Published:Updated:

`2021 ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை!’ - ஆர்.டி.ஐ கேள்விக்கு பெங்களூரு சிறை பதில்

சசிகலா
சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்துவருகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்துவருகிறார். இவர் தமிழக அரசியலில் பேசுபொருளாக இருப்பதால், அவரது விடுதலை குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுவதுண்டு. அது குறித்த தகவல்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின்கீழ் பெறப்பட்டு, ஊடகங்களில் வெளியாகி விவாதத்தைக் கிளப்புவதுண்டு. இதைத் தவிர்ப்பதற்காக சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் தன்னைப் பற்றி தனிப்பட்ட தகவல்கள் எதையும் கொடுக்கக் கூடாது என்று விண்ணப்பித்திருந்தார். ஆனால், பெங்களூரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி, அதை முறியடித்து சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்ற தகவலைப் பெற்றிருக்கிறார்.

ஆர்.டி.ஐ பதில்
ஆர்.டி.ஐ பதில்

இது பற்றி பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தியிடம் கேட்டதற்கு, ``சசிகலா தன்னைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை கொடுக்கக் கூடாது என்று விண்ணப்பம் செய்ததையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை எனக்குத் தகவல் கொடுக்க மறுத்தது. அதையடுத்து சிறைத்துறை ஆணையத்தில் என்னுடைய வாதத்தை முன்வைத்தேன்.

`சசிகலாவின் ஆதார் கார்டு, பேன் கார்டு, சொத்து விவரம், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களைக் கேட்பது அவருடைய தனிப்பட்ட விஷயமாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அவர் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருப்பிடம் அனைத்தும் நம்முடைய வரிப் பணத்தில் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரைப் பற்றிய பொதுவான தகவல்கள் கொடுக்கக் கூடாது என்பது முறையானதல்ல’ என்று வாதிட்டேன். அதையடுத்தே, `சசிகலா எப்போது விடுதலை ஆவார்?’ உள்ளிட்ட என்னுடைய கேள்விகளுக்கு சிறைத்துறை பதிலளித்திருக்கிறது.

நரசிம்மமூர்த்தி
நரசிம்மமூர்த்தி

`சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது. அவர் கடந்த 15.2.2017-ம் தேதியிலிருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்துவருகிறார். 14.2.2021-ம் தேதியோடு நான்கு ஆண்டுகள் முடிவு பெறுகிறது. இதற்கிடையில் 6.10.2017 முதல் 12.10.2017 என ஐந்து நாள்களும், 20.3.2018 முதல் 31.3.2018 என 12 நாள்களும் பரோலில் இருமுறை 17 நாள்கள் வெளியே வந்திருக்கிறார்.

`ஆர்.டி.ஐ-யில் என்னைப் பற்றிய தகவல்களை வழங்கக் கூடாது!’- கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

பரோல் நாள்களைச் சேர்த்தால் சசிகலா மார்ச் 3-2021-ல் வெளியே வரக்கூடும். ஏற்கெனவே இந்த வழக்கில் சசிகலா 35 நாள்கள் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். 2021 மார்ச் 3-ம் தேதியிலிருந்து 35 நாள்களைக் கழித்தால் 27.1.2021-ம் தேதி விடுதலையாகி வெளியே வருவார். ஊழல் வழக்கில் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு ஒரு நாள்கூட விடுமுறை இல்லை’ என சிறைத்துறை தெளிவாகத் தெரிவித்திருக்கிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு