Published:Updated:

`மிடாஸ் பாட்டில் மூடி...மொபைல் போட்டோ...1,500 கோடி!' -இளவரசி குடும்பம் மீது பாயும் சசிகலா உறவுகள்

நவம்பர் 9, 2017-ல் கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது. அதே காலகட்டத்தில் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் உட்பட சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலரையும் ஐ.டி அதிகாரிகள் சோதனைக்குள்ளாக்கினர்.

சசிகலா
சசிகலா

சசிகலா சொத்துகள் குறித்து வெளியான தகவல்களால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் மன்னார்குடி உறவுகள். `ஐ.டி அதிகாரிகளின் விசாரணையில் கிருஷ்ணப்பிரியாவுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மற்றவர்களையெல்லாம் மணிக்கணக்கில் காக்கவைக்கின்றனர்' என அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவிக்கின்றனர் உறவினர்கள்.

கிருஷ்ணப்பிரியா
கிருஷ்ணப்பிரியா

பெங்களூரு சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. கடந்த 2017 பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டவர், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலையாகிவிடுவார் என அவரின் உறவினர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ரூ.1,500 கோடி மதிப்பில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாகத் தகவல் வெளியானது. அப்படி வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகளுக்கு முறையான பெயர் மாற்றம் செய்யப்படாமல் பணம் மட்டுமே கைமாறியிருக்கிறது. இதுகுறித்துத் தகவல் அறிந்த ஐ.டி அதிகாரிகள், சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அந்தச் சொத்துகளின் அதிகாரவரம்புக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சசிகலா தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த வருமான வரித்துறை அதிகாரிகள், `பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளைக் கொண்டு ஒரு ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் காற்றாலைகளை சசிகலா வாங்கினார். இவை பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும்' எனத் தெரிவித்தனர். நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் நடந்த விசாரணையின்போது சசிகலா தரப்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், `இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணப்பிரியா, வழக்கறிஞர் செந்தில் உட்பட சிலரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். அதுவரை மதிப்பீடு தொடர்பாக வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்' என சசிகலா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சசிகலா குடும்பம்
சசிகலா குடும்பம்

ஆனால், ``சசிகலாவின் வருமானவரிக் கணக்கு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இதனால் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதால் சசிகலா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதில், சசிகலா தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம், `வணிக நிறுவனங்களுக்குச் செலுத்திய தொகை உள்ளிட்ட விவரங்கள் இருந்ததால், அதைப் போட்டோவாக தனது மொபையில் கிருஷ்ணப்பிரியா சேமித்து வைத்திருந்தார், வணிக நிறுவனங்களின் பெயர்களைக் காகிதத்தில் எழுதியது வழக்கறிஞர் செந்தில்' எனவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் செந்தில்குமார் கொடுத்த விளக்கத்தில், `2016 டிசம்பரில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே சசிகலா இந்தக் கம்பெனிகளை வாங்க தீர்மானித்து தன்னை அழைத்து அதற்காக அட்வான்ஸ் பணத்தைக் கொடுக்கச் சொன்னார். அப்படித்தான் பழைய நோட்டுகள் கொடுக்கப்பட்டன' என்றும் கூறியுள்ளார். மேலும், `சசிகலா உத்தரவுப்படி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட பண விவரங்களைக் காகிதத்தில் எழுதி அவற்றை சீல் வைத்த கவரில் பாதுகாப்பாக வைத்திருந்தேன்' என்றும், `2017-ல் சசிகலா பரோலில் வந்து கிருஷ்ணப்ரியாவின் இல்லத்தில் தங்கியிருந்தபோது அதை சசிகலாவிடம் ஒப்படைத்தேன்' என்றும் கூறியுள்ளார்.

விவேக் ஜெயராமன்
விவேக் ஜெயராமன்

``சசிகலா வாங்கிக் குவித்த சொத்துப்பட்டியல் எனத் தகவல் வெளியானதன் பின்னணியில் கிருஷ்ணப்பிரியா தரப்பினர் உள்ளனர். நவம்பர் 9, 2017-ல் கிருஷ்ணப்பிரியாவின் இல்லத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது. அதே காலகட்டத்தில் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் உட்பட சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலரையும் ஐ.டி அதிகாரிகள் சோதனைக்குள்ளாக்கினர். விவேக் வீட்டில் 3 நாள்களுக்கும் மேலாக சோதனை நீடித்தது. ஆனாலும், சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை அவர் வெளியில் கசியவிடவில்லை. இதன்பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை ஐ.டி அதிகாரிகளின் விசாரணைக்கு சசிகலா உறவினர்கள் ஆஜராகி வருகின்றனர். மற்றவர்களை எல்லாம் 1 மணிநேரத்துக்கும் மேலாக காக்க வைத்த பிறகே அதிகாரிகள் கேள்விகளைக் கேட்பார்கள். ஆனால், கிருஷ்ணப்பிரியா தரப்பினர் உள்ளே சென்றால் 15 நிமிடங்களுக்குள் வெளியே வந்துவிடுகின்றனர். அவர்கள் மீது அதிகாரிகள் கரிசனம் காட்டுவதன் பின்னணி தெரியவில்லை" என விவரித்த மன்னார்குடி சொந்தங்கள் சிலர்,

``சொத்துப் பட்டியல் வெளியான விவகாரத்தில் விவேக் தரப்பினர் மிகுந்த வேதனையில் உள்ளனர். விரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வர உள்ள சூழலில் அவரது பெயருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும் செயலாகவே இதைப் பார்க்கிறோம். போயஸ் கார்டனில் சசிகலா இருந்த காலகட்டத்திலேயே இளவரசி குடும்பத்தில் உள்ள சிலர், ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். மிடாஸ் சாராய ஆலையில் தயாராகும் மதுபானங்களுக்கு பாட்டில் மூடி வாங்கிக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் பெரும் முறைகேடு நடந்தது. இந்தப் பணத்தில் சினிமா படங்களையும் சிலர் தயாரித்துள்ளனர்.

இந்தப் பணத்தில் ரூ.70 கோடி வரையில் ஒருவர் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. கிருஷ்ணப்பிரியாவின் கணவர் கார்த்திகேயன்தான் மிடாஸ் நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கிறார். இந்த ஆலையின் கணக்கு வழக்குகளை விவாரித்தாலே பல முறைகேடுகள் வெளியில் வரும். இன்று வரையில் மிடாஸ் சாராய ஆலை தொடர்பாக, வருமானவரித்துறை அதிகாரிகள் எந்தவித நெருக்கடியையும் கொடுக்கவில்லை. இவையெல்லாம் குடும்பத்தினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றவர்கள்,

பரப்பன அக்ரஹாரா
பரப்பன அக்ரஹாரா

``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சியை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இந்த விவகாரத்தில் தினகரன் தரப்பினரைக் கடுமையாகச் சாடினார் கிருஷ்ணப்பிரியா. இதுகுறித்து சசிகலா கவனத்துக்குத் தகவலைக் கொண்டு சென்றார் தினகரன். அப்போதிலிருந்தே கிருஷ்ணப்பிரியாவிடம் சசிகலா பேசுவதில்லை. இப்போது சரியான நேரம் பார்த்து, மொபையில் எடுத்த போட்டோ வெளியாகிவிட்டது என்றெல்லாம் பேசுகின்றனர். இதையெல்லாம் சசிகலா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்” என்கின்றனர் கொதிப்புடன்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் கிருஷ்ணப்பிரியா தரப்பினர், ``சசிகலாவுக்கு எதிராக எந்தவித துரோகத்தையும் அவர் செய்வதற்கு வாய்ப்பில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலிருந்து சசிகலாவோடு அவர் பேசுவதில்லை என்பது உண்மைதான். சிறையிலிருந்து அவர் வெளியில் வந்ததும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார். மிடாஸ் ஆலை நிர்வாகத்தைக் கார்த்திகேயன் கவனித்து வருகிறார். அதில், கிருஷ்ணப்பிரியாவுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.

சசிகலா
சசிகலா

ஜெயா டி.வி நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் சசிகலா செய்தபோதும், இளவரசி குடும்பத்தினர் மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொத்து தொடர்பான ஆதாரம் வெளியானதற்கு வழக்கறிஞர் செந்தில்தான் காரணம். அவர் கூறியதன் பின்னணிலேயே ரெய்டு நடந்தது. தற்போதும் 15 நாளைக்கு ஒருமுறை வருமான வரித்துறை விசாரணையில் ஆஜராகி வருகிறார் கிருஷ்ணப்பிரியா. வருமானவரித்துறை அலுவலகத்தில் கரிசனம் காட்டுகின்றனர் என்ற தகவலிலும் உண்மையில்லை. அதேபோல், ரூ.1,500 கோடி சொத்து குறித்த தகவல் வெளியில் வந்ததற்கும் சசிகலா விடுதலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் அபராதம் போடுவார்கள், அவ்வளவுதான். இதனால் எந்தவித பாதிப்புகளும் வரப் போவதில்லை" என்கின்றனர்.