Published:Updated:

தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா!

சசிகலா
சசிகலா

சசிகலா இன்னும் ஒருவாரத்தில் விடுதலையாகவிருக்கும் நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தி அவருடைய உறவினர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூர் சிறையிலிருக்கும் சசிகலாவின் உடல்நிலை நலிவுற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், உடல்நிலை குறித்த செய்தியே திட்டமிட்டு பரபரப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சசிகலா தரப்பினர்.

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்
பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்

2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. ஆரம்பத்தில் அவருடைய உடல்நிலையில் சிறய தொந்தரவுகள் இருந்தன. குறிப்பாக, சர்க்கரைநோய் சசிகலாவுக்கு இருப்பதால், உணவு விஷயங்களில் கடும் கட்டுபாடுகளை மேற்கொண்டுவந்தார். இதனால், அவருக்கு வெளியிலிருந்து உணவுகள் கொண்டு வருவதற்கும் ஏற்பாடுகள் நடந்தன. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் எந்தத் தொந்தரவும் இல்லை.

தினமும் காலையிலும் மாலையிலும் அவருடைய அறையிலேயே பூஜைகளைச் செய்துவந்தார். சிறைக்குள் வாக்கிங் போவதோடு, தோட்ட வேலைகளையும் செய்துவந்தார். உடல் எடையையும் குறைத்திருக்கிறார் சசிகலா.

அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்!

கொரானா ஊரடங்கால் அவரை, கடந்த எட்டு மாதங்களாக யாரும் சந்திக்க முடியாமல் இருந்தது. ஆனால், கொரானா தளர்வுகளுக்குப் பிறகு அவருடைய உறவினர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸ் வழியாக சிறைக்குள்ளேயே அவருடன் உரையாட வாய்ப்புகள் ஏற்பட்டுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த மாதம், தினகரன் உள்ளிட்ட அவருடைய உறவுகள் சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது நன்றாகவே இருந்திருக்கிறார். குறிப்பாக, சிறைக்குள் யோகாசனம் செய்யும் வழக்கத்தை அவர் தொடர்ந்து கடைபிடித்துவருவதால், தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகத் தனது உறவுகளிடம் சொல்லியிருக்கிறார். சசிகலாவின் கண்களிலிருந்து கண்ணீர் வரும் பிரச்னை மட்டும் தொடர்ந்து இருந்திருக்கிறது.

தினகரன்
தினகரன்

இந்தநிலையில், வரும் ஜனவரி 27-ம் தேதி அன்று சசிகலாவை சிறையிலிருந்து விடுவிக்கும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. இதற்கான அறிவிப்பை கர்நாடக சிறைத்துறையும் வெளியிட்டிருக்கிறது. இந்தநிலையில், சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னும் ஒரு வாரத்தில் அவர் விடுதலையாகவிருக்கும் நிலையில், உடல்நலக் குறைவு என்கிற செய்தி வெளியாகியிருப்பது அவருடைய உறவினர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தகவலை இதுவரை பெங்களூர் சிறை நிர்வாகமும் உறுதி செய்யவில்லை. ஆனால், இந்தத் தகவல் கர்நாடக காவல்துறையிலுள்ள சில அதிகாரிகள் மூலம் அங்கிருக்கும் மீடியாக்களுக்குக் கசிந்திருக்கிறது. இதற்குப் பின்னால் வேறு ஏதும் உள் நோக்கம் இருக்குமா என்கிற சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் சசிகலா தரப்பினர். அவருக்கு ஒரு வாரமாகக் காய்ச்சல் இருந்திருக்கிறது. இந்தநிலையில், இன்று காலை சிறிய அளவில் மூச்சுத்திணறலும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதைக் காலையிலேயே அறிந்த சிறை நிர்வாகம் அங்கிருக்கும் மருத்துவர்கள் மூலம் சிகிச்சையும் அளித்திருக்கிறது.

சசிகலா
சசிகலா

சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள், ``இந்தத் தகவல் உண்மையா என்பதை இதுவரை சிறைத்துறை உறுதி செய்யவில்லை. ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது. உண்மையிலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அதைச் சிறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபரின் உறவுகளுக்குச் சொல்லியிருக்கும். சசிகலாவின் வழக்கறிஞருக்குக்கூட இந்தச் செய்தி கடைசி நேரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அது குறித்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட வேண்டும் ” என்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக காய்ச்சலில் இருந்துவந்த நிலையில் இப்போது மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருப்பதால், உடனடியாக அவருக்கு கொரானா பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறது சிறை நிர்வாகம். இந்தத் தகவல் வெளியானதும் சசிகலாவின் உறவுகளும் பெங்களூர் செல்ல ஆயத்தமாகிவருகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

முன்னதாக,மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சாதாரண வார்டிலிருந்து நள்ளிரவில் அவசரசிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். சர்க்கரை நோய், தைராய்டு, இருமல், காய்ச்சல் இருப்பதால் சசிகலாவை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

உடல்நலக்குறைவால் பரபரன அக்ரஹார சிறை வளாக மருத்துவமனையில் சசிகலாவுக்கு முதலில் சிகிச்சை தரப்பட்டது

அடுத்த கட்டுரைக்கு