசிகலா, அவற்றில் சில கடிதங்களை பத்திரமாகச் சேகரித்து வைத்திருந்தாராம். சிறையிலிருந்து விடுதலையானபோது, கையோடு அவற்றைக் கொண்டுவந்திருக்கிறார். இப்போதும் சசிகலாவுக்குக் கடிதங்கள் வருகின்றன. சிலர் முகவரி தெரிந்துகொண்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலர், `சின்னம்மா சசிகலா, தி.நகர், சென்னை' என்று மட்டும் முகவரியை எழுதிக் கடிதம் அனுப்புகிறார்கள். அந்தக் கடிதங்களும் அவரை வந்தடைகின்றன.

இவற்றில், `தீவிர விசுவாசிகள்' என்று கருதப்படும் சிலரின் கடிதங்களை மட்டும் தனியாகப் பிரித்து வைக்கிறார், சசிகலாவின் உதவியாளர் கார்த்தி என்கிற கார்த்திகேயன். ஜெயலலிதா இருந்த காலம் முதலே உதவியாளராக இருப்பவர். திருச்சிக்காரரான இவரை, தன் உறவினர்களைவிட அதிகம் நம்புகிறார் சசிகலா. கடிதம் எழுதிய தொண்டர்களுக்கு இந்த கார்த்தியின் செல்போனில் இருந்துதான் அழைப்பு போகிறது. 'சின்னம்மா உங்கள் கடிதத்தைப் படித்தார். அவர் உங்களிடம் பேசப் போகிறார்' என்று கார்த்தி முதலில் சொல்லிவிட்டு போனை சசிகலா கையில் கொடுப்பார். அதன்பிறகு சசிகலா பேசுகிறார். இந்த உரையாடல் அப்படியே பதிவு செய்யப்படுகிறது. அதன்பின் குறிப்பிட்ட சில செய்தியாளர்களுக்கு இது ஆடியோ பதிவாக அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த ஆடியோவில் சசிகலா யாரிடம் பேசினார் என்ற குறிப்பும் கூடவே சேர்த்து அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஆடியோ ரிலீஸ் ஐடியாவை சசிகலாவுக்குக் கொடுத்தது 'விவேக'மான உறவுக்காரர் ஒருவர்தானாம்! `தனக்குக் கடிதம் எழுதும் சாதாரண தொண்டர்களிடம்கூட போனில் பேசும் எளிமையான தலைவி என்ற இமேஜ் கிடைக்கும்' என்று அவர் சொன்னாராம். ஆனால், ``நாமே வெளியிடுவதைவிட இவை ஒவ்வொன்றையும் சம்பந்தப்பட்ட தொண்டர்கள், `சின்னம்மா என்னிடம் பேசினார்' என்று பரவசத்துடன் வெளியிடும்போது அதற்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்கும்'' என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆடியோவில் எடிட்டிங் செய்து எதையும் சேர்க்கவோ, குறைக்கவோ வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த ஆலோசனையை நிராகரித்துவிட்டார்கள்.

சசிகலாவின் செகண்ட் இன்னிங்ஸ்!

``இந்தக் கட்சியைக் காப்பாற்றுவார்கள் என நான் நம்பிய பலரும் என் முதுகில் குத்திவிட்டனர். இனியும் என் முதுகில் குத்த இடமில்லை. அந்த அளவுக்கு எனக்குச் செய்தார்கள். இப்போது தொண்டர்களுக்கும் அதையே செய்கிறார்கள். தொண்டர்களின் நலன்தான் எனக்கு முக்கியம். கட்சியைச் சிறப்பான நிலைக்குக் கொண்டுவர ஜெயலலிதா மிகவும் பாடுபட்டார். அவருடன் சேர்ந்து நானும் பாடுபட்டேன். இப்போது கட்சி இப்படி ஆவதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. கட்சியைக் காப்பாற்ற நான் உறுதியாக வருவேன். அதற்கான நேரம் வந்துவிட்டது'' என்பதுதான் சசிகலா பேசிய ஆடியோக்களின் அடிநாதம்.

ஃபங்ஷன் வைக்காமல் நடத்தப்படும் இந்த ஆடியோ ரிலீஸ்கள் ஒருபக்கம் கட்சியில் கலகத்தைக் கிளப்பினாலும், இன்னொரு பக்கம் பலருக்கு பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. பரபரப்பு அரசியல் செய்துவரும் மூன்றாம் அணித் தலைவர் ஒருவர், ``நான் எவ்வளவோ நம்பிக்கையாகப் பல விஷயங்களை அவரிடம் போனில் பேசினேன். அதையும் பதிவுசெய்து வைத்திருப்பார்களோ என்று இப்போது பயமாக இருக்கிறது. நான் பேசிய அந்த உரையாடல் வெளியில் வந்தால், என் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிடும்'' என்று தூக்கம் தொலைத்து இப்போது புலம்புகிறார். ஆனால், ``நீங்கள் பேசியது வேறு ஒரு பர்சனல் நம்பரில். அதெல்லாம் ரெக்கார்டு ஆவதில்லை'' என்று அவருக்கு உறுதி கிடைத்ததாம்.

இதேநிலையில்தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர் இருக்கிறார்கள். கட்சி ஆபீஸுக்குப் போய் சசிகலாவுக்கு எதிராக ஆவேசமாகப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் சசிகலா உறவுகளிடம் நலம் விசாரிப்பை நிறுத்தாமல் செய்கிறவர்கள் அவர்கள். இப்போதெல்லாம் புதிய எண்களிலிருந்து அழைப்பு வந்தால், அவர்கள் போனையே எடுப்பதில்லையாம். `சின்னம்மா பேசறேன்...' என்ற குரலைக் கேட்டுவிடுவோமோ என்று நடுக்கம்.

அ.தி.மு.க-வின் அதிகார வட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இதே குழப்பத்தில் இருக்கிறார். இன்னமும் தேனி மாவட்ட அ.தி.மு.க மட்டுமே சசிகலாவைக் கண்டித்துத் தீர்மானம் போடவில்லை. சசிகலாவைக் காரணம் காட்டியே கட்சியில் தனக்கான இடத்தை இறுக்கமாகக் கைப்பற்ற நினைக்கும் பன்னீர், இப்போது பேச்சுவார்த்தைகளை ரொம்பவே குறைத்துவிட்டாராம்.

``இப்போது பார்ப்பதெல்லாம் ட்ரெய்லர்தான். மெயின் பிக்சர் வரும்போது எடப்பாடி பழனிசாமி ஆடிப்போவார்'' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். ``கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு திடீரென ஒருநாள் ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போவார் சசிகலா. அங்கு வணங்கிவிட்டு அதன்பிறகு மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களைச் சந்திக்கப்போகிறார். பெங்களூரிலிருந்து சென்னை திரும்பியபோது சசிகலாவுக்கு எப்படி வரவேற்பு கிடைத்ததோ, அதேபோன்ற வரவேற்பு அந்தப் பயணத்தில் சசிகலாவுக்குக் கிடைக்கும். அதன்பின் அ.தி.மு.க ஒட்டுமொத்தமாக சசிகலா வசம் வந்துவிடும்'' என்கிறார்கள் அவர்கள்.

இன்னொரு சுவாரஸ்ய அரசியல் ஆட்டத்தைத் தமிழகம் பார்க்குமா?