Published:Updated:

“கொரோனா தணிந்ததும் சின்னம்மா வெளியே வருவார்!”

சசிகலா கோஷ்டியினர் ஆருடம்

பிரீமியம் ஸ்டோரி
இரட்டை இலை சின்னம் உரிமைக் கோரல் தொடர்பான வழக்கில் சசிகலா குறை நிவர்த்தி மனுத்தாக்கல் செய்யப்போகிறார் என்றும், கொரோனா பிரச்னை தணிந்ததும் அவர் சிறையிலிருந்து வெளியே வருவார் என்றும் அதிரடி கிளப்பிக்கொண்டிருக்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள்.

அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மத்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை அடுத்து, அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் சசிகலா. இந்த வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என அவர் பெரிதும் நம்பினார். ஆனால், எடப்பாடி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதின்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சீராய்வு மனுவை தாக்கல் செய்தார் சசிகலா. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வீடியோ கான்ஃபிரன்ஸில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் சசிகலாவின் மனு நிராகரிக்கப்பட்டது. இதை அறிந்த சசிகலா, அதிர்ந்துபோனார்.

சசிகலாவுக்கு சாதகமாக வந்திருந்தால், இதற்கு இடைப்பட்ட தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்த எடப்பாடி அணியினர் சட்டச் சிக்கலுக்கு ஆளாக நேரிட்டிருக்கும். ‘நல்லவேளை... அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று உற்சாகத்தில் இருக்கிறது எடப்பாடி தரப்பு. சசிகலா தரப்பில் இந்த விவகாரத்தை விடுவதாகத் தெரியவில்லை. ‘உச்ச நீதிமன்றத்தில் குறை நிவர்த்தி மனு செய்யப்போகிறார்’ என்று சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி தரப்பினர் கொஞ்சம் ஆடித்தான்போயிருக் கின்றனர்.

“கொரோனா தணிந்ததும் சின்னம்மா வெளியே வருவார்!”

இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் பேசினோம். ‘‘இரட்டை இலை சின்னத்தை, பொதுச்செயலாளரால் மட்டும்தான் யாருக்கும் ஒதுக்க முடியும். அப்படியிருக்க, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைகோரி மதுசூதனன், ஓ.பி.எஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் சரிவர பரிசீலிக்கவில்லை. அடுத்ததாக டெல்லி உயர் நீதிமன்றமும் ஆணையம் சொன்ன முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, அட்மிஷனுக்காக வந்த நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே, உரிய ஆவணங்களைத் தாக்கல்செய்து, ‘எங்கள் கோரிக்கையை சீராய்வு செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கேட்டிருந்தோம். ஆனால், எங்கள் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிட்டது. இருந்தாலும், நாங்கள் விடப்போவதில்லை. விரைவில் குறை நிவர்த்தி மனுவை தாக்கல் செய்யவிருக்கிறோம். ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்கும். அப்போது எங்கள் கோரிக்கைளை பரிவுடன் கவனித்து நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்கிற அடிப்படையில் சசிகலா தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில இருக்கிறது. ‘2017-ம் வருடம் செப்டம்பரில் கூடிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது. அ.தி.மு.க-வில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது’ என்பதை வலியுறுத்தி சசிகலா தொடர்ந்துள்ள அந்த சிவில் வழக்கில் வரக்கூடிய தீர்ப்புதான் பொதுச் செயலாளர் பதவியின் அதிகாரத்தை உறுதிசெய்யும். அந்த வழக்கில் நிச்சயம் சசிகலாவுக்கு சாதகமான தீர்ப்பு வரத்தான்போகிறது” என்றார் நம்பிக்கையுடன்.

சசிகலா
சசிகலா

இதுகுறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசியபோது, ‘‘உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஆரம்பத்திலேயே எப்படி தள்ளுபடியானதோ, அதுபோல குறை நிவர்த்தி மனுவும் தள்ளுபடியாகும். சட்டப்படி அதுவே இறுதியாகவும் இருக்கும்’’ என்றார்.

“சசிகலா வெளியில் வரப்போவதாக பேச்சு ஓடுகிறதே?” என்று சசிகலா ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டோம். ‘‘பெங்களூரு சிறைச்சாலையில் இருக்கும் சின்னம்மா, மார்ச் கடைசி வாரத்தில் பரோலில் சென்னை வர ரெடியானார். அவரை அழைத்து வர சென்னையிலிருந்து ஜெயலலிதா பயன்படுத்திய கார் பெங்களூரு சென்றது. அந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத வகையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுவிட்டது. அதனால், சின்னம்மாவால் வெளியே வர முடியவில்லை. இதையடுத்து, ‘சசிகலாவை அவரது பெங்களூரு வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கேட்க, வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால் சின்னம்மாவோ, ‘ஊரடங்கு நேரத்தில் நான் அங்கே வந்து என்ன செய்யப்போகிறேன்?’ என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.

கொரோனா பரவல் தணிந்ததும் ஜூன் மாதத்தில் சின்னம்மா வெளியே வரப்போகிறார். சிறைச்சாலை சட்ட சம்பிரதாயப்படிதான் இதுவும் நடக்கப்போகிறது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகத்தான் அவர் உள்ளே போனார். திரும்பி வரும்போதும் அவர் அப்படியேதான் வரப்போகிறார். சசிகலாதான் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர். இதை யாராலும் மாற்ற முடியாது’’ என்றார்கள்.

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு