Published:Updated:

`எடப்பாடிக்கு ஃபிளக்ஸ்; அப்செட்டில் சசிகலா?' - மனக்கசப்பை உண்டாக்கியதா திருவாரூர் திருமண விழா?!

திருமணத்தில் சசிகலா

`திவாகரனாவது சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சையான வரவேற்பைக் கொடுத்திருக்கலாம். ஆனால், செய்யத் தவறிவிட்டார். அந்த வருத்தத்தில் சசிகலா திவாகரனிடம் பேசவில்லை, சற்று இறுக்கமாகவே இருந்தார்.'

Published:Updated:

`எடப்பாடிக்கு ஃபிளக்ஸ்; அப்செட்டில் சசிகலா?' - மனக்கசப்பை உண்டாக்கியதா திருவாரூர் திருமண விழா?!

`திவாகரனாவது சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சையான வரவேற்பைக் கொடுத்திருக்கலாம். ஆனால், செய்யத் தவறிவிட்டார். அந்த வருத்தத்தில் சசிகலா திவாகரனிடம் பேசவில்லை, சற்று இறுக்கமாகவே இருந்தார்.'

திருமணத்தில் சசிகலா

சசிகலா உறவினரும், டி.டி.வி.தினகரனின் சகலையுமான டாக்டர் சிவக்குமார் மகன் டாக்டர் கார்த்திக், அ.தி.மு.க-வின் திருவாரூர் நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மகள் டாக்டர் பூஜாஸ்ரீ திருமணம் திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்ட அம்மா அரங்கில் நடைபெற்றது. தன் மனைவி அனுராதாவின் தங்கையான பிரபாவின் மகன் திருமணத்தில் டி.டி.வி.தினகரன் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டாக்டர் சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் சசிகலா
டாக்டர் சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் சசிகலா

மனக்கசப்புகளை மறந்து சமீபகாலமாக நெருக்கமாக இருந்த சசிகலாவும், அவருடைய தம்பி திவாகரனும்கூட திருமண விழாவில் சரியாக முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவில்லை என்கிறார்கள். திருமணத்துக்கு வந்திருந்த பலரும் இவர்கள் பேசிக்கொள்ளாதது குறித்து அசைபோட்டதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம். ``மணமகள் டாக்டர் பூஜாஸ்ரீயின் தந்தை ஆர்.டி.மூர்த்தி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் தீவிரமான ஆதரவாளர். திருமண அழைப்பிதழில் தன் குடும்பத்தினர் பெயருடன் சோழமண்டல தளபதி, டெல்டாவின் பாதுகாவலர் எனக் குறிப்பிட்டு ஆர்.காமராஜ் பெயரையும் சேர்த்து அச்சடித்திருந்தார்.

இதிலிருந்தே ஆர்.காமராஜுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறியலாம். இதேபோல் திருமணத்துக்காக வைக்கப்பட்ட ஃபிளக்ஸ்களில் எடப்பாடி பழனிசாமி, ஆர்.காமராஜ் படங்கள் பிரதானமாக இடம்பெற்றிருந்தன. தன்னால் இரு தரப்புக்கும் எந்தச் சங்கடமும் வந்துவிடக் கூடாது என நினைத்த தினகரன், `என்னை வரவேற்று ஓர் இடத்தில்கூட ஃபிளக்ஸ் வைக்கக் கூடாது' என அ.ம.மு.க-வினருக்குக் கட்டளையிட்டாராம்.

எடப்பாடி படத்துடன் வைக்கப்பட்ட ஃபிளக்ஸ்
எடப்பாடி படத்துடன் வைக்கப்பட்ட ஃபிளக்ஸ்

என்றாலும் தினகரன் கலந்துகொள்ளவில்லை. சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகக் கூறிவிட்டு, தஞ்சாவூருக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள். எனினும் விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த சசிகலா, எடப்பாடி பழனிசாமி போட்டோவை ஃபிளக்ஸில் பார்த்ததுமே டென்ஷனாகிவிட்டாராம். உடனே டாக்டர் சிவக்குமார், `திருமண ஏற்பாட்டை பெண் வீட்டார் செய்தனர்' எனச் சமாளித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் சசிகலா அதை முழுமனதாக ஏற்கவில்லையாம்.

இதற்கான நிச்சயதார்த்த விழா நடைபெற்றபோது சசிகலா, திவாகரன் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். தினகரன் மட்டும் யாருடன் பேசாமல் தனித்திருந்தார். ஆனால், இன்றைக்கு சசிகலா, திவாகரன் ஆகிய இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தும், முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவில்லை. சம்பிரதாயமாகக்கூட இருவரும் சிரித்துக்கொள்ளவில்லை. `நிச்சயதார்த்தத்தின்போது இருந்த உறவு இப்போதில்லையே ஏன்?' என உறவினர்கள் பலரும் பேசிக்கொண்டனர்.

சசிகலா, திவாகரன்
சசிகலா, திவாகரன்

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் ஆர்.காமராஜ் மகன் திருமணம் நடைபெற்றது. இதில் திவாகரன் சார்பில் அவருடைய மகன் ஜெய்ஆனந்த் கலந்துகொண்டார். ஆர்.காமராஜும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். திவாகரன், ஆர்.காமராஜ் , எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் திவாகரன்மீது சசிகலா கோபம் அடைந்திருக்கலாம். தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவுக்கு வரவேற்பளிக்க டாக்டர் சிவக்குமாரும், மணமகளின் தந்தையும் தவறிவிட்டனர்.

திவாகரனாவது சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சையான ஏற்பாட்டைச் செய்திருக்கலாம். ஆனால், செய்யத் தவறிவிட்டார். அந்த வருத்தத்தில் சசிகலா திவாகரனிடம் பேசவில்லை, சற்று இறுக்கமாகவே அவர் இருந்தார் என்கிறார்கள். அத்துடன் சசிகலா, இளவரசி மகன் விவேக் ஜெயராமன் சொல்வதை மட்டுமே செய்கிறார். தன் மகன் ஜெய்ஆனந்தை முன்னிறுத்த நினைக்கும் திவாகரனுக்கு இது பிடிக்கவில்லை. இதனால் திவாகரன் சசிகலாவுக்கிடையே மீண்டும் லேசான மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலா
சசிகலா

இதுவும் இருவரும் பேசிக்கொள்ளாததற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. அதற்கேற்றாற்போல் சசிகலா, இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, விவேக் ஜெயராமனிடம் மட்டும் சிரித்தபடி நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தார். திருமணத்துக்குச் சென்றால் சசிகலா இருப்பார் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்பதற்காக நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டும் ஆர்.காமராஜ் கலந்துகொண்டார்” என்றனர்.

டாக்டர் சிவக்குமார் தரப்பினரோ, ``எந்தச் சலசலப்பும் இல்லாம சுபமாக திருமண விழா நடந்து முடிந்தது. சென்னையில் 29-ம் தேதி நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நாங்கள் செய்கிறோம். அது இன்னும் சிறப்பாக இருக்கும்” எனப் பேசியிருக்கின்றனர்.