Election bannerElection banner
Published:Updated:

`சைலன்ட்’ தினகரன் ; அழைக்குமா அ.தி.மு.க?! - சசிகலா நிலைப்பாடு என்ன?

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

`ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதுதான் சசிகலாவின் எண்ணமாக இருக்கிறது. எவ்வளவோ இன்னல்கள் வந்தபோதும் ஜெயலலிதாவையோ, அ.தி.மு.க-வையோ சசிகலா விட்டுக்கொடுத்ததுமில்லை, விலகியதுமில்லை.

அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவு வெளியான பிறகும் வாய் திறக்காமல் அமைதி காத்துவருகிறார். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதே அவருடைய எண்ணமாக இருக்கும் நிலையில் அ.தி.மு.க-வில் தனக்கான வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு இரண்டாம் கட்ட ஆன்மிகப் பயணத்தைத் தொடரவிருப்பதாக அவரது உறவுகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் விடுதலையான சசிகலா, அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும், அ.தி.மு.க-வில் தலைமை பொறுப்பிற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது பிறகு அவர் கட்சியை வழி நடத்துவார் எனவும் அரசியல் ஆர்வலர்களால் பேசப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக சசிகலா அறிவித்தார். அத்துடன் "ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும். இதுவே என் விருப்பம். இதற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்

இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தநிலையில், தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.ம.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் என தினகரன் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சி அமையும் என்ற முழு நம்பிக்கையோடு தேர்தலை எதிர்கொண்டார்.

ஆனால் கடந்த 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களை மட்டுமே பிடித்தது. பெரிய அளவில் வாக்குகளைப் பிரிப்பதுடன் சில தொகுதிகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் தன் அரசியல் அடிதளத்தை வலிமையாக அமைத்து கொள்ளலாம் என நினைத்த தினகரன் எண்ணத்திலும் மண் விழுந்தது. தற்போது அ.தி.மு.க-வின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்கிற பனிப்போர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நிலவிவருவதாகக் கூறப்படுகிறது.

அ.ம.மு.க-வின் வாக்குவங்கியும் கடந்த எம்.பி தேர்தலைவிட வெகுவாகக் குறைந்துவிட்டது. இனி நம் எதிர்காலம் என்னவென்று புரியாமல் அ.ம.மு.க-வை நம்பி அரசியல் செய்தவர்களைப் பெரும் கவலை சூழ்ந்துள்ளது. தினகரனை நம்பி பிரயோஜனம் இல்லை, சசிகலா நம்மைக் கரை சேர்ப்பார் என்ற கடைசி நம்பிக்கையோடு பலரும் காத்திருக்கின்றனர். அ.தி.மு.க-வில் நடக்கும் மோதல்களை விரும்பாதவர்கள், சசிகலா கட்சிக்குள் வருவதை விரும்புகின்றனர். அதேபோல் தினகரன் அணிக்கு வந்து வளர்ச்சி அடையாதவர்களும், சசிகலாவின் வருகையை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஒரு பக்கம் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும் என விரும்பிய சசிகலாவின் எண்ணமும் நிறைவேறவில்லை. சசிகலா, தினகரனைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும், ஒதுங்கியிருக்குமாறும் வலியுறுத்தினார். அவரும் சசிகலா பேச்சைக் கேட்காமல் தற்போது சூடுபோட்டு கொண்டிருக்கிறார்.

சசிகலா தினகரன்
சசிகலா தினகரன்

இந்தநிலையில், சசிகலாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து சசிகலா தரப்பில் சிலரிடம் பேசினோம். "விடுதலையான பிறகு அ.தி.மு.க-வில் தனக்கான வாசல் திறக்கும் என நம்பினார் சசிகலா. ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த பின்னர் தமிழகம் முழுக்க உள்ள முக்கியக் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தினகரனிடமும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்து என்ன நடக்கிறது என கவனிப்போம் என்றார். ஆனால் இதை தினகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக நாம் தனித்துப் போட்டியிட்டு 40-லிருந்து 50 சீட் வரை பிடிக்கலாம் எனக் கூறினார். அதன் பிறகு உன் இஷ்டம் எனக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் சசிகலா.

ஆனாலும் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அவர் சென்றபோது அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று ஆசியும் வாங்கினர். அவர்களுக்கு ஆசி வழங்கவும் சசிகலா தவறவில்லை . இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலையிலேயே சாமியை கும்பிட்டுவிட்டு டி.வி முன் அமர்ந்து தேர்தல் முடிவுகளை கவனிக்க ஆரம்பித்தார். சில மணி நேரங்களிலேயே தினகரன்கூட ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தார். அதேநேரத்தில் முழுமையான முடிவுகள் வந்த பிறகு கிட்டத்தட்ட 25 தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பை அ.ம.மு.க பறித்திருப்பதாக அவரிடம் தகவல் சொல்லப்பட்டது. ஆனால் இதை அவர் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. திருச்சி, தஞ்சை என டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க படுதோல்வியடைந்திருப்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

`ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதுதான் சசிகலாவின் எண்ணமாக இருக்கிறது. எவ்வளவோ இன்னல்கள் வந்தபோதும் ஜெயலலிதாவையோ, அ.தி.மு.க-வையோ சசிகலா விட்டுக்கொடுத்ததுமில்லை, விலகியதுமில்லை. அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறார். சமீபத்தில் எந்தச் சூழ்நிலையிலும் ஓ.பி.எஸ்-ஸையோ அல்லது எடப்பாடி பழனிசாமியையோ அவர் விமர்சனம் செய்ததே இல்லை. அவருடைய ஆதரவு அமைச்சர்களாக இருந்தவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது ஓரளவுக்கு சசிகலாவுக்கு ஆறுதலைத் தந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகும் தினகரன் இன்னும் சசிகலாவைச் சந்திக்கவில்லை. புதுச்சேரியிலுள்ள பண்ணை வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு சசிகலாவைப் பார்ப்பது என்றே முடங்கியிருப்பதாக அ.ம.மு.க நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது. அ.தி.மு.க-விலும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற போட்டி நிலவிவருகிறது. சசிகலா இப்போதும் வாய் திறக்காமல் மெளனம் காக்கிறார்.

சசிகலா
சசிகலா

ஆனால் கட்சியில் மிச்சமிருக்கிற சசிகலா ஆதரவாளர்களை ஒரேயடியாக ஓரம்கட்டிவிடலாம் என எடப்பாடி தரப்பு நினைத்துள்ளது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் அமைதியாகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. டெல்டாவில் அ.தி.மு.க பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அ.ம.மு.க இதற்கு காரணம் இல்லை என்றாலும் சசிகலாவின் சொந்த மாவட்டம் என்பதால், அருடைய செல்வாக்கைச் சேர்ந்து பெற்றால் இப்பகுதியில் அ.தி.மு.க வலுவடையும் என்பது பல தரப்பு எண்ணமாக இருக்கிறது. இப்போதாவது அ.தி.மு.க தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு வரும் என சசிகலா நம்புகிறார். சென்னை தி.நகர் வீட்டில் தங்கியுள்ள சசிகலா மீண்டும் ஆன்மிகப் பயணத்தை தொடங்கவிருக்கிறார். ஜாதகம், ஜோதிடம் தெய்வ நம்பிக்கையில் அபார நம்பிக்கைகொண்டவர் சசிகலா. நிச்சயம் தனக்கான வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்’’ எனத் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு