Published:Updated:

` தி.மு.க-வால் எண்ணிக்கையைத் திரட்ட முடியாது!' - எடப்பாடி ஆஃபரை நிராகரித்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ

உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற தி.மு.க-வினர் ஒன்றைக் கணிக்கத் தவறிவிட்டனர். ஒரு நிகழ்வை நடத்தினால் அதற்கான எதிர் நிகழ்வை அவர்கள் யோசிப்பதில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் வாங்கிக்கொண்டது தி.மு.க. ` புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்' என்ற கருத்தையும் உதிர்த்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ` அவர்கள் எப்போதும் பாயப் போவதில்லை. முதல் சுற்றில் தோற்றுப் போன ஸ்டாலின், இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாடாளுமன்றம் ப்ளஸ் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது அ.தி.மு.க. இடைத்தேர்தலுக்கு முன்னதாக அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்வது தொடர்பான வேலையில் இறங்கியது அ.தி.மு.க. ` பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அவர்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது சரியானதல்ல.

ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதுவதால்தான் இப்படியொரு சதித்திட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்' எனத் தி.மு.க கொதித்தது. இதை முறியடிக்கும் வகையிலேயே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் வேலையில் இறங்கினார் ஸ்டாலின். இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை உத்தரவை வாங்கினார். தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றம் கூடியதும், `சபாநாயகர் மீதான தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை' எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.

தி.மு.க-வின் இந்த முடிவு அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பதில் கொடுத்த தி.மு.க நாளேடான முரசொலி, ` சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தி, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச் செய்வது கழகத்துக்குக் கடினமான காரியமில்லை. அப்படிச் செய்திருந்தால், தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் குடிநீர்ப் பஞ்சம், ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு பிரச்னைகள் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் முதல் இடத்தைப் பிடித்திருக்கும். பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் பயன்பட்டிருக்கும். அப்படிப்பட்ட எதிர்மறை நிலையைத் தடுத்து, தவிர்ப்பதற்காகவே இப்படியொரு சாதுரியமான முடிவை எடுத்தோம் என்பதை உணர வேண்டும். புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தது.

சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்

தற்போது நடந்து வரும் சட்டசபைக் கூட்டத் தொடரிலும், ஆட்சி அதிகாரத்தில் ஸ்டாலின் அமர்வது குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ` வரும்... ஆனா வராது' என வடிவேல் படக் காமெடியை நினைவுபடுத்திக் கலாய்த்தார். ஆட்சிக்கான பெரும்பான்மையை அதிகப்படுத்திக்கொள்ளும் வேலைகளைத் துரிதப்படுத்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு. அதிருப்தியில் இருந்த ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் முதல்வரைச் சந்தித்துப் பேசிவிட்டனர். கள்ளக்குறிச்சி பிரபு, தன்னுடைய நிலைப்பாட்டை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை.

எடப்பாடியின் முயற்சிகள் தொடர்பாகப் பேசும் அ.தி.மு.க நிர்வாகிகள்,``சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை வென்றாலும் கூடுதலாக சிலர் ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதை பலமாகப் பார்க்கிறது தலைமை. அந்த வரிசையில் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த 2 எம்.எல்.ஏ-க்களும் முதல்வரை சந்தித்துப் பேசினர். `உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க தொடுத்த வழக்கில் தகுதி நீக்கத்துக்கான தடை நீங்கினாலும் தகுதிநீக்கம் செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது' என்ற தகவல் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளை உணர்ந்ததால்தான் இருவரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினர். கள்ளக்குறிச்சி பிரபுவுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் நிலவும் உட்கட்சி பூசலால்தான் அவர் அதிருப்தியில் இருக்கிறார். விரைவில் அவரும் இணைவார் என நம்புகிறோம்" என விவரித்தவர்கள்,

`` முதல்வரை இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சந்தித்துப் பேசிவிட்டதால், மூன்றாவதாக உள்ள நபரைத் தகுதிநீக்கம் செய்ய முடியாது. கட்சியில் 2 பேர் வந்து இணைந்ததை லாபமாகத்தான் பார்க்கின்றனர். இதைப் பற்றிப் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ` உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற தி.மு.க-வினர் ஒன்றைக் கணிக்கத் தவறிவிட்டனர். ஒரு நிகழ்வை நடத்தினால் அதற்கான எதிர் நிகழ்வை அவர்கள் யோசிப்பதில்லை. சட்டசபையில் ஆட்சிக்குத் தேவையான எண்ணிக்கையை தி.மு.க-வால் திரட்ட முடியாது. அதைத் திரட்டக் கூடிய சக்தி படைத்தவர்களும் அங்கே இல்லை' எனப் பேசியுள்ளனர். சொல்லப் போனால், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வராமல் முதல் ரவுண்டிலேயே ஸ்டாலின் அவுட்டாகிவிட்டார். அடுத்த ரவுண்டிலும் அவரால் நிற்க முடியாது என்பதில் தலைமையில் உள்ளவர்கள் உறுதியாக உள்ளனர்" என்கின்றனர் இயல்பாக.

கள்ளக்குறிச்சி பிரபு, தினகரன்
கள்ளக்குறிச்சி பிரபு, தினகரன்

` அ.தி.மு.க-வில் இருந்து அழைப்பு வந்ததா?' எனக் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். `` நான் அ.தி.மு.க-வில் இருக்கிறேன். அவர்கள் இருவரும் முதலமைச்சரைச் சந்தித்துவிட்டார்கள் என்பதற்காக, அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் எனக் கூற முடியுமா. நான் இந்த அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறேன். அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை. முதல்வரைச் சந்திக்க வருமாறு எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாகவும் சின்னம்மா (சசிகலா) ஆதரவாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். இதில் எந்தவித மாற்றமும் இல்லை" என்றார் உறுதியாக.