Published:Updated:

புரட்சிப்பயணம்: ``சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்து விட்டீர்களே..!" - சசிகலா ஆவேசம்

சசிகலா ( தே.சிலம்பரசன் )

"தி.மு.க-வினர் நம் இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து, தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணம் ஒருநாளும் ஈடேறாது." - சசிகலா

புரட்சிப்பயணம்: ``சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்து விட்டீர்களே..!" - சசிகலா ஆவேசம்

"தி.மு.க-வினர் நம் இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து, தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணம் ஒருநாளும் ஈடேறாது." - சசிகலா

Published:Updated:
சசிகலா ( தே.சிலம்பரசன் )

திருத்தணி, பூந்தமல்லியைத் தொடர்ந்து நேற்று (5.06.2022) விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் புரட்சிப்பயணம் மேற்கொண்டிருந்தார் வி.கே.சசிகலா. அவருக்கு, திண்டிவனம் - புதுச்சேரி புறவழிச்சாலை அருகே அ.தி.மு.க கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு தொண்டர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியவர், மன்னார்சாமி கோயில் பகுதியில் வாகனத்தில் இருந்தபடியே பொதுமக்களிடம் பேசினார். அப்போது, "அ.தி.மு.க, இரு பெரும் தலைவர்களால் ஆளப்பட்ட கட்சி. இன்றைய நிலையைப் பார்த்தால், ஒவ்வொரு தொண்டனும் வெட்கமும், கவலையும்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. புரட்சித்தலைவி காலம் சென்றது முதல், நம் இயக்கத்தில் நடைபெறும் செயல்களைப் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. பசுத் தொழுவத்தை காவல் செய்ய, பசுத்தோல் போர்த்திய புலிகளிடம் ஒப்படைத்ததுபோல்.... தன்னிகரில்லா பேரியக்கமாக விளங்கிய நம் கழகம், இன்று உரிமைகளை இழந்து அதிகாரத்தின் கைகளில் சிக்கி அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது.

திண்டிவனத்தில் சசிகலா
திண்டிவனத்தில் சசிகலா

உள்ளாட்சியில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில், தனிப்பட்ட ஒருசிலரின் சுயநலத்தால் நமது இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்தி கழகத் தொண்டர்கள் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது மிகவும் வேதனையை அளிக்கிறது. தாங்கள் தொடர்ந்து உயர் பதவியில் நீடிப்பதற்காக, சாதாரணக் கழகத் தொண்டர்களுக்கு இப்படி முட்டுக்கட்டை போடுவது எந்தவிதத்தில் நியாயம்... கழகத் தொண்டர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுய விருப்பு வெறுப்புகளுக்காக இரட்டை இலைச் சின்னத்தை இதுபோல முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது... சொந்த வீட்டுக்கே சூனியம் வைத்துவிட்டீர்களே..! புரட்சித்தலைவியும், புரட்சித் தலைவரும் உங்களை மன்னிப்பார்களா... உங்களை உருவாக்கிய இயக்கத்துக்கு நீங்கள் காட்டும் நன்றியா இது?
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண்டுக்கு ஒரு முறை, அவரவர் விருப்பப்படி கட்சியின் சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு எந்தத் தொண்டனும் மனப்பூர்வமாக விரும்பவில்லை. இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்... அதுவே நம்முடைய இரு பெரும் தலைவர்களுக்கு நாம் காட்டும் நன்றியாக அமையும்.

தி.மு.க-வினர் நம் இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து, தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தி.மு.க-வினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒருசிலர் வேண்டுமானால் மயங்குவார்கள். ஆனால், எதற்கும் மயங்காத தொண்டர்களைக்கொண்டது அ.தி.மு.க.

சசிகலா
சசிகலா
தி.மு.க-வினருக்கு நாமே இடம் கொடுத்துவிடக் கூடாது என்றுதான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன்.

எனவே, அனைவரும் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக இருந்து, இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காக இயங்கும் என்ற அம்மாவின் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும். தி.மு.க தலைமையிலான இன்றைய ஆட்சியில்... கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை போன்ற செயல்கள் அதிகரித்திருக்கும் செய்திகள் நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக வந்தவண்ணம் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தி.மு.க-வினர் மற்றும் அவரது குடும்பத்தினர்களைத் தவிர யாரும் இங்கு நிம்மதியாக இல்லை என்று நான் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் என்னிடம் சொல்லி வேதனைப்படுகிறார்கள்.

இந்தத் தி.மு.க அரசு, திண்டிவனம் நகராட்சியை விரிவாக்கம் செய்து தர வேண்டும். இல்லையேல், இன்னும் கொஞ்ச நாள்களில் நமது ஆட்சி அமையவிருக்கிறது. அப்போது இப்பகுதி மக்களுடைய அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும்" என்றார்.

வழிகளில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயில்கள்.
வழிகளில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயில்கள்.

அதைத் தொடர்ந்து வேப்பேரி எனுமிடத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "கட்சியில் தொண்டர்களின் முடிவுதான் இறுதியானது. அதையே நானும் விரும்புகிறேன். இப்போது நடப்பது பொதுக்குழு இல்லை. டீசல் விலை ஏறியிருக்கும் நிலையில் நான் அரசியல் பயணம் மேற்கொள்வது தேவையா என்று ஜெயக்குமார் பேசியிருப்பதற்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எங்களின் கழகத் தொண்டர்கள் அதற்கு பதில் சொல்வார்கள். அ.தி.மு.க-வின் பிரச்னையைத் தொடர்ந்து பொதுமக்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பதிலை, எப்போது தர வேண்டுமோ அப்போது தருவார்கள். எனக்கு அ.ம.மு.க-வினர் வரவேற்பு தரவில்லை என நீங்கள் நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்தமட்டில் எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் என்னுடைய பிள்ளைகள்தான்.

அ.தி.மு.க அலுவலகத்துக்கு போகவேண்டிய நேரம் வரும்போது கட்டாயம் செல்வேன். நான் எப்போதுமே எதையும் நியாயப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஆகவே, என்னுடைய தொண்டர்களுடன் சேர்ந்து அங்கு செல்வேன். கொடநாடு மற்றும் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த நிகழ்வுகள் எல்லாமே எனக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிய வேண்டும். சுயலாபத்துக்காக யார் யார் என்னென்ன பேசினார்கள் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகக் கேட்டு வைத்திருக்கிறார்கள். அதனால் இதற்கு தீர்ப்பு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும். அதுமட்டுமின்றி இந்த வழக்கு சம்பந்தமாக இப்போதுள்ள திமுக அரசின் போலீஸ் தரப்பில், என்னிடம் இரண்டு நாள்கள் விசாரித்தார்கள். நான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்லியிருக்கிறேன். அரசுதான் இதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சசிகலா
சசிகலா

அ.தி.மு.க தனிப்பட்ட ஒரு வீடோ, கம்பெனியோ கிடையாது. இது அரசாங்கத்தை நடத்தக்கூடிய ஒரு கட்சியாக இருந்தது. என்னைப் பொறுத்தவரையில், நான் எப்போதுமே மக்கள் வழியில்தான் செல்வேன். இப்போதும் அதையேதான் விரும்புகிறேன். அம்மா, ஏழை எளிய மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். மேலும் சிலவற்றைச் செய்ய வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நம்மைவிட்டு மறைந்துவிட்டார்கள். அதை நான் வந்து மக்களுக்குச் செய்ய வேண்டுமென நினைக்கிறேன். இப்போது இருக்கும் முதலமைச்சர், தேர்தல் நேரத்தில் இரண்டு விஷயங்களைக் குறிப்பாகப் பேசினார். அதில் ஒன்றுதான் கொடநாடு விவகாரம். ஏன் இன்னும் அதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.