Published:Updated:

7 நாள் சவால்! - கில்லி யார்? டெல்லி வெயிட்டிங்

சசிகலா - எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியின் அரசியலைப் பார்த்து ‘பணம் பத்தும் செய்யும்’ என்பதை சசிகலா உணர்ந்துவிட்டார். அதனால், அதே பாணியில் எடப்பாடிக்கு எதிரான ஆட்டத்தை அவர் ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டார்

சசிகலா ஜுரம் அ.தி.மு.க-வை ஆட்டுவிக்க ஆரம்பித்திருக்கிறது. கோலாகலமாகத் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தையும், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடத்தையும் அவசரகோலத்தில் மூடியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. எஞ்சியிருக்கும் பணிகளை முடிப்பதற்காகத்தான் நினைவிடங்கள் மூடப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கமளித்தாலும், சசிகலா வருகையின் அச்சுறுத்தலே பிரதான காரணமாக அ.தி.மு.க வட்டாரங்களில் முணுமுணுக்கிறார்கள். பெங்களூரில் ஓய்வெடுக்கும் சசிகலா, பிப்ரவரி 8-ம் தேதி சென்னைக்கு வருகிறார். பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இடைப்பட்ட இந்த ஏழு நாள்கள்தான் எடப்பாடிக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. கட்சியைத் தன் கட்டுப்பாட்டில்வைத்து, கூட்டணியையும் கட்டமைத்து, டெல்லிக்குத் தன் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் எடப்பாடி. எதிர்முனையில் கட்சியைக் கைப்பற்ற சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதாகச் சொல்லும் சசிகலா தரப்புக்கும் இந்த ஏழு நாள்கள் சவாலான காலகட்டமே. இருவரில் சாதிக்கப்போவது யார்?

பெங்களூரில் இருந்துகொண்டே சத்தமில்லாமல் சில அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகிறார் சசிகலா. சசிகலாவுடன் தற்போது அவரின் உறவினர்கள் சிலர் மட்டும் இருக்கிறார்கள். கட்சியினர் யாரையும் அவர் நேரடியாகச் சந்திக்கவில்லை. தனது உதவியாளர்கள் மூலமாக, தனக்கு விசுவாசமாக இருந்த சிலரை மட்டும் தொடர்புகொண்டு பேசிவருகிறார். இந்தநிலையில்தான், சசிகலாவின் காய்நகர்த்தல்கள் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம்.

“எடப்பாடியின் அரசியலைப் பார்த்து ‘பணம் பத்தும் செய்யும்’ என்பதை சசிகலா உணர்ந்துவிட்டார். அதனால், அதே பாணியில் எடப்பாடிக்கு எதிரான ஆட்டத்தை அவர் ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டார். இதற்குத் தேவையான பல ‘வெயிட்டான’ விஷயங்கள் வெளிநாடுகளில் தயாராகிவருகின்றன. அவை எந்நேரமும் லேண்ட் ஆகக்கூடும். பலருக்கும் கவர்ச்சிகரமான தகவல்கள் பாஸ் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கணிசமான எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தன்னைச் சந்தித்தால் மட்டுமே, கட்சி நிர்வாகிகள் பலரும் நம்பிக்கையுடன் தன்னை அணுகுவார்கள் என்று சசிகலா நினைக்கிறார்.

இன்னொரு பக்கம், அமைச்சர்கள் பலருக்கும் எடப்பாடி மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த ஆட்சியில், எடப்பாடி பழனிசாமி மற்றும் இரண்டு அமைச்சர்களைத் தவிர, வேறு யாரும் பெரிதாக லாபம் அடையவில்லை. ஜனவரி 29-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர்கள் சிலர், ரகசியக் கூட்டம் ஒன்றை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டில் நடத்தியிருக்கிறார்கள். அப்போது கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர், ‘சசிகலா இருந்தவரைக்கும் நாம கொடுக்கறதுல 30 சதவிகிதத்தை நமக்கு திருப்பிக் கொடுப்பாங்க. இவர் மொத்தத்தையும் நமக்குக் கிடைக்காத மாதிரி செஞ்சிடுறாரு. கடந்த ஒரு வருஷமா குறிப்பிட்ட தொகைக்கு மேலிருக்கிற எல்லா துறைகளோட டெண்டர்களையும் அவர் ஆபீஸ்லயே பேசி முடிச்சுடுறாங்க. கையெழுத்துக்காக மட்டும்தான் நம்மகிட்ட வர்றாங்க. கேள்வி கேட்டா, ‘தேர்தல் செலவை நாங்கதானே பார்க்கப்போறோம்’னு சொல்றாங்க. இல்லைன்னா, ‘அதெல்லாம் டெல்லி மேலிடத்து உத்தரவுங்க... அதை மீற முடியாது’ன்னு சொல்லிடுறாங்க. இதெல்லாம் நல்லதா தெரியலை... இதுக்கு சசிகலாவே பரவாயில்லை’ என்று பொங்கியிருக்கிறார். இதை அந்தக் கூட்டத்திலிருந்த மற்ற அமைச்சர்களும் பெரிதாகத் தலையாட்டி ஆமோதித்திருக்கிறார்கள்.

7 நாள் சவால்! - கில்லி யார்? டெல்லி வெயிட்டிங்

கொங்கு வெடி... டார்கெட் 20!

இப்படி அமைச்சர்கள் பலரது பல்ஸ் தெரிந்திருப்பதால், சசிகலா தெம்பாக இருக்கிறாராம். குறிப்பாக துணைச் செயலாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட வெகு சிலர் மட்டுமே தன்னை எதிர்த்து அதிகாரபூர்வமாகப் பேசுகிறார்கள், மற்றவர்கள் வாயைத் திறப்பதில்லை என்பது சசிகலாவுக்கு உற்சாகத்தை எகிறச் செய்திருக்கிறது.

சசிகலா சென்னைக்கு வந்த பிறகு, 20 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவரைச் சந்தித்து பேச முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் சில கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்களும் அடக்கம். அமைச்சர்கள் ஐந்து பேர் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் வரலாம். தென் மாவட்டங்களும் டெல்டாவும் மட்டுமே சசிகலாவின் கோட்டை போன்றதொரு பிம்பம் ஏற்பட்டுள்ளது. அது விரைவில் உடைக்கப்படும். முதல் கலகமே கொங்கு மண்டலத்திலிருந்துதான் கிளம்பப்போகிறது. பழனிசாமியின் ஏரியாவிலேயே சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் உயர்ந்தால், அதை எதிர்கொள்வது எடப்பாடி அண்ட் கோவுக்கு கடினம். இதற்கான பொறுப்பை தனக்கு நம்பிக்கையான சிலரிடம் சசிகலா ஒப்படைத்திருக்கிறார்” என்றனர் விரிவாக.

பிரதமர் மோடி, வரும் பிப்ரவரி 14-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். அதற்குள்ளாக கட்சிக்குள் பிரளயத்தை ஏற்படுத்த சசிகலா தரப்பு ஆயத்தமாகிறது. இதற்கு அ.தி.மு.க-வின் தலைமை பொறுப்பிலுள்ள ஒருவரைத்தான் அவர்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். அவர் முதலில் தங்கள் பக்கம் வந்தால், தயக்கத்திலிருக்கும் பலரும் வந்துவிடுவார்கள் என்று நம்புகிறது சசிகலா முகாம். பிப்ரவரி 3-ம் தேதி இரவு தன் உறவினர்கள் சிலரிடம், “ஒரு தீப்பொறிதான் நமக்கு தேவைப்படுது. அதுவும் சீக்கிரமே பத்திக்கும். பிப்ரவரி 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்னைக்கு நாம சென்னைக்குப் போறது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதனால பிப்ரவரி 8-ம் தேதிக்கு, பயணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று சொல்லியிருக்கிறார் சசிகலா. அதன் பிறகே பயணத் தேதி மாற்றப்பட்டதாம்.

7 நாள் சவால்! - கில்லி யார்? டெல்லி வெயிட்டிங்

ஏழு நாள் சவால்!

பிரதமர் மோடி வருவதற்குள்ளாகக் கட்சி கலகலத்துப் போய்விடக் கூடாது என்று ஒவ்வொரு நாளையும் கட்சியினரை பொத்திவைத்து ‘பாதுகாப்பாக’ கடத்துவதற்குள் படாதபாடு படுகிறார் பழனிசாமி. அதன் வெளிப்பாடுதான் நினைவிடங்கள் மூடப்படுவதும், போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்குப் பாதுகாப்பை அதிகரித்திருப்பதும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

இது குறித்து அ.தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “பிரதமர் வருவதற்குள்ளாகக் கூட்டணியை இறுதி செய்து, தனது ஆளுமையை நிரூபிக்க பகீரத பிரயத்தனம் செய்கிறார் முதல்வர். இதன் வெளிப்பாடாகத்தான் அவசர அவசரமாக பா.ம.க நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ராமதாஸின் உள் இட ஒதுக்கீடு கோரிக்கையும் சீரியஸாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 32 சீட்கள் வரை பா.ம.க-வுக்கு அளிப்பதாகக் கூறி, கூட்டணியை உறுதி செய்யுமாறு பேச்சுவார்த்தைக்குச் சென்ற அமைச்சர்களிடம் கூறியிருக்கிறார் எடப்பாடி. இந்த அவசரம், பதற்றமெல்லாம் சசிகலாவால் வந்ததுதான். பிப்ரவரி 14-ம் தேதி பிரதமருடன் மேடையில் முதல்வர் நிற்கும்போது, அ.தி.மு.க அவர் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனாலோ... கூட்டணி அமையாமல் போனாலோ அவரது முதல்வர் வேட்பாளர் தகுதிக்கும் தலைமைப் பண்புக்கும் சேர்த்தே ஆபத்து வந்துவிடும்” என்றவர்கள் அதற்கு உதாரணமாக சமீபத்திய சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்கள்...

ஆளுமையைத் தக்கவைப்பாரா எடப்பாடி?

“ஜனவரி 14-ம் தேதி துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ‘ஆளுமைமிக்க தலைவரான ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆட்சியைத் தக்கவைத்திருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையைக் காட்டுகிறது. இது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது’ என்று புகழாரம் சூட்டினார். அந்தப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணியிடம், ‘பிரதமரோட நான் நிக்கும்போது, கட்சியும் ஆட்சியும் என் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தால் போதுங்க. அதுக்குப் பிறகு டெல்லியைக் காட்டி பயமுறுத்தியே, மத்தவங்களை நம்ம பக்கம் கொண்டு வந்துடலாம். அதுக்குப் பிறகு சசிகலா பக்கம் போறதுக்கு பயப்படுவாங்க’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ஆக, சசிகலா சென்னை வருவதற்கும் பிரதமர் தமிழகம் வருவதற்குமான இடைப்பட்ட ஏழு நாள்களும் பழனிசாமிக்கு அக்னி பரீட்சைதான். அதை வெற்றிகரமாக அவர் கடந்துவிட்டாலே, பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்துவிடும்” என்றார்கள்.

7 நாள் சவால்! - கில்லி யார்? டெல்லி வெயிட்டிங்

இதுவரை கட்சியில் சிறு சிறு ஆட்களே சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டிவருகின்றனர். ஒன்றியம், பேரூர், வட்டம், பகுதி பொறுப்புகளிலுள்ள நிர்வாகிகள் யாரும் சசிகலாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இதுவும் ஒருவகையில் பழனிசாமிக்கு தெம்பூட்டியிருக்கிறது. இதேநிலை அடுத்த ஏழு நாள்களும் தொடர்ந்தாலே பிரதமர் முன்னிலையில் தன் ஆளுமையை நிரூபித்துவிடலாம் என்று நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான், ‘சசிகலாவை ஆதரித்து யார் என்ன செய்தாலும் உடனடியாகப் பதவி பறிக்கப்படும். அ.தி.மு.க-வின் கொடியையோ, பெயரையோ சசிகலா தமிழகத்துக்குள் பயன்படுத்தினால், மாவட்டவாரியாக கண்டன அறிக்கை வெளியிட வேண்டும்’ என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்.

அதன் அடிப்படையில்தான் சசிகலாவைச் சந்திக்க முயன்ற புகாரில் கர்நாடக அ.தி.மு.க மாநிலச் செயலாளர் யுவராஜ் உட்பட இதுவரை மூன்று பேர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 4-ம் தேதி மாலை அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தியதாக சசிகலா மீது டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், அந்தப் புகாரில், ‘சசிகலா சென்னை திரும்பும்போது அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்தக் கூடாது’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த ஆட்டமெல்லாம் தேர்தல் நன்னடத்தை விதிகள் அறிவிக்கப்படும் வரைதான்... அதன் பிறகு பழனிசாமியின் அதிகாரமெல்லாம் காணாமல்போய்விடும். அப்போது கட்சியினர் இவர்களுக்கு எப்படிக் கட்டுப்படுவார்கள்?” என்று கிண்டலடிக்கிறது சசிகலா முகாம்.

எடப்பாடி - சசிகலா மோதலில், இப்போதைக்கு மூக்கை நுழைக்க விரும்பவில்லையாம் பா.ஜ.க. இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், “சசிகலாவைக் கட்டுப்படுத்த இப்போதைக்கு டெல்லி விரும்பவில்லை. எடப்பாடியின் மீதுள்ள ஊழல் புகார்களுக்கு இன்னும் சார்ஜ் ஷீட் எதுவும் போடவில்லை. முதற்கட்ட விசாரணை நிலையில்தான் இருக்கிறது. ஆனால், சசிகலா மீதுள்ள வருமான வரித்துறை, ஃபெரா வழக்குகள், தினகரன் மீதிருக்கும் இரட்டை இலைச் சின்னத்துக்கு பணம் கொடுத்த வழக்கு ஆகியவற்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசி தரப்பினர் டெல்லியின் கட்டுப்பாட்டை மீறினால் எளிதாகக் கைது செய்துவிடலாம். ஆனால், எடப்பாடியின் மீது உடனடியாக கைவைக்க முடியாது. இதனால்தான், சசிகலாவை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது டெல்லி. இவர்கள் இருவருக்குமான சண்டையில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள டெல்லி ரெடி” என்றார்.

ஏழு நாள் சவாலை வென்று, கில்லி யார் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறது டெல்லி!