அலசல்
Published:Updated:

கிச்சுகிச்சு மூட்டும் சசிகலா! - ஆடியோ பூச்சாண்டி

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

கொரோனா ஊரடங்கு போட்டுட்டாங்க. போஸ்ட் ஆபீஸ்லாம் லீவுங்கறதால, உங்களுக்குத் தபால்ல பதில் போட முடியலை. அதனாலதான் போன் பண்ணேன்

கோயில் திருவிழாக்களில் கவனித்திருப்பீர்கள். ‘உங்கள் குழந்தைகளை, பொருள்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள்...’ என்று போலீஸாரின் எச்சரிக்கை ஒருபுறம், ‘அன்னதானத்துக்குச் செல்வோர் தயவுசெய்து வரிசையில் செல்லுங்கள்’ என்று கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பு மறுபுறம், கடைக்காரர்களின் வியாபார அழைப்புகள், கூச்சல்கள் என நான்கு திசைகளிலும் நாலாவிதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கும். அவ்வளவு ரகளைகளுக்கு நடுவே, ‘பாம்பும் கீரியும் சண்டை போடப்போவதாக’ பூச்சாண்டி காட்டும் வித்தைக்காரர்கள் சிலர், சத்தமாகக் கூவி ஆள்திரட்ட முயல்வார்கள். ‘இவர் வேற... நேரங்காலம் தெரியாம பூச்சாண்டி காட்டிக்கிட்டு...’ எனப் பொதுமக்களிடமிருந்து சலிப்புக் குரல் எழும்பும். “சமீபகாலமாக வெளியாகிவரும் சசிகலாவின் ஆடியோக்கள் அதே கேலியையும் சலிப்பையும்தான் ஏற்படுத்துகின்றன” என்கிறது அரசியல் வட்டாரம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்குத் தளர்வுகள், பட்ஜெட் கூட்டத்தொடர் என நாடே பரபரப்பாகியிருக்கும் சூழலில், ‘என்னப்பா நல்லா இருக்கீங்களா? கட்சியை மீட்டுடுவோம் கவலைப்படாதீங்க...’ எனத் தேய்ந்துபோன ரெக்கார்டாக, தன்னுடைய ஆடியோக்களில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார் சசிகலா. ஜூன் 10-ம் தேதி வரை, சசிகலா பேசியதாக 23 ஆடியோக்கள் வெளியாகிவிட்டன. அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டதாக அறிவித்த சசிகலா மனதில் என்னதான் ஓடுகிறது... கட்சியை மீட்டெடுப்பதாகச் சொல்லிவருபவர் என்ன வியூகம் வைத்திருக்கிறார்? மன்னார்குடி வகையறாக்கள், அ.தி.மு.க., அ.ம.மு.க தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் எனப் பலரிடமும் இது குறித்துப் பேசினோம்.

முதலில் ஆடியோக்களின் கதைகளைப் பார்த்துவிடுவோம்...

கிச்சுகிச்சு மூட்டும் சசிகலா! - ஆடியோ பூச்சாண்டி

“எந்தச் சின்னம்மா..?” - கிச்சுகிச்சு மூட்டிய ஆடியோ!

சசிகலா பேசியதாக வெளியாகிவரும் ஆடியோக்களைக் கேட்டால் சிரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு ஆடியோவில் கோபால் என்கிற அ.ம.மு.க தொண்டரிடம், “கொரோனா ஊரடங்கு போட்டுட்டாங்க. போஸ்ட் ஆபீஸ்லாம் லீவுங்கறதால, உங்களுக்குத் தபால்ல பதில் போட முடியலை. அதனாலதான் போன் பண்ணேன்” என்கிறார் சசிகலா. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக முடிசூட நினைப்பவர், ஊரடங்கில் தபால் நிலையங்கள் மூடப்படவில்லை என்கிற விவரம்கூடத் தெரியாமல் பேசுவது பெரிய காமெடி. மற்றோர் ஆடியோ உரையாடலில், சசிகலா பேசுவதாகப் பதறி எழுகிறார் ஒரு தொண்டர். தன் மனைவியிடம், ‘‘சின்னம்மா பேசுறாங்க’’ என்று அவர் சொல்ல, அந்தப் பெண்மணி, ‘‘எந்தச் சின்னம்மா?’’ என நக்கலாகக் கேட்கிறார். உலகிலேயே அம்மா என்றால் ஜெயலலிதா, சின்னம்மா என்றால் சசிகலா என்பதை எழுதப்படாத விதியாக ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க-வினர் தன்னை மறந்துபோய்விட்டார்கள் என்பது சசிகலாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.

இன்னொரு ஆடியோ சுவாரஸ்யமானது. “நீங்க சிறையிலிருந்து வந்தபோது, உங்களைப் பார்ப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தேன்மா. உங்க முன்னாடி தீக்குளிச்சு, உங்க தியாகத்தை வெளியுலகத்துக்குக் காட்ட முடிவு பண்ணேன். ஆனா ஒரு போலீஸ்காரர் வந்து விரட்டிட்டாரு... தீக்குளிக்க முடியலை” என்கிறார் ஒரு தொண்டர். அதற்கு சசி, “ஓ... நீங்கதானா அது. என்கிட்ட சொன்னாங்க” என்கிறார். உடனே அந்தத் தொண்டர் புளகாங்கிதம் அடைந்து, “அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கு பாரேன்” என்கிறார். ஆடியோக்கள் ஒவ்வொன்றிலும் அவல நகைச்சுவை இழையோடுகிறது.

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ‘‘ஜனவரி 30, 1988-ல் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாததால், அப்போதைய முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் ஆட்சிப் பொறுப்பை இழந்தார். ஆளுநர் ஆட்சி இருந்த சமயத்தில், அ.தி.மு.க தலைவர் அரங்கநாயகம் தொடுத்திருந்த வழக்கில், ஜெயலலிதா அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தது. தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்றவுடன், ஜெயலலிதாவின் தளபதிகளாக இருந்த அப்போதைய தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலாளர் எம்.ஜி.ஆர் நகர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில், சுமார் 500 பேர் அதிரடியாகத் தலைமைக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். அது போன்ற ஆட்கள் இப்போது சசிகலாவிடம் இல்லை. போலீஸார் விரட்டியதால் பின்னங்கால் பிடறியில்பட ஓடிய அட்டைக்கத்தி வீரர்களையும் தொண்டர்களையும் வைத்துக்கொண்டு, அ.தி.மு.க-வை மீட்டுவிடலாம் எனக் கிச்சுகிச்சு மூட்டுகிறார் சசிகலா’’ என்றார்.

புதுவீடு... சுற்றுப்பயணம்... கடிவாளம் - இது மன்னார்குடி கணக்கு!

சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி வகையறாக்கள் சிலரிடம் பேசினோம். “சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முன்னதாகவே, மறைந்த ம.நடராசனின் சகோதரர்கள் எம்.ராமச்சந்திரனும், எம்.பழனிசாமியும் சசிகலாவுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்கிவந்தார்கள். இப்போது, அவர்கள் இருவரும்தான் சசியின் இரு கரங்களாக இருக்கிறார்கள். சசிகலாவின் போன் உரையாடல்களை ஆடியோக்களாக வெளியிடும் பொறுப்பை பழனிசாமி ஏற்றிருக்கிறார். போயஸ் கார்டனில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் வீட்டுக்கு, ஜூலை மாதம் சசிகலா குடிபெயர்கிறார். அதுவரை, இந்த ஆடியோ உரையாடல் வெளிவருவது தொடரும். ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் வேறொரு பரிமாணம் அடையப்போகிறது. முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் எம்.எல்.ஏ-க்கள் எனப் பலரையும் தனது புதிய போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசி சந்திக்கவிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்வதற்கு, எம்.ராமச்சந்திரன் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். இந்தப் பயணம் தொடர்பாக, சசிகலாவுக்கு விசுவாசமான அ.தி.மு.க நிர்வாகிகளிடம் ராமச்சந்திரன் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து பேசிவருவது, கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திவாகரன், அவர் மகன் ஜெய் ஆனந்த் இருவரையும் வீட்டுப் பக்கம் வரக் கூடாது என்று கண்டிப்புடன் சசிகலா கூறிவிட்டார். அதேபோல, இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனைத் தொழிலை மட்டும் கவனிக்கும்படி கூறியிருக்கிறார். சசிகலா அ.தி.மு.க-வுக்குள் வந்தால், அவர் குடும்பமும் பின்னாலேயே வந்துவிடும் என்பதுதான் பல நிர்வாகிகளின் பயமாக இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான், தன் குடும்பத்துக்குக் கடிவாளம் போட்டிருக்கிறார் சசி. அ.தி.மு.க-வை மீட்டெடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக சசி அமரப்போவது நிச்சயம்” என்று சிரிக்காமல் சீரியஸ் முகத்துடன் சொல்லி முடித்தனர்.

பன்னீர், எடப்பாடியின் மனநிலை என்ன?

பன்னீரும் எடப்பாடியும் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய அ.தி.மு.க தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “சசிகலாவை ஆயுதமாகவைத்து எடப்பாடியிடம் தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள பன்னீர் முயல்கிறார். ஆனால், அதை எடப்பாடி சட்டை செய்யவே இல்லை. கடந்த வாரம் நடந்த சென்னை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் “அந்தம்மா ஆடியோ வெளியிடுறதால ஒண்ணும் நடந்துடாது. எல்லாம் நம்ம கன்ட்ரோல்லதான் இருக்கு. கவனத்தைச் சிதறவிடாம உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்க” என மாவட்டச் செயலாளர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி.

ஜெயலலிதா, சசிகலாவுக்குப் பிறகு இந்தக் கட்சியில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறுநில மன்னர்களாக வலம்வர ஆரம்பித்துவிட்டனர். நிலோபர் கபிலை நீக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்துச் சாதித்துக் கொள்கிறார் வீரமணி. டெல்டாவில் வைத்திலிங்கம், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் வைப்பதுதான் கட்சிக்கு சட்டம் என்றாகிவிட்டது. கொங்கு மண்டலத்தில் வேலுமணி, தங்கமணியை மீறி எதுவும் செய்துவிட முடியாது. ஒருவகையில் இது கட்சிக்கு ஆபத்து என்றாலும், சசிகலாவின் என்ட்ரிக்கு இதுவே தடைக்கல்லாகவும் மாறியிருக்கிறது.

சசிகலா அ.தி.மு.க-வுக்குள் வந்தால், இப்போது தாங்கள் அனுபவிக்கும் தனித்த அதிகாரங்களைக் கட்சியின் சீனியர்கள் இழக்க நேரிடும். கட்சி நிர்வாகிகள் யாரும் பழையபடி சசிகலாவின் குடும்பத்தினரிடம் கைகட்டி நிற்க விரும்பவில்லை. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், தங்கள் தரப்பு ஆட்களுக்கு மேயர், துணை மேயர் சீட்டுகளைப் பெற்றுத் தருவதுதான் நிர்வாகிகளின் போட்டியாக இருக்கிறதே தவிர, சசிகலாவின் ஆடியோ உரையாடல்களை யாரும் சீரியஸாகப் பார்க்கவில்லை. பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக இருந்தால்தான் இரட்டை இலைச் சின்னமும், கட்சியின் பெயரும் நிலைக்கும். இவர்களில் யார் பிரிந்து சென்றாலும், இரண்டு பேருக்குமே நஷ்டம்தான். அது அவர்களுக்கும் தெரியும். இப்போது நடப்பதெல்லாம், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி ஆகிவிடக் கூடாது என்கிற பதற்றத்தில் பன்னீர் செய்யும் காய்நகர்த்தல்கள்தான். அடுத்த சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரை இந்த ஆடுபுலி ஆட்டம் நீடிக்கத்தான் செய்யும். ஆனாலும், இதனால் கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றனர்.

கிச்சுகிச்சு மூட்டும் சசிகலா! - ஆடியோ பூச்சாண்டி

தினகரன் அவ்வளவுதான்!

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எப்போதுமே உறவுநிலை சரியாக இருந்ததில்லை. இப்போது மிக மோசமாகிவிட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். டெல்டா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அ.ம.மு.க வேட்பாளர் ஒருவர் நம்மிடம் பேசினார். “தன்னுடைய அரசியல் மூவ்களில் தினகரன் எந்த வகையிலும் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார் சசிகலா. கடந்த ஒரு மாதமாக தினகரனும் அ.ம.மு.க மாவட்டச் செயலாளர்களிடம்கூட பேசுவதில்லை. ஐந்தரை சதவிகிதமாக இருந்த அ.ம.மு.க-வின் வாக்குவங்கி, 2021 சட்டமன்றத் தேர்தலில் 2.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இனி அ.தி.மு.க அல்லது தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே தினகரனால் தேர்தல் வெற்றியைப் பார்க்க முடியும். இல்லையென்றால், அரசியலில் தினகரன் அவ்வளவுதான். தவிர, அ.தி.மு.க-வை அவர் மீட்டெடுப்பார், சசிகலா அவரைத் தன் அருகில் நம்பி வைத்துக்கொள்வார் என்பதெல்லாம் நடக்காத காரியம்” என்றார்.

பயங்கரமாக வெடிக்கும் என எதிர்பார்த்த பட்டாசு, புஸ்... புஸ்ஸென்று சத்தமிட்டபடி புகைந்துகொண்டிருக்கிறது. தனக்கு வந்த வாய்ப்பையெல்லாம் நழுவவிட்டுவிட்ட சசி, இப்போது எதையாவது செய்து ‘லைம்லைட்’டில் நிற்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார். அதிரடி என்று நினைத்து, ஆடியோ உரையாடல் மூலமாக அவர் காட்டிவரும் பூச்சாண்டி... அ.தி.மு.க தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கிச்சுகிச்சுதான் மூட்டியிருக்கிறது!

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கிச்சுகிச்சு மூட்டும் சசிகலா! - ஆடியோ பூச்சாண்டி

வீர வெற்றி பாண்டியன், அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர்

“மூன்றாவது முறையாக வெற்றிபெறும் வாய்ப்பிருந்தும், அ.தி.மு.க தலைவர்கள் தங்களுடைய ஆணவத்தால் வெற்றியைத் தவறவிட்டுவிட்டனர். இதனால் ஆதங்கத்திலிருக்கும் தொண்டர்கள், கட்சிக்கு சசிகலாதான் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சமூகம் சார்ந்து சசிகலா செயல்படுகிறார் என்று சொல்வது தவறு. உதாரணமாக, சசிகலா பேசிய மதுரை மாவட்டத்திலுள்ள கட்சி நிர்வாகிகள் எவருமே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சமூகங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவராக சசிகலா இருக்கிறார். இந்தத் தலைமைப் பண்பு ஓ.பி.எஸ்-ஸுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இல்லை. எங்களுடைய நோக்கமே அ.தி.மு.க-வை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான். இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா எனப் பல தலைவர்கள் அரசியலிலிருந்து விலகுவதாக முதலில் அறிவித்து, பிறகு மீண்டும் அரசியலில் ஈடுபட்ட உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலா மீண்டும் சூறாவளி அரசியலில் ஈடுபட்டு அ.தி.மு.க-வை துரோகிகளின் கையிலிருந்து மீட்டெடுப்பார்.”

கிச்சுகிச்சு மூட்டும் சசிகலா! - ஆடியோ பூச்சாண்டி

சிவசங்கரி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்

``நாங்கள் சசிகலாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எந்தக் காலத்திலும் அவர் அ.தி.மு.க-வில் சேர முடியாது. அ.ம.மு.க-வில் வேண்டுமானால் சசிகலா தலைவராக இருக்கலாம். அவரைவிட்டு நாங்கள் வெகுதூரம் கடந்து வந்துவிட்டோம். கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்ற மூத்த தலைவர்கள், ‘சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை’ என்றனர். அதுதான் கட்சியினுடைய கருத்தும்.’’

கிச்சுகிச்சு மூட்டும் சசிகலா! - ஆடியோ பூச்சாண்டி

ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

“வியூகப்பிழை செய்துவிட்டார் சசிகலா. ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்றுவிடாதபடி தன்னை எடப்பாடி தடுத்தபோதே, சசிகலா அரசியல் களம் புகுந்திருக்க வேண்டும். `துரோகிகளின் கையிலிருந்து இரட்டை இலையை மீட்டெடுப்போம்’ எனத் தேர்தல் பிரசாரம் செய்திருந்தால், அவர் ஆதரவுபெற்ற அ.ம.மு.க-வுக்கு 12 சதவிகித வாக்குகள் வரை கிடைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். வந்த வாய்ப்பையெல்லாம் உதறித் தள்ளியதால், இன்று தன்னை ஓர் அரசியல் சக்தியாக நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் சசிகலா. அதனால்தான், அவர் போனில் பேசும் ஆடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகின்றன. இதனால் ஒரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது. நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பொதுச்செயலாளர் வழக்கைக் காரணமாகக் காட்டி, அ.தி.மு.க-வுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதுபோல சசிகலா காட்டிக்கொள்ளலாம். இதைத் தவிர, வேறு எந்த லாபமும் ஒரு சிவில் வழக்கு மூலமாக அவருக்கு இருக்கப்போவதில்லை. எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், சசிகலா பேரவை ஒன்றைத் தொடங்கி, அதன் மூலமாக 10 சதவிகித வாக்குகளை சசிகலா பெற்றால் மட்டுமே சசிகலா மதிக்கப்படுவார். இல்லையென்றால் ஒரு ஜோக்கராக, காகிதப் புலியாக மட்டுமேதான் சசிகலா இருக்க முடியும்.”